Header Ads



கிழக்கில் மற்றைய சமூகங்கள் அடைந்த வளர்ச்சியோடு, தமிழ் சமூகத்தை ஒப்பிடும் போது வலிகளை மார்பிலே சுமக்கிறது


கிழக்கு மாகாணத்தில் மற்றைய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும் போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்கள், வலிகளை மார்பிலே சுமந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக அவர்கள் இருக்கின்றதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அடிப்படை உரிமைகளான வீதி, வீடு, மலசலக்கூடம் போன்றவை எமது தமிழ் மக்களுக்கு தேவைதானா என கேட்கும் சில அரசியல்வாதிகளிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.

எங்களுக்கு உரிமை தேவை என்பது உண்மை. ஆனால் அத்தோடு அடிப்படை உரிமை என்ற விடயமும் இருக்கின்றது.

அவைதான் உணவு, உடை, உறையுள் அதுவும் எமக்கு தேவை, அதை கூட மூன்று தசாப்த கால யுத்தத்தினால் ஈழந்து நிற்கின்ற ஒரு சமூகமாக தான் எமது தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

கிராமங்கள் தன்னிறைவு அடைய வேண்டும், இன்று பலர் அரசியலுக்காக சொல்லுகின்றார்கள், நிலம் பறிபோகிறது வளம் பறிபோகிறது என்று, அப்படியானால் அந்த நிலத்தையும் வளத்தையும் பாதுகாக்க என்ன வழி என்று கேட்டுப் பாருங்கள் அவர்களுக்கே அதற்கான வழி தெரியாது.

சிந்தித்துப் பாருங்கள் ஏன் பறிபோகின்றது என்று, எல்லை கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் அந்த கிராமங்களில் இல்லை.

அவர்களுக்கு சரியான போக்குவரத்து இல்லை, சரியான சுகாதார வசதிகள் இல்லை, கல்வி வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, வீட்டு வசதி மற்றும் மலசல கூட வசதி இல்லை அப்படியானால் இவ்வளவு வசதிகளும் இல்லாமல் ஒரு எல்லை கிராம மக்கள் என்ன செய்வார்கள்.

அந்த எல்லைக் கிராமங்களை விட்டு நகரை நோக்கி அவர்கள் இடம் பெயர்வார்கள், அவர்கள் கிராமத்தில் இருந்து இடம்பெயரும் போது என்ன நடக்கும், அந்த எல்லைகளில் இருக்கும் நிலவளங்கள் பறிபோகத்தான் செய்யும்.

ஆகவே நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் பின்தங்கிய எல்லைக் கிராமங்களிலே வாழுகின்ற மக்கள் அந்த இடங்களிலே இருந்து இடம்பெயராதவாறு அவர்களுக்கு நல்ல போக்குவரத்து வசதி, நல்ல சுகாதார வசதி, நல்ல கல்வி வசதி, தொழில் சார்ந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் வராது.

கிராமங்களை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும், ஆகவே பல விமர்சனங்களையும் விசமத்தனங்களையும் தாண்டி கிராமங்களை நோக்கி அந்த மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை நாங்கள் செய்து வருகின்றோம்.

அதே போல் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் எம்மால் இயன்றளவு எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புற மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.

மாவட்டத்தில் இருக்கின்ற பாரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தொழில் இல்லா பிரச்சினை, அதற்காகவும் நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் 8000 பேருக்கு தொழில் வழங்கக் கூடிய ஆடைக் கைத்தொழிற் பூங்காவை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவில் நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மாவட்டத்தில் நிலவும் வேலையில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.