Header Ads



18 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை, கொள்வனவு செய்யவுள்ள இலங்கை


18 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவற்றில் 10 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

மிகுதி நிதியையும் திரட்டிக்கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என அவர் கூறினார்.

ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டதற்கு அமைய, ஒரு மில்லியன் தடுப்பூசிகள் விரைவில் கொண்டுவரப்படும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, COVAX திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படவுள்ள astrazeneca தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை (07) கிடைக்கவுள்ளது.

இதற்கமைய, 1.44 மில்லியன் தடுப்பூசிகளில் 2,64,000 தடுப்பூசிகள் நாளை கொண்டுவரப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

COVAX திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் முதலாவது தொகுதி, COVID அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவுள்ளது.

எஞ்சிய தடுப்பூசிகள் எதிர்வரும் மே மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களின் கீழ் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Oxford Astrazeneca Covishield தடுப்பூசிகள் மாத்திரமே தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

கடந்த 4 ஆம் திகதியுடன் 6,50,000-இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காணப்படும் பகுதிகள் மற்றும் மேல் மாகாணத்திலும் COVID-19 தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.