Header Ads



அரபுக் கல்­லூ­ரிகள் சமூ­கத்­திற்கு என்ன பணி­யாற்­று­கின்­றன..?


மௌலவி எஸ்.எச். ஆதம்­பாவா மதனி (எம்.ஏ)

அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் என்ன? அவை என்ன பணி செய்­கின்­றன? என்­ப­வற்றை அறிந்து கொள்­ளாமல் தமது இள­மைக்­கா­லத்தில் குர்ஆன் மத்­ரஸா சென்­ற­தையும் அங்கு நடந்த காட்­சி­க­ளையும் வைத்­துக்­கொண்டு அவை போன்­ற­துதான் எமது அரபுக் கல்­லூ­ரிகள் என்று எண்ணி கருத்துத் தெரி­விக்கும் பலர் எமது சமூ­கத்தில் உள்­ளனர். எமது சமூகப் புத்தி ஜீவி­களே அரபுக் கல்­லூ­ரிகள் பற்றி அறிந்­தி­ராத நிலை­யில் எமது அந்­நிய சமூ­கத்தை நாம் எவ்­வாறு குறை கூற முடியும்? ஒரு முறை கொழும்­பிலே ஒரு கருத்­த­ரங்கு நடை­பெற்­றது. அரபுக் கல்­லூரி அதி­பர்­களை அழைத்து புதிய கல்விச் சீர்­தி­ருத்தம் தொடர்­பாக ஒரு கருத்­த­ரங்கை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் அன்­றைய செய­லாளர் மௌலவி எம்.ஜே.எம். றியாழ் அவர்கள் ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்கள். அந்தக் கருத்­த­ரங்கில் கருத்துத் தெரி­வித்த கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் அதி­கா­ரிகள் அரபுக் கல்­லூ­ரி­களை குர்ஆன் மத்­ர­ஸாக்கள் போல நினைத்துக் கதைத்­தார்கள். அவ்­வேளை அரபுக் கல்­லூ­ரி­களின் அதி­பர்கள் அவ்­வி­டத்­திலே கூறிய வார்த்தை என்­ன­வென்றால் எங்­க­ளுக்கு நீங்கள் கல்வி கருத்­த­ரங்கை நடத்தி புதிய கல்­விச்­சீர்திருத்தம் பற்றி கூறி­யது போல் எமது அதி­கா­ரி­க­ளுக்கு அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் என்ன என்ற ஒரு கருத்­த­ரங்கை நடத்த வேண்டும் என்­ப­தாகும். ஏனென்றால் எமது சமூ­கத்­திலே அரபுக் கல்­லூ­ரிகள் பற்றி அறிந்­தி­ராத நில­மையில் ஏதோ யானை பார்த்த குரு­டர்கள் போல் கருத்துச் சொல்­கின்ற நில­மைதான் காணப்­ப­டு­கின்­றது.

முத­லா­வது நாங்கள் அரபுக் கல்­லூ­ரிகள் என்ன செய்­கின்­றன என்ற கேள்­விக்கு அவை சிறந்த கல்விமான்­களை உரு­வாக்­கு­வது பற்றி நாங்கள் குறிப்­பிட முடியும். தென்­கி­ழக்கு, கொழும்­பு, பேரா­த­னை, கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருக்­கின்ற அரபு இஸ்­லா­மிய நாக­ரீகப் பீடங்­களில் கலா­நி­திகள், விரி­வு­ரை­யா­ளர்கள் நிறை­யப்பேர் இருக்­கின்­றார்கள். இவர்கள் அனை­வரும் அரபுக் கல்­லூ­ரி­களால் உரு­வாக்­கப்­பட்­ட­வர்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. மேலும் இந்த நாட்­டிலே பல சட்­டத்­த­ர­ணி­கள், அர­சாங்கப் பாட­சா­லை­களில் பணி­பு­ரியும் ஆங்­கில ஆசி­ரி­யர்கள் கூட அரபுக் கல்­லூ­ரி­களில் இருந்து வெளி­யான மௌல­வி­மார்கள் என்­பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்­வாறு சிறந்த கல்­வி­மான்கள், பேரா­சி­ரி­யர்கள் போன்­ற­வர்கள் எமது அரபுக் கல்­லூ­ரிகள் உரு­வாக்­கி­விட்ட பொக்­கி­ஷங்கள் என்­பதை நாங்கள் மறந்து விடக்­கூ­டாது.

நடு­நி­லை­யான குடும்­பத்தைச் சேர்ந்த மாண­வர்­களை உயர் நிலைக்குக் கொண்டு வரு­கின்ற பணி­யிலே எமது அரபுக் கல்­லூ­ரிகள் மிகச் சிறந்த பங்­க­ளிப்பைச் செய்து வருகின்­றன. அரபுக் கல்­லூ­ரி­களில் பயின்ற மௌல­விமார் அவர்­களின் ஊர்­களில் முதல் பட்­ட­தாரி என்ற பெரு­மைக்­கு­ரி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். இதே போல அநு­ரா­த­பு­ரம், பொல­ந­று­வை, மொன­ரா­கல போன்ற பிர­தேச மாண­வர்கள் அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு வந்து அவர்கள் க.பொ.த சாதா­ரண, உயர்­தரப் பரீட்­சை­க­ளுக்குத் தோற்றி பின்னர் அவர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டு பட்­ட­தா­ரி­க­ளாக பணி­பு­ரிந்து வரு­கின்­றார்கள். சிலர் அதிபர் பதவி போன்­ற­வற்­றையும் வகித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அது மட்­டு­மல்­லாமல் என்­னி­டத்­திலே ஒரு பெற்றார் வந்து எனது பிள்­ளையை உங்கள் கல்­லூ­ரியில் சேர்க்க விரும்­பு­கிறேன். ஏனென்றால் பாட­சா­லைக்குச் செல்­வ­தென்றால் டியூ­ச­னுக்கு அனுப்ப வேண்டும். டியூ­ச­னுக்கு அனுப்­பு­வ­தற்கு என்­னி­டத்தில் பணம் இல்லை, என்­னி­டத்தில் வசதி இல்லை என்றார். பின்னர் அந்த பிள்ளை எம்­மி­டத்­திலே எவ்­வித டியூ­ச­னுக்கும் செல்­லாமல் பயின்று மௌல­வி­யா­வாக மாத்­தி­ர­மல்ல ஒரு பட்­ட­தா­ரி­யா­கவும் இருப்­பதை இந்த இடத்­திலே குறிப்­பிட்டுக் கூற வேண்டும்.

எனவே இவ்­வாறு நாடு முழுக்க வசதி குறைந்த மாண­வர்கள் எமது அரபுக் கல்­லூ­ரி­களில் கற்று அவர்கள் பெரும் பட்­ட­தா­ரி­க­ளாக இந்­நாட்­டிலே சிறந்த சேவைகள் செய்து கொண்­டி­ருப்­பது இந்த அரபுக் கல்­லூ­ரிகள் இந்­நாட்­டுக்குச் செய்­கின்ற பெரும் சேவை­யாகும்.

இன்று பெரும்­பாலும் அரபுக் கல்­லூ­ரி­க­ளிலே கணினி அறி­வுள்ள மாண­வர்கள் உரு­வா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். எந்­த­வொரு அரபுக் கல்­லூ­ரியை எடுத்­துக்­கொண்­டாலும் அங்கு கணினி கூடம் கண்­டிப்­பாக காணப்­ப­டு­கின்­றது. கணி­னி­யிலே மாண­வர்கள் பயிற்சி செய்­கின்­றார்கள், படிக்­கின்­றார்கள். அர­சாங்கப் பாட­சா­லை­களில் படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்குக் கூட சிலவேளை கணி­னியைத் தொடு­வ­தற்குக் கூட வாய்ப்­பில்­லாமல் இருக்­கின்­றது. ஆனால் அரபுக் கல்­லூ­ரி­க­ளிலே பெரும்­பாலும் இவ்­வா­றான கணினி கூடங்கள் இருக்­கின்­றன. அங்கே அதற்­கென்று ஆசி­ரி­யர்கள் கற்­பித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மாண­வர்கள் அத்­து­றை­யிலே மிகச் சிறந்த நிபு­ணத்­து­வத்தைப் பெற்று பலர் வெளி­நா­டு­க­ளிலே பணி­பு­ரிந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். மேலும் மத்­ர­ஸாக்­க­ளிலே ஆங்­கில மொழி, சிங்­கள மொழி என்­பன கண்­டிப்­பாகக் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன சிங்­கள மொழி எமது அர­சாங்கப் பாட­சா­லை­களில் கூட கிடைக்­காத கல்வி மத்­ரஸா மாண­வர்­க­ளுக்குக் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு சமூ­கத்­திலே ஒரு சிறந்த அறிவை எமது அரபுக் கல்­லூ­ரிகள் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை நாங்கள் மறந்து விட முடி­யாது.

அதே போல மார்க்க அறிவைக் கொடுப்­ப­திலே எமது கல்­லூ­ரிகள் செய்து கொண்­டி­ருக்­கின்ற அளப்­பெ­ரிய சேவை­களை இந்த இடத்­திலே குறிப்­பிட்டுக் கூற வேண்டும். மத்­ர­ஸாக்கள் இல்­லை­யென்றால் மார்க்க அறிவு இல்லை என்று கூறும் அள­வுக்கு மார்க்கக் கல்­வி­யிலே சிறப்­புற்­ற­வர்­க­ளாக மத்­ர­ஸாக்­க­ளிலே இருந்து வெளி­யே­று­கின்­ற­வர்கள் காணப்­ப­டு­கின்­றனர். அரபு மொழி­யுடன் மார்க்க அறிவும் அவர்­க­ளுக்குப் போதிக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அரபு மொழியைப் பொறுத்­த­வ­ரையில் நவீன மொழி­யாற்­ற­லுடன் சர்பு(الصرف), நஹ்வு (النحو), பலாகா(البلاغة) போன்ற இலக்­க­ணங்­களை மிகவும் விரி­வாகப் படிக்­கின்­றார்கள்.

மேலும் அவர்கள் அல்­குர்ஆன் விரி­வுரை, தப்ஸீர் கலையில் விரி­வான அறிவைப் பெறு­கின்­றார்கள். அல்­குர்­ஆனின் வசன விளக்­கங்­களைப் பெற்று அல்­குர்ஆன் எந்த சந்­தர்ப்­பத்­திலே இறங்­கி­யது? அத­னு­டைய ஓதல் வகைகள் என்­ப­வற்­றை­யெல்லாம் அந்த மாண­வர்கள் பயி­லு­கின்­றார்கள். மேலும் அல்­குர்­ஆ­னிய விஞ்­ஞானம் என்று சொல்லக் கூடிய உலூமுல் குர்ஆன் என்ற கல்­வி­யையும் அந்த மாண­வர்கள் பெறு­கின்­றார்கள். இதே­போல ஹதீ­ஸிலே அந்த மாண­வர்கள் பெறு­கின்ற அறிவு ஸிஹா­ஹுஸ்­ஸித்­தாக்கள் மாத்­தி­ர­மல்ல பல ஹதீஸ் கிரந்­தங்­களை அந்த ஹதீ­ஸி­னு­டைய தரங்கள், தரா­த­ரங்கள் போன்­ற­வற்றை பயின்­று­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அது மாத்­தி­ரமா பிக்ஹ் கலையில் அவர்கள் பெறுகின்ற கல்வி அதா­வது பிக்­ஹிலே வணக்கம், திரு­மணம், வியா­பாரம், சட்­டங்கள் போன்ற பல்­வேறு விட­யங்­களை அவர்கள் கற்று அதிலே அவர்கள் சிறந்த நிபு­ணத்­துவம் பெறு­கின்­றார்கள். அது மாத்­தி­ரமா அவர்கள் வாரி­சு­ரிமைச் சட்­டங்­களை கற்று இந்த நாட்டு நீதி­மன்­றத்­திற்கு கூட அறிவுச் சேவையை வழங்­கு­கி­றார்கள். மேலும் இஸ்­லா­மிய வர­லாற்­றிலே மூல நூல்­களைக் கற்று இஸ்­லா­மிய வர­லாற்றில் சிறந்த அறிவைப் பெறு­கின்­றார்கள். இவ்­வாறு எமது அரபுக் கல்­லூ­ரி­களில் மாண­வர்கள் பயி­லு­கின்ற பாடங்­களை எம்மால் விப­ரித்துக் கூற முடியும். இவ்­வாறு எத்­த­னையோ கலை­களை எமது மாண­வர்கள் பயின்­று­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மேலும் இந்­நாட்டின் அரபுக் கல்­லூ­ரி­க­ளிலே பெறு­மதி வாய்ந்த நூல் நிலை­யங்கள் உள்­ளன. அதிலே ஆயி­ரக்­க­ணக்­கான கிரந்­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. அரபு மொழி­யிலே இருக்­கின்ற தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற ஒவ்­வொரு துறை­யிலும் நிறைந்த நூல்­களைக் கொண்டு ஒவ்­வொரு அரபுக் கல்­லூ­ரி­களின் நூல் நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்றன். இந்­நாட்டின் அறி­ஞர்கள் பலர் அரபு மொழி­யிலே புத்­த­கங்­களை எழு­திய வர­லாற்­றையும் நாம் இந்த இடத்­திலே நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே இந்­நாட்­டிலே அரபுக் கல்­லூ­ரி­க­ளிலே இருக்­கின்ற அரபு நூல்கள் அரபு பொக்­கி­ஷங்கள் எங்­கு­மில்லை என்­பதை இந்த இடத்­திலே நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும். 19 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து இந்த நாட்­டிலே கல்­விப்­ப­ணி­பு­ரியும் அரபுக் கல்­லூ­ரிகள் இந்த நாட்­டிற்கு செய்­தி­ருக்­கின்ற சேவை­களை நாங்கள் யாரும் குறைத்து மதிப்­பிடக் கூடாது. மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கையூம் கூட இலங்­கையில் காலி­யிலே இருக்­கின்ற அரபுக் கல்­லூரி ஒன்றில் பயின்­றவர் என்­பதை மறந்­து­விடக் கூடாது.

எனவே இவ்­வாறு இந்த நாட்­டுக்கு 19 ஆம் நூற்­றாண்டு முதல் சேவை செய்து கொண்­டி­ருக்­கின்ற இந்த அரபுக் கல்­லூ­ரி­களை மட்­ட­மாகப் பேசு­வ­தை­யிட்டு நாங்கள் கவ­லைப்­ப­டு­கின்றோம்.இந்த நாட்டிலே இருக்கின்ற அரபுக் கல்லூரிகள் ஏதாவது ஒரு பயங்கரவாதச் செயலிலே ஈடுபட்டதென்று யாராவது ஒருவரால் குற்றம் சாட்ட முடியுமா? எமது அரபுக் கல்லூரிகள் மிகவும் ஒழுங்காக சீராக எவ்வித பயங்கரவாதச் செயலும் இல்லாமல் நாட்டுக்கும் தேசத்துக்கும் விசுவாசம் உள்ளதாகத்தான் உருவாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த இடத்திலே எவராவது ஒரு அரபுக் கல்லூரி பற்றி குறைத்து குற்றம் சுமத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மார்க்கத்தின் காவலர்கள் உலமாக்கள். அந்த உலமாக்களை உருவாக்குகின்ற இடங்கள் அரபுக் கல்லூரிகள். அரபுக் கல்லூரிகள் இல்லையென்றால் உலமாக்கள் உருவாக முடியாது. மார்க்கத்தின் சட்டதிட்டங்களை, விளக்கங்களை எடுத்துக் கூற முடியாது.

எனவே மத்ரஸாக்கள்தான் இந்த நாட்டிலே மார்க்கத்தைப் பாதுகாக்கின்ற ஒரு காவலனாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.- Vidivelli

3 comments:

  1. The Problem Has Started after Importing the Saudi Wahhabi Curriculum Which led to The Radicalization and Extremism














































    Radicalization and Extremism














































    The problem has Started after Importing and Imposing Saudi Wahhabi Curriculum Which Led These Madrasas to Extremism and radicalization.





    ReplyDelete

Powered by Blogger.