Header Ads



மூதறிஞர் சித்திலெவ்வை தொடக்கம், கலாநிதி ஷுக்ரி வரை (தொடர் பேச்சு)


மூதறிஞர் முஹம்மது காஸிம் சித்திலெவ்வை தொடக்கம் கலாநிதி ஷுக்ரி வரை முஸ்லிம் கல்விக்கு அளப்பெரும் பணி செய்த கல்வியாளர்கள் பற்றி பன்னூலாசிரியரும் அறிஞருமான ஜனாப் ஏ.எம். நஹியா அவர்களின் தொடர் பேச்சு நிகழவிருக்கின்றது. அதன் முதலாவது சொற்பொழிவு எம்.ஸி.சித்திலெவ்வை அவர்களின் முஸ்லிம் சமூக கல்விச் சிந்தனை பற்றியதாக அமையவிருக்கிறது. வாப்பிச்சி மரிக்கார், ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ், ஒறாபி பாஷா, நீதியரசர் எம்.ரி. அக்பர், சேர் ராஸீக் பரீத், எ.எம்.எ அஸீஸ், பதியுத்தீன் மஹ்மூத், எஸ்.எல்.எம் ஷாபி மரிக்கார், கலாநிதி ஷுக்ரி முதலானோர் பற்றியும் முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்த சுவாமி விபுலானந்தர் பற்றியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழவிருக்கின்றன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் நிகழவிருக்கும் இத்தொடர் சொற்பொழிவுகளின் முதலாவது சொற்பொழிவு 16.03.2021 காலை 10.00 மணிக்கு நிகழவிருக்கிறது.

மூதறிஞர் எம்.ஸி சித்திலெவ்வையின் சமூகப் பின்புலம், கல்விப் பணியில் அவரை ஊக்கிய காரணிகள், ஓறூபி பாஷாவுடனான அவரின் தோழமை, கல்விக்கருத்தும் சிந்தனையும், பெண் கல்விப் பங்களிப்பு, கற்றல் கற்பித்தல் கொள்கை, பாலருக்கென அவர் எழுதிய பாடநூல்கள், அவர் நாடெங்கும் ஆரம்பித்த  பெண் பாடசாலைகள், கொழும்பில் அவர் தாபித்த புதிய சோனகர்தெருப் பாடசாலை, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, அவரின் மொழிக் கொள்கை, நாவல் இலக்கியத்துக்கு அவரின்  பங்களிப்பு, பத்திராதிபதிராக அவரின் பணி, மெய்ஞ்ஞானப் பங்களிப்பு, அரபுமொழி மேம்பாட்டுபணி, வரலாற்றுப்பார்வை என்பன பற்றியெல்லாம் இவ்வுரையில் கருத்துக்கள் முன்வைக்கப்படவிருக்கின்றன.

இச்சொற்பொழிவை நிகழ்த்தவிருப்பவர் ஏ.எம் நஹியா அவர்கள். அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் உதவி அதிபர், பணிப்பாளர் நாயகம் - புனர்வாழ்வு, பணிப்பாளர் நாயகம் - மீனவர் வீடமைப்பு மற்றும் மீனவர் நலன், பொது சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் மூன்றில் அங்கத்தவராகப் பணி செய்தவர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகர் முதலான பதவிகளை வகித்தவர். இவர் கொழும்புப் பல்கலைகழக பீ.ஏ பட்டதாரி, யாழ் பல்கலைகழக பட்ட மேற்படிப்பு கல்வியியல் டிப்ளோமா, கல்வியியல் தத்துவமுதுமாணி (M.Phil) முதலான பட்டங்களையும் பெற்றவர்.

கொழும்புப் பல்கலைகழகத்தில் தமிழ்சங்கத்தலைவராக 1971 இல் இவர் தெரிவு செய்யப்பட்டபோது இலங்கைப் பல்கலைகழக வரலாற்றில் பல்கலைகழக தமிழ்சங்கத்தின் தலைவரான முதலாவது முஸ்லிம் என்ற பெருமைக்குரியவரானார். பன்னூலாசிரியரான இவரின் இலங்கையில் முஸ்லிம் கல்வி – ஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற நூல் இலங்கை அரசாங்கத்தின்  2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆய்வுக்குரிய சாஹித்திய மண்டல விருதையும் 150,000.00 ரூபா பணப்பரிசையும் வென்றது. கொழும்பு கம்பன் கழகம், நீர்கொழும்பு இந்து இளைஞர் பேரவை, கொழும்பு பல்கலைகழக அலும்னி ஓர்கனைசேஷன் முதலான பிரபல இயக்கங்களும் அவரை கௌரவித்திருக்கின்றன. அக்கரைப்பற்று கருங்கொடியூர் விருதையும் அவர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்ச்சியினை  16.03.2021 ஆம் திகதி காலை 10.00 மணிமுதல் பின்வரும் YouTube மற்றும் Facebook  இணைப்பினூடாக  பார்வையிடலாம்.

No comments

Powered by Blogger.