Header Ads



கொழும்பில் சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை..?, 2 பெண்கள் உயிரிழப்பு, விசாரணையை கோரும் இந்தியா


சுற்றுலா வீசாவில் இலங்கை வந்த இந்தியர்கள், சட்ட விரோதமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் சிறுநீரக தானங்களை முன்னெடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் அந்த விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவுக்கு விசேட அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

கொழும்பில் இரு தனியார் வைத்தியசாலைகளில் இந்திய பெண்கள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்கள் சிறுநீரக தானத்தின் போதா உயிரிழந்தனர்? என்பதை கண்டறிய விசாரணையொன்றை நடத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இக் கோரிக்கைக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகள் இரண்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு இந்தியப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்துக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக தானமாக இருக்கலாமென தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் இரு இந்தியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.

உயிரிழந்த இரு இந்திய பெண்களின் சடலங்கள் இந்தியாவுக்கு எடுத்து செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது அவர்கள் இலங்கையின் அந்த வைத்தியசாலைகளில் எதற்காக சிகிச்சை பெற்றனர் என்பது தொடர்பில் பூரண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி அந்தப் பெண்கள், அந்த வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டமை எதற்காக?, பெற்றுக்கொண்ட சிகிச்சைகள் எவை? மரணத்துக்கான காரணம் என்ன? என்பவை உள்ளிட்ட முழுமையான அறிக்கை ஒன்றை சிசிடியினருக்கு வழங்க வைத்தியசாலைகளுக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரினர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.