Header Ads



2,221 கிலோ உலர்ந்த, மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது


கல்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் மற்றும் தலைமன்னார் குடுஇருப்பு கடற்கரையில் 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட பின்னர் கடற்படை நடவடிக்கைகளினால் கைவிடப்பட்ட 2,221 கிலோ மற்றும் 600 கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் படி மார்ச் 20 ஆம் திகதி கல்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணத்தினால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 33 சாக்குகளில் நிரப்பப்பட்ட 1,149 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டன. 

மேலும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மார்ச் 19 ஆம் திகதி தலைமன்னார் குடுஇருப்பு பகுதியில் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது குடுஇருப்பு கடற்கரைக்கு அருகில் கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருந்த சுமார் 1,072 கிலோ மற்றும் 600 கிராம் உலர்ந்த மஞ்சள் நிரப்பப்பட்ட 19 சாக்குகள் கைப்பற்றப்பட்டன. 

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் அடுத்த நடவடிக்கை வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.