March 31, 2021

ரஞ்சன் ஒரு அப்பாவி நபர், பாவப்பட்டு வழக்கை வாபஸ் பெற்றேன் - அமைச்சர் மகிந்தானந்த (வீடியோ)


ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற ரஞ்சன் ராமநாயக்க மீது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வாபஸ் பெற்றுள்ளார்.

தற்போது சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேலும் பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அனுதாபப்பட்டு தான் இம்முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் அலுத்கமகே தெரிவித்தார்.

வீடியோ

2016 ஜூன் 21ஆம் திகதி அப்போது பிரதியமைச்சராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க, தனது உத்தியோகபூர்வ பாராளுமன்ற இல்லத்தில் வைத்து மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய கைவிடப்பட்ட டிபென்டர் வாகனம் தன்னுடையது (மஹிந்தானந்த அலுத்கமகே உடையது) என தெரிவித்திருந்தார். ஆயினும் அன்றைய தினமே விளையாட்டு இராஜாங்க அமைச்சர் அது தன்னுடையது என தெரிவித்திருந்ததாக, மஹிந்தானந்த அலுத்கமே தெரிவித்தார்.

அவரால் தெரிவிக்கப்பட்ட குறித்த அவதூறான கருத்துக்கு எதிராக ரூபா 500 மில்லியன் (ரூ. 50 கோடி) நஷ்டஈடு கோரி, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார்.

தான், முந்தைய அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட போதிலும், அதனை பொருட்படுத்தாது, 4 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாக, மஹிந்தானந்த அலுத்கமே தெரிவித்தார்.

அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க ஒரு அப்பாவி நபர், அவரை ஒரு சிலர் தங்களது இலாபத்திற்காக தவறாக வழிநடத்தியுள்ளனர். இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேலும் சிறைவாசம் அதிகரிக்கலாம். இன்றையதினம் (31) குறித்த கருத்து தொடர்பில் தாம் வருந்துவதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து நான் இவ்வழக்கை வாபஸ் பெற்றேன் என, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமே தெரிவித்தார்.

அந்த வகையில் ரஞ்சன் ராமநாயக்கவினால் மிக அதிகளவில் பாதிப்புக்குள்ளான ஒருவர் அவருக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளதாக, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமே சுட்டிக்காட்டினார்.

இதன்போது கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், தற்போது ரஞ்சன் ராமநாயக் தொடர்பில் உங்களுக்கு அனுதாபம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படுமா? எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், சாட்சியாளர்கள் 103 பேர் குறிப்பிடப்பட்ட குறித்த வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எம்.பி அவர்கள், 3 சாட்சியாளர்களை மாத்திரமே விசாரித்தார். குறித்த 103 பேரையும் விசாரணை செய்திருந்தால் ஒரு வேளை அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம். என்றார்.

ஆயினும் சுமந்திரன் எம்.பிக்கு, ரஞ்சன் ராமநாயக்கவை சிறைக்கு அனுப்பி, ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்துச் செல்வதற்கான தேவையே காணப்பட்டது. அவர் ரஞ்சன் எம்.பியை விடுதலை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. 103 சாட்சியாளர்கள் இருந்த நிலையில், 3 சாட்சியாளர்களிடம் மாத்திரம் யாரேனும் விசாரணைகளை மேற்கொள்வார்களா. தமது சாட்சியாளர்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க குற்றமிழைக்கவில்லை என நிரூபித்திருக்கலாம். ஆனால் சர்வதேசத்திடம் இதனை கொண்டு செல்வதற்காக அவரை சிறைக்கு அனுப்பியுள்ளார், என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

உண்மையில், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் தான் வருந்துவதாகவும், இது தொடர்பில் அவருக்கு ஏதாவது நியாயமான விடயமொன்று நடக்க வேண்டும் எனும் வகையில், ஆளும்கட்சியில் தனிப்பட்ட யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாகவும், அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதை தடுக்குமாறு கோரி, ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட்மனு தொடர்பான உத்தரவை, எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) அறிவித்திருந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment