Header Ads



இஸ்லாமிய உலகின் மிகப்பெரும், அறிஞர் இன்று மரணமடைந்தார்


- அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர் -

சமகால இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் அறிஞராக விளங்கிய, சிரியா நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட, அல் உஸ்தாத் அலி பின் ஜமீல் அஸ் ஸாbபூனி அவர்கள் இன்று வெள்ளி (19/03/2021) காலை துருக்கி நாட்டின் யெலோவா நகரில் தனது 91ம் வயதில் மரணம் எய்தினார்கள். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).  

சமகால இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய அல் உஸ்தாத் மர்ஹூம் அலி அஸ்ஸாbபூனி (ரஹிமஹுள்ளாஹ்) அவர்கள் பற்றி  அறிந்து கொள்ளத் தவறி இருந்த, தமிழ் பேசும் உலகளாவிய முஸ்லிம் சமூகமாகிய நாம் தற்போது அவர்களது  மரணத்தின் பின்னரேனும் அவர்கள் பற்றியும், அவர்கள் உலகளாவிய முஸ்லிம் உம்மஹ்விற்கு ஆற்றியுள்ள மகத்தான சேவைகள் பற்றியும் சிறிது அறிந்து கொள்வதே கட்டுரையின் நோக்கமாகும்.

பிறப்பு, மாணவப் பருவம்:

அல் உஸ்தாத் அலி அஸ்ஸாbபூனி (ரஹிமஹுள்ளாஹ்) அவர்கள் சிரியாவின் எலப்போ (Aleppo) நகரில் 1930ம் ஆண்டு பிறந்தார்கள். 

அல் குர்ஆன் மனனம், ஷரீஆ துறைக் கற்கை போன்றவற்றை தனது சிறு பிராயத்திலும் வாலிபப் பருவத்திலும் எலப்போ நகரின் பிரபல்யமான மார்க்க அறிஞர்களாக விளங்கிய தனது தந்தை அல் உஸ்தாத் ஜமீல் அஸ்ஸாbபூனி, அல் உஸ்தாத் முஹம்மத் நஜீப் ஸிராஜ், அல் உஸ்தாத் முஹம்மத் ஸஈத் உள்ளிட்ட பலரிடம் கற்றுக் கொண்டார்கள். பின்பு உலகப் பிரபல்யம் வாய்ந்த எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் சட்டக்கலை உயர் கற்கைநெறியைப் பூர்த்தி செய்தார்கள்.  

ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும்:

சிரியாவின் முக்கிய பல்கலைக்கழகங்கள் சிலவற்றிலும் சவுதி அரேபியாவின் உலகப் புகழ் பெற்ற "உம்முல் குரா" உள்ளிட்ட இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களிலும் நீண்ட காலம்   விரிவுரையாளராகக் கடமையாற்றி இருந்த அல் உஸ்தாத் மர்ஹூம் அலி அஸ் ஸாbபூனி (ரஹிமஹுள்ளாஹ்) அவர்கள் தனது பிற்காலங்களில் மக்காவில் அமைந்துள்ள  ராbபித்ததுல் ஆலமில் இஸ்லாமியின் (Muslim World League) குர்ஆன் மற்றும் சுன்னஹ்வில் காணப்படுகின்ற அறிவியல் அதிசயங்கள் ஆணையத்தின் (Scientific Miracles Authority) தலைமை ஆலோசகராகக் கடமையாற்றி இருந்தார்கள். குறித்த காலப் பகுதியில் மக்கா நகரின் புனித ஹரம் ஷரீபில் சம காலப் பிரச்சினைகளுக்கான fபத்வா தீர்ப்புகளை வழங்குகின்ற பாட வகுப்பையும் அன்றாடம் நடாத்தி வந்துள்ளார்கள்.  

தொகுக்கப்பட்ட நூற்கள்: 

ஷரீஆத் துறையின் பல் வேறு கலைகளிலும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட, பிரபல்யமான அறிவு நூற்கள் மர்ஹூம் அலி அஸ்ஸாbபூனி (ரஹிமஹுள்ளாஹ்) அவர்களால்  தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல நூற்கள் அரபுலகில் காணப்படுகின்ற அதிகமான இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களிலும் அரபுலகிற்கு வெளியே இலங்கை இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகளின் அரபு மத்ரசாக்களிலும் பாடத்திட்டங்களில் முக்கிய நூற்களாக கற்பிக்கப்படுகின்றன. 

அத் தfப்ஸீர் (அல் குர்ஆன் வியாக்கியானக் கலை), உலூமும் குர்ஆன் (குர்ஆனின் அடிப்படை விதிகளையும், கோட்பாடுகளையும் அறிந்து கொள்ளும் கலை) ஆகியவற்றில் சமகால உலகின் முதன்மை அறிஞராக விளங்கிய உஸ்தாத் அவர்கள் குறித்த இரு துறைகளிலும் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்கள். குறித்த இரு துறைகளிலும் அவர்களால் தொகுக்கப்பட்ட 

ஸfப்வத்துத் தfபாஸீர் மற்றும் அத் திbப்யானு fபீ உலூமில் குர்ஆன் ஆகிய இரு நூற்களும் உலகப் பிரபல்யம் வாய்ந்தவையாகும். 

அவற்றிற்கு மேலதிகமாக அல் ஹதீஸ் (ஹதீஸ் கலை),   அல் மீராஸ் (அனந்தரச் சொத்துப் பங்கீடுக் கலை/ பாகப் பிரிவினைக் கலை), அல் fபிக்ஹுல் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டக்கலை), அல் அகீதஹ் (கொள்கை மற்றும் நம்பிக்கை சார் கலை) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உஸ்தாத் அவர்கள் அதி தேர்ச்சி பெற்றிருந்ததுடன் குறித்த துறைகளில் அதிகமான நூற்களையும் எழுதியுள்ளார்கள். அன்னாரின் மரணச் செய்தி அறிந்த இஸ்லாமிய உலகின்  மார்க்க, அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் தமது இரங்கல் செய்திகளைத் தெரிவித்தவத்தவண்ணம் உள்ளன. சிரியா, சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. 

அள்ளாஹ் அன்னாரின் பாரிய சேவைகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு  மேலான ஜன்னத்துல் fபிர்தெளஸை அருள்பாலிப்பானாக.

(ஆமீன்)


No comments

Powered by Blogger.