Header Ads



சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள கப்பலை, அகற்றாவிட்டால் இலங்கை பொருளாதாரத்தில் பாதிப்பு


சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ள பாரிய கொள்கலன் கப்பலை, உடனடியாக அங்கிருந்து அகற்ற முடியாமல்போனால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சுயெஸ் கால்வாயில் கப்பல் தரைதட்டியுள்ளமை காரணமாக, தற்போதே சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது.

இது, உலக பொருளாதாரத்திற்கும், தாக்கம் ஏற்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, கொழும்பு கப்பல்துறை சங்கத்தின், பிரதான நிறைவேற்று பணிப்பாளர் ரொஹான் மாசக்கோரால இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி பொருட்களுடன் சென்ற கப்பல்கள் தற்போது சுயெஸ் கால்வாயிற்கு உள்நுழையும் பகுதியில் நான்கு நாட்களாக தரித்துள்ளன.

எதிர்வரும் 48 மணி நேரத்தில் இந்த சிக்கல் நிலை தீர்க்கப்படாவிட்டால் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியேற்படும் என அவர் தெரிவித்தார்.

அதேநேரம், கேப் முனையின் ஊடாக பயணிப்பதற்கான தீர்மானத்தை கப்பல் நிறுவனங்கள் எடுத்தால், குறித்த நாடுகளை சென்றடைய மேலும் 7 நாட்கள் வரை காலதாமதமாகும்.

அவ்வாறெனில், பொருளாதார பாதிப்பு ஏற்படும் என கொழும்பு கப்பல்துறை சங்கத்தின், பிரதான நிறைவேற்று பணிப்பாளர் ரொஹான் மாசக்கோரால தெரிவித்துள்ளார்.

400 மீற்றம் நீளமும், 59 மீற்றர் அகலமும் உடைய குறித்த கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை, சீனாவிலிருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த நிலையில், சுயெஸ் கால்வாயில் தரைதட்டியது.

தாய்வானின் எவர் கிறீன் மெறைன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான, எவர் கிவன் என்ற அந்தக் கப்பல், 20 ஆயிரம் கொள்கலன்களை தாங்கிச் சென்றுள்ளது.

கப்பலின் எடை இரண்டு இலட்சம் டன்னாகும்.

உலக கொள்கலன்களில், 30 சதவீதத்தைக் கையாளும், 193 மீற்றர் நீளமான சுயெஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கொள்கலன் வர்த்தக கடல் மார்க்கமாக கூறப்படுகிறது.

எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாயான சுயெஸ் கால்வாய், மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கிறது.

1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மானப் பணிகள், 1869 ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது.

ஆசியாவிலிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரையாக கடல்வழி பயணிக்கும் கப்பல்களின் பயணங்களை இலகுவாக்கும் நோக்கில் சுயெஸ் காலவாய் உருவாக்கப்பட்டது.

இந்தக் கால்வாய் உருவாக்கப்பட்டிருக்காவிட்டால், கப்பல்கள் தென்னாபிரிக்க ஊடாக 12 நாட்களாக, 9 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

இந்தக் கால்வாயில் கப்பல் சிக்கியுள்ளமையினால், தற்போதுவரை சுமார் 200 கப்பல்கள்கள் கடலில் சிக்கியுள்ளன.

சமுத்திரத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய கப்பல் நெரிசல் நிலை இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாரிய கொள்கலன் கப்பல், சுயெஸ் கால்வாயில் தரைதட்டியுள்ளதன் காரணமாக, சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளதாக, வர்த்தக கப்பல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நாள் ஒன்றிற்கு 9.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சரக்குகள் உரிய துறைமுகங்களை சென்றடைய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலை அங்கிருந்து அகற்றி, கப்பல் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர சில வாரங்கள் செல்லும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

- Hiru -


No comments

Powered by Blogger.