Header Ads



வங்கதேசத் தந்தை முஜிபர் ரஹ்மான் ஜனனதின, பங்களாதேஷ் சுதந்திர பொன்விழாவில் பிரதமர் மஹிந்த ஆற்றிய உரை


பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழாவில் பிரதமர் மஹிந்த ஆற்றிய உரை - (2021.03.19)

"பங்களாதேஷ் மக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் டாக்காவிற்கு வருகைத்தர கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்தவகையில் எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அழைப்பு விடுத்து, எமக்கு மகத்தான வரவேற்பளித்த கௌரவ பிரதமர் திருமதி. ஷெயிக் ஹசீனா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பல சவால்கள் காணப்பட்ட போதிலும், இலங்கை மக்களின் ஐக்கியத்திற்கான செய்தியுடன் நான் இன்று இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.

எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு ரீதியான உறவுகளுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளத்திலிருந்து முதல் குடியேற்றவாசிகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்ததாக பல அறிஞர்கள் நம்புகின்றனர். கி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையே சிறந்த வர்த்தக பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் நம்பப்படுகிறது. அத்துடன், 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் புதிய தேசத்துடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் இலங்கை ஒன்றாகும்.

இரண்டு வரலாற்று நிகழ்வுகளை பங்களாதேஷ் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஒன்று, பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தினம். இரண்டாவது பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா. இரண்டு நிகழ்வுகளும் கொண்டாட்டப்பட வேண்டியவையாகும்.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்கள் தனது முழு வாழ்க்கையையும் பங்களாதேஷ் மக்களுக்காகவும், அவர்களின் மொழி மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும் அர்ப்பணித்தவராவார். 1971 இல் 'பங்களாதேஷ்' என்ற புதிய தேசத்தை உருவாக்கும் வரை தனது சுதந்திரப் போராட்டத்தைத் தொடர அவர் உறுதியாக இருந்தார்.ஆனால், தனது அன்பான நாடு குறித்து கண்ட கனவுகள் நனவாகும் போது  அவர் உயிர் துறந்திருந்தமை துரதிஷ்டவசமாகும்.

1975 ஓகஸ்ட் 15 அன்று ஏற்பட்ட பேரிழப்பின் வேதனை எனக்கு புரிகிறது. அன்று, தேசம் ஒரு வீரரையும், சுதந்திர தந்தையையும் இழந்தது. அதேவேளை, ஒரு அன்பான மகள் பெற்றோரையும் உடன்பிறப்புகளையும் இழந்தாள்.

பின்னடைவுகள் காணப்பட்ட போதிலும், உங்கள் திறமையான தலைமையின் கீழ் பங்களாதேஷ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அதுவே உங்கள் மதிப்பிற்குரிய தந்தைக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாகும்.

அவரது மரபிற்கும், பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மான் அவர்களது அர்ப்பணிப்பிற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் வங்காள பல்துறையறிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஒரு கவிதையின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,

சிறைவாச மின்றி அறிவு வளர்ச்சிக்கு அந்த விடுதலை சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! 

விழித்தெழுக என் தேசம்!"

இந்த 21 ஆம் நூற்றாண்டில், ஆசியாவின் வளர்ச்சிக்கான பெரும் அபிலாஷைகளுடன், சுதந்திரத்தை அடைய நம் முன்னோர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களைப் பற்றி நமது புதிய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டும். 

சுதந்திரம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு ஒரு அண்டை நாடு என்ற ரீதியிலும் நெருங்கிய நண்பராகவும் இலங்கை பங்களாதேஷுடன் பக்கபலமாக நிற்கிறது. பாரிய சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார மாற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கை அடைதல் போன்ற எமது குறிக்கோள்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம்.

"பங்களாதேஷ் ஏராளமான வளங்களை கொண்ட நாடு. உலகின் சில நாடுகளிலேயே நம்மிடம் உள்ளது போன்ற வளம் பொருந்திய நிலங்கள் காணப்படுகின்றன" என பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார். கடல், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்கு எமது இரு நாடுகளின் புவியியல் அமைப்பு எங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றது.

வங்காள விரிகுடாவில் ஒரு "நீல பொருளாதாரத்தை" [Blue Economy]  ஊக்குவிப்பதற்கான உங்கள் திட்டம் கடல்சார் விவகாரங்கள் குறித்த எங்கள் அணுகுமுறையைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

தெற்காசியாவில் வளர்ந்துவரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக பங்களாதேஷ் கருதப்படுகிறது. இது நமது நாட்டுக்கு ஒரு முக்கியமான வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளியாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களாக நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு பரிமாற்றங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. 

விவசாயத் துறையில் பங்களாதேஷ் கண்டுள்ள பாரிய முன்னேற்றம் இலங்கையின் கவனத்திற்கு திரும்பியுள்ளது. டாக்காவில் உள்ள சார்க் விவசாய மையம் செயற்பாட்டு ரீதியில் பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பங்களாதேஷ் தொடர்ந்து நமது விவசாய நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை எளிதாக்குகிறது. இத்துறையில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்வதில் பங்களாதேஷ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் பங்களாதேஷ் மக்களை வறுமை மற்றும் இயற்கை பேரழிவுகளிலிருந்து மீட்டெடுத்த எழுச்சியூட்டும் பயணம் ஒரு வளமான தேசத்திற்கு சான்று பகர்கின்றது.

இத்தருணத்தில், பங்களாதேஷ் பிரதமருக்கும், உங்களது அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த மற்றும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்."

No comments

Powered by Blogger.