February 13, 2021

பேரணியில் எழுப்பப்பட்ட கோஷங்களை, முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை - கிருஷ்ணப்பிள்ளை


- பாறுக் ஷிஹான் -

 கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு குறித்து சில தமிழ் தேசிய அரசியல்வாதிகளால்  பேரணியில்  எழுப்பப்பட்ட கோஷங்களை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை   என  கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒண்ணாவிரதம் இருந்த ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியின் போது அக்கரைப்பற்று பகுதியில் வைத்து தமிழ் பிரதிநிதிகள் ஜனாசா எரிப்பு கோஷங்களை எழுப்பினர்.அதே போன்று அதே போராட்ட பேரணியானது கல்முனை ஊடாக சென்ற போது கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு குறித்து சில தமிழ் தேசிய அரசியல்வாதிகள்  எழுப்பப்பட்ட கோஷங்களை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இவ்விடயத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்களை முஸ்லீம் சகோதரர்கள் முன்வைத்திருந்தனர்.தொடர்ந்து தீர்வுகள் என்று கூறி வருகின்ற சந்தர்ப்பத்தில் நடிகர்கள் மாத்திரம் தான் மாறிக்கொண்டு வருகின்றனர்.வடக்கிற்கும் கிழக்கிற்கும் உள்ள உறவு சொல் அளவில் இருக்கின்றதே தவிர செயல் அளவில் இல்லை.இயக்க போராட்டத்தில் கருணா அம்மான் பொட்டம்மான் வேறுபாடு காட்டப்பட்டது.தற்போது என்ன அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் பொத்துவில் பகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னெடுத்து வந்தார்.இவ்வாறு பேரணியினை முன்னெடுக்கும் போது சிவில் தலைவர்களோ சமயத் தலைவர்களோ வருகை தரவில்லை.ஆனால் திருகோணமலையை தாண்டி வட மாகாணத்திற்கு நுழைகின்ற போது இவரது வளர்ச்சியை விரும்பாத சிவில் அமைப்பு என சொல்பவர்கள் இப்பேரணியை அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் போராட்டம் அல்ல என கூறி சில சமயத்தலைவர்கள் அவரது முன்னெடுப்பினை தடைசெய்திருந்தனர்.இறுதியாக இப்பேரணி முடிவில் இரு வேறு இடங்களில் நினைவுக்கற்கள் இடப்பட்டு முடிவுறுத்தப்பட்டதனால் பேரணியில் நோக்கம் நிறைவேறாமல் சென்று விட்டதை நான் அறிகின்றேன்.

இப்பேரணியின் முக்கிய நோக்கமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரிந்த வாக்குகளை பெற்றுக்கொள்வதாகும்.கடந்த 2002 ஆண்டு 22 ஆசனங்கள் கூட்டமைப்பிற்கு இருந்தது.தற்போது படிப்படியாக குறைந்து 10 ஆக உள்ளது.கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி விடுக்கூடாது என கூறி 5 ஆக மீண்டும் குறையக்கூடாது என மறு தேர்தல் வரும்வரை மக்கள் செல்வாக்கை கூட்டிக்கொள்வதற்காகவும் இப்பேரணியை பயன்படுத்தியுள்ளனர். கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபையில் உள்ள உறுப்பினர்கள் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் களமிறங்குவதற்காகவும் இதனை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் குறித்த பேரணியில் கலந்து கொண்டு சுவிஸ் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கும் பயன்படுத்தியுள்ளமை மனவேதனை தரும் விடயமாகும்.இது தவிர ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் காரணமாக விசேட அதிரடிப்படை பாதுகாப்பு  நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் அவர் பொத்துவில் -பொலிகண்டி போராட்டத்தில் அரசுக்கு எதிராகவும் பாதுகாப்பு படைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி இருந்தார்.அவ்வேளை இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அவரை சுற்றி பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாருமே இருந்தனர்.இவ்விடயமானது சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்.இவர்கள் சிங்கள அரசு வேண்டாம்.ராஜபக்ச வேண்டாம் என கூறுபவர்கள் புதிய பாராளுமன்ற அமர்வில் வழங்கப்படும் வாகன பேமிட்டை வேண்டாம் என கூறுவார்களா?மெய்ப்பாதகாவலர்களாக சிங்கள பாதுகாப்பு வீரர்கள் வேண்டாம் தமிழ் வீரர்கள் வேண்டும் என கேட்டு வாங்குவார்களா?தங்களுக்கு வருகின்ற சலுகைகளை வாங்கிக்கொண்டு மக்களிடம் தியாகிகள் மாதிரி நடித்துக்கொண்டு இருக்கின்ற நிலையே அரசியல் வாதிகளின் போக்காக உள்ளது.

மேலும் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 114 அரசியல் கைதிகள் இருந்துள்ளனர்.தற்போது இவ்விடயத்திற்காக தமிழ் அரசியல் வாதிகள் சிலர் அரசாங்கத்தில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை விலகுமாறு கேட்கின்றனர்.ஆனால் கடந்த நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 ஆசனங்களும் ஆணி வேராகவே இருந்திருந்தது.இவ்ஆதரவு கிடைத்திருக்காவிடின் எதுவும் செய்திருக்க முடியாது.இதுவரைக்கும் அக்காலகட்டத்தில் 5 பாதீடு 3 நம்பிக்கை இல்லாப்பிரேரணை ஏறக்குறை வந்திருக்கின்றது.மேற்படி விடயத்திற்கும் 5 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டிருந்தால் பெரும்பாலான அரசியல் கைதிகள் அன்றே விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.தற்போது கோமாவில் இருந்து கொண்டு செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போன்று  குதிக்கின்றனர்.அந்த நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை முன்னெடுத்திருக்க முடியாது.இப்போதைய நிலைமையில் அரசாங்கத்துடன் உள்ள  பிள்ளையான், வியாளேந்திரன், டக்ளஸ், திலீபன் ,அங்கஜன் ராமநாதன், சுரேஸ் ராகவன் ,ஜீவன் தொண்டமான் , உள்ளிட்ட 8 தமிழர்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்ற ஆதரவினை விலக்கி கொண்டாலும் இன்னும்  நான்கரை ஆண்டுகள்   எவ்வித பிரச்சினையும் இன்றி  இந்த அரசாங்கம் இயங்கி செல்லும்.

எனவே மக்கள் சார்ந்து செல்வதற்கும் கோரிக்கை விடுப்பதற்கும் வித்தியாசங்களை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.


0 கருத்துரைகள்:

Post a comment