Header Ads



"முஸ்லிம்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல், என்பது கற்பனை நாடகம்"


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

முஸ்லிம்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பது ஒரு கற்பனை நாடகமே அன்றி எந்த வித உண்மையும் இல்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான  கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். மஹ்தி தெரிவித்தார்.

இன்று(16) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது 

அண்மைக் காலங்களில் இந் நாட்டிலே முஸ்லிம்களை மத பயங்கரவாதிகள் என்றும் அடிப்படை வாதிகள் என்றும் முஸ்லீம்களால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் சில கடும்போக்காளர்களும் சில அரசியல் வாதிகளும் கற்பனை உருவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனடிப்படையில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்க்கா ஆடையை தடைசெய்தல், மதரஸாக்களை தடை செய்தல் போன்ற விடயங்களை பூதாகரமாக்கி பெரும்பான்மை மக்களிடமிருந்து முஸ்லிம்களை தூரமாக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறனர். 

புர்க்கா ஆடை அணிந்தவர்களால் இதுவரை இந்த நாட்டுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் ஏற்படுத்தப்பட்டிருக்க வில்லை. அதேபோன்று மதரசாக்களில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

அல் குர்ஆனினால் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது என்றெல்லாம் வீணாக குற்றம் சுமத்தப்படுகிறது.

சஹ்ரான் என்ற தற்கொலையாளி யாரோ ஒருவருக்கு தரகராக நின்று நடத்திய தாக்குதலை முஸ்லிம் சமூகத்தின் மீது பலி சுமத்தி முஸ்லிம்களது பொருளாதாரம் உயிர்கள், சொத்துக்கள் என பல அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.

இந்தத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போன்றே குருணாகலையில் வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டு, கருத்தடை மாத்திரை கலந்த கொத்து ரொட்டி, கண்டி திகன கலவரம் போன்ற நிகழ்வுகளில் கூட முஸ்லிம்கள் வீணாக குற்றம் சுமத்தப்பட்ட னர். இவை அனைத்தும் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப் பட்ட கசப்பான வேதனையான  சம்பவங்களாகும்.

நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டிய அரசியல் தலைமைகள் இவ்வாறான அழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு சமூகத்தின் மீது வீணாணன பழியை சுமத்தி அரசியல் இலாபத்தையே காண முயற்சிக்கின்றார்கள்.

இவ்வாறானவர்களின் விடயங்களில் ஆட்சியாளர்களும் பெரும்பான்மை பௌத்த மக்களும் கவனம் செலுத்துவதோடு இவ்வாறான போலி நாடகங்களை அரங்கேற்றி இலாபம்  அடைய முயற்சிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது அவதானம் செலுத்தி தடை செய்வதோடு  இந்நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்புவதற்கு இன் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.