Header Ads



முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் தொடர்புபடுத்தி பேச்சு - பிரதமரிடம் முறையிட்ட எம்.பிக்கள்


- T W -

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கைத்தொழில் அமைச்சருமான விமல் வீரவங்சவின் செயற்பாடுகள் சம்பந்தமாக ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் உறவை வைத்துக்கொள்ள அரசாங்கத்தில் இருக்கும் சிலர் தயாராக இருப்பதாக வீரவங்ச, கொழும்பில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கூறியிருந்தமை, ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டைச் செய்யக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வகிக்கும் விமல் வீரவங்ச, அரசாங்கத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரவங்ச அண்மையில் வெளியிட்ட இந்த கருத்து காரணமாக அரசாங்கம் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாகக் கூறியுள்ள அவர்கள், விமல் வீரவங்ச சம்பந்தப்பட்ட குறித்த காணொளியையும் பிரதமருக்கு காண்பித்துள்ளனர்.

காணொளியைப் பார்த்த பிரதமரும் அதிர்ச்சியடைந்தாக கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள் தற்போது நடந்து வருவதாகவும், கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் பாடம் கற்றுக்கொண்டுள்ளதைக் காண முடியவில்லை எனவும் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இதனால் விமல் வீரவங்சவின் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் தீர்மானத்தை எடுக்குமாறும், அப்படியில்லை என்றால் மக்கள் மத்தியில் அரசாங்கம் அதிருப்திக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.