Header Ads



சர்வதேச மகளிர் தினமும், இஸ்லாத்தில் பெண்களின் உரிமையும்


- எம் .ஐ.எம் அன்வர் (ஸலபி) BA (Hons) , MA (R)

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம், ஆண்களைப் போல் பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. இதில் குறிப்பாக வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட பெண்கள் என்ற கோரிக்கைகளையே முன்னிறுத்தினர். இப்பின்னணியிலிருந்தே சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப் பட்டது.

17ஆம் நுற்றணாண்டின் இறுதிப்பகுதிகளில் ஐரோப்பாவில் பெண்கள் மனிதப் பிறவிகளா. அவர்களுக்க உயிர் உண்டா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இஸ்லாம் 6ஆம் நூற்றாண்டிலேயே அதாவத 1435 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள், பொறுப்புக்கள் பற்றி பேசி, பெண்களும் ஓர் உயரிய படைப்பு என்பதை நிரூபித்துள்ளது.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் பெண்களை மற்ற சமூகத்தினர் எவ்வாறு நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று புரிந்து கொள்வது இஸ்லாம் அவர்களுக்கு எத்தகைய  உரிமைகளை வழங்கியது என்பதை  அறிந்திட இலகுவாக இருக்கும். ஆதனால், உலக சமூகங்களில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதை முதலில் நோக்குவோம்.

பன்மை சமூகங்களில் பெண்களின் பரிதாப நிலை

கிரேக்கர்கள்:
கிரேக்கர்கள்  பெண்களை விற்பனைப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே வழங்கப்பட்டன. சோக்ரடீஸ் என்பவர் ‘பெண்கள் இருப்பது உலகின் மிகப் பெரிய அழிவிற்கு மூல காரணம். நிச்சியமாக பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கிறது என்றும், அதிலுள்ளதை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டவுடனேயே மரணித்து விடுகின்றன’ என்றார்.

இந்தியர்கள்:
பெண்களின் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. கணவன் மரணித்து விட்டால் அவனோடு சேர்த்து அவனது மனைவியும் எரித்து விடுவார்கள். இதற்கு ‘உடன்கட்டை’ ஏறுதல் எனப்படுகிறது. ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலி பெண்களை  வதை செய்கின்ற கொடுமை இந்திய நாட்டில் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

யூதர்கள்:
யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர். யூத மதம் மிகவும் மோசமாகப் பெண்னை நோக்ககிறது.

கிறிஸ்தவர்கள்:
கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் ‘ஏஜண்ட்’ எனக் கருதினர். கிறிஸ்தவ பாதிரியொருவர், ‘பெண் மனித இனத்தைச் சேராதவள்’ எனக் கூறினார். செம்பூனா பென்தாரா என்ற கிறிஸ்தவன் ‘நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். ஆவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதாதீர்கள். நிச்சியமாக நீங்கள் காண்பது ஷைத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் சத்தம் பாம்பின் சீற்றம்தான்’ என்றான்.

ஆங்கிலேயர்:
19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை வழங்கப்படவில்லை.

பிரஞ்சு நாட்டவர்:
பிரஞ்சு நாட்டவர் 1586ம் ஆண்டு பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். 1805ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் என்றே உள்ளது. மேலும், மனைவியின் விலையை 6 பென்ஷி, அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள். பெண்ணடிமைத்தனம் உலகம் முழுதும் இவ்வாறு கோலோச்சிக் கொண்டிருந்தது.

பெண்ணினம் மீதான அரேபிய ஆணாதிக்கமும் இஸ்லாத்தின் வருகையும்

பெண்களின் விடுதலைக்காக குரலெழுப்பும் பெண் விடுதலைப் போராளிகள் பெண்களின் அவல நிலைக்கு இஸ்லாமும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறுவதைத் தான் புரிய முடியாமல் இருக்கின்றது. இவர்கள் இவ்வாறு இஸ்லாத்தைக் குற்றம் சாற்றுவதற்கும் அதன் மீது சேறு பூசுவதற்கும் மூன்றில் ஒன்று காரணமாக அமையலாம் எனத் தோன்றுகின்றது. அவையாவன

1. இஸ்லாம் பற்றிய அறியாமை
2. இஸ்லாத்தின் மீதுள்ள பகைமையும் காற்புணர்ச்சியும்
3. முஸ்லிம்களிற் சிலர் இஸ்லாத்தைப் பிழையாகப் புரிந்து அதனை ஆணாதிக்க மதமாகக் கொண்டு சமுதாயத்தில் செயற்படுகின்றமை

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அதன் வருகை முழுமனித சமுதாயத்திற்கும் அருளாக இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் அது பெண்ணினத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது ஒரு பெரிய உண்மையாகும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டார். அன்று பெண் என்பவள்,
1. ஆணின் அடிமை
2. அவனின் சிற்றின்பப் பொருள்
3. ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்
4. மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள்
5. ஒரு தீமை, அத்தியாவசியத் தீமை
6. குடும்பத்தின் அவமானச் சின்னம்
7. ஒரு சுமை
8. எத்தகைய உரிமையையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.

பெண்ணினம் இவ்வாறு மிக இழிவாக நோக்கப்பட்டும் கேவலமாக நடாத்தப்பட்டும் வந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தூது பொதுவாக மனித விடுதலையை இலக்காக கொண்டிருந்தது. குறிப்பாகவும் சிறப்பாகவும் பெண் விடுதலையை அது அடிநாதமாக கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஒரு பெண் விடுதலை மார்க்கம் என வர்ணித்தால் அது மிகையாகாது.

பெண் குழந்தைகளை ‘பீடைகள்’ என்று முத்திரை குத்திய அரபு கூட்டத்தினரை குர்ஆன் இவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது.

‘மனிதர்களே, நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் பெண் குழந்தைகளை கொலை செய்து விடாதீர்கள். நாம் தாம் அவர்களுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களை கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்’. (17:31)

பெண்களுக்கு உலகில் கொடுக்க வேண்டிய உரிமைகள் பற்றி நீண்டபெரிய ஓர் அத்தியாயத்தை ‘சூரத்துல் அன்னிஸா’ என்று பெயரிட்டு அத்தனை உரிமைகளையும் பட்டியலிட்டு காட்டுகிறது குர்ஆன்.

பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கு நிச்சயமாக அவர்களுக்குரிய பங்குண்டு என்று ஆணித்தரமாக முதன் முதலில் பெண்களுக்காக உரத்த குரலில் சொத்துரிமையை நிலைநாட்டியது இஸ்லாமி மார்க்கம்தான்.

‘(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருட்களில் (அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்’ (4:7) என்று அருள்மறை திருக்குர்ஆன் மிகத்தெளிவாக சொல்லித்தருகிறது.

‘உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்கு உரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்’ (திருக்குர்ஆன் 4:11)  என்று பாகம் எப்படி நியாயமாக பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கும் ஒரு சூத்திரத்தை வகுத்து தந்ததும் வான்மறைதான்.

ஒரு பெண் திருமண வயதை அடைந்து விட்டால், தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்தப்பெண்ணுக்கு  அளிக்கப்பட்டுள்ளது. தன் மனதிற்குப் பிடிக்காத மணமகனை நிராகரிக்கும் உரிமையும் அவளுக்கு உண்டு. ஆண், பெண் இருபாலரிடமும் சம்மதம் பெற்ற பிறகுதான் திருமணம் செய்து வைக்க முடியும் என்ற சட்டவடிவு இஸ்லாத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை.

கணவனை இழந்த கைம்பெண் கண்ணில் விழிப்பது கூட மகாபாவம் என்று கருதிய அந்தக்காலத்தில், கணவனை இழந்த பெண்களுக்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு. விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று ஆணித்தரமாக கூறியது இஸ்லாம்.

‘(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால் அவர்களுக்கும், விதவைகளுக்கும், உங்கள் உரிமைகளில் உள்ள நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள்’ (திருக்குர்ஆன் 24:32) என்று விதவை மறுமணத்தை ஆதரித்தது மட்டுமல்லாமல், அடிமைகள் வாழ்வில்கூட வசந்தம் வீசச் செய்ததும் அருள்மறைதான்.

பெண்கள் கல்வி கற்க வேண்டும், அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆரம்பம் முதலே அடித்தளம் அமைத்து கொடுத்தது இஸ்லாமும், நபி அவர்களும் தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இல்லை என்றால் குடும்பம் சார்ந்த எத்தனையோ சந்தேகங்களுக்கு நபி வழியில் தீர்வுகள் கிடைக்காமல் போயிருக்கும்.

பெண்கள் தாமாக, சுயமாக சம்பாதிக்கலாம் என்பதை அனுமதித்ததும் இஸ்லாம் தான். அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அதற்கு அழகான முன்மாதிரி. அதுமட்டுமல்ல பெண்கள் சம்பாதிப்பது பெண்களை மட்டுமே சாரும் என்ற உரிமையை வழங்கியதும் இஸ்லாம் மார்க்கம் தான்.

‘ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்கே (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம் அல்லாஹ்வுடைய அருளை கோருங்கள்’ (திருக்குர்ஆன் 4:32)

ஆதி காலத்தில் பெண்கள் தங்கள் வாழ்வாதார தேவைகளுக்காக ஈச்சம் பாய்முடைதல், கைவினைப் பொருட்கள் செய்தல் என்று வீட்டுக்குள் இருந்தபடி உழைத்தனர். இப்போது கணினி யுகத்தில் வெளியிடங்களுக்குச் சென்று உழைக்கும் அளவிற்கு உரிமை வழங்கியுள்ளது இஸ்லாம்.

‘தேவைப்பட்டால் மட்டுமே பெண்கள் வேலைக்குச் செல்லலாம். அப்போது தன்னை பாதுகாத்துக் கொள்ள ஷரீஅத் சொன்ன பர்தா முறையை கடைப்பிடியுங்கள். அதனால் வெளியிலும் உங்களுக்கு கண்ணியம் கிடைக்கும்’ என்கிறது இஸ்லாம்.

இத்தனை உரிமைகளையும் இஸ்லாம் சொல்லும் வழியில் முறையாக பெண்கள் பயன்படுத்தினால் மட்டுமே அதற்கு இஸ்லாத்தில் அங்கீகாரம் உண்டு.  எனவே, பெண்கள் அவர்களது உரிமையை உணர்ந்து உண்மையான வழியில் செயல்பட வேண்டும்.

1 comment:

  1. •மனைவிகளை அடிக்க முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி உண்டு.
    •மனைவியின் அனுமதியின்றி இரண்டாம், மூன்றாம் நான்காம் திருமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி உண்டு.
    •சின்னச் சின்ன காரணங்களுக்காக மனைவிகளை விவாகரத்து செய்ய முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி உண்டு
    கௌரவக்கொலை என்றப் பெயரில் எத்தனை ஆயிர முஸ்லிம் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய நாடுகளில் கொலை செய்யப்படுகிறார்கள்.
    பெண்களுக்கு இஸ்லாம் உரிமைகள் தருகின்றது என்று சும்மா சொல்லிக்கொள்ளலாமே தவிர, முஸ்லிம்கள் நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களை கேட்டுப்பார்த்தால் தான் உண்மை புரியும். Latest Dubai princess latifa

    ReplyDelete

Powered by Blogger.