February 19, 2021

பிரபல மூத்த ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீல் மறைவு


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவரும் அதன் நீண்ட கால உப தலைவர்களுள் ஒருவருமான பிரபல மூத்த ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீல் அவர்கள் இன்று அதிகாலை தனது 75ஆவது வயதில் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஊடகத் துறையில் பழுத்த அனுபவம் மிக்க ரஷீத் எம். ஹபீல் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் தலைவராக கடமையாற்றி இலங்கை முஸ்லிம் ஊடகவியல் பரப்பில் முன்னோடிகளுள் ஒருவராகவும் திகழ்ந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என் எம் அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில் :-

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபிக்கப்பட்டது முதல் பல்வேறு பொறுப்புக்களை வகித்து மர்ஹ_ம் ரஷீத் எம் ஹபீல் போரத்தின் உதவிப் பொருளாளர், பயிற்சிக் குழு பொறுப்பாளர், உப தலைவர் முதலான பொறுப்புக்களை வகித்து வந்ததுடன் அந்திம காலத்தில் போரத்தின் ஆலோசகராகவும் செயலாற்றி வந்தார்.

பலர் ஊடகத் துறையில் கால் பதிப்பதற்கும் மற்றும் பல ஊடகவியலாளர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த அவர், இளம் ஊடகவியலாளர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதில் கூடுதல் கரிசனை செலுத்தி வந்தார். இளம் ஊடகவியலாளர்களது காரியாலயத்திற்கு, வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவிப்பார்.

தனது காந்தக் குரலால் நேயர்கள், பார்வையாளர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணி புரிந்த மர்ஹ_ம் ரஷீத் எம். ஹபீல் அவர்களது இழப்பு இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

அவரது ஊடகத் துறைப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 2011ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான மர்ஹ_ம் ரஷீத் எம். ஹபீல் மாளிகாவத்தை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபை அங்கத்தவராகவும் இலங்கை கல்வி மாநாட்டின் உறுப்பினராகவும் இருந்து சமூகப் பணிகளிலும் பங்கெடுத்தார்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், பெரியோர்- சிறியோர் வேறுபாடின்றி எல்லோருடனும் அன்பாகவும் இனிமையாகவும் தோழமையுடனும் பழகக்கூடிய மர்ஹ_ம் ரஷீத் எம். ஹபீல் அவர்களுடைய மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது. அத்துடன் அவரது மறுமை வாழ்வு வெற்றி பெறவும் பிரார்த்திக்கிறது.

வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குமாறும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய பொறுமையை வல்ல இறைவன் வழங்கவும் பிரார்த்திப்போமாக!


என். ஏ எம் ஸாதிக் ஷிஹான்

பொதுச் செயலாளர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

19.02.2021

3 கருத்துரைகள்:

One of grade news corresponder we lost.May Allah grande him highest rank of paradish!

அல்ஹாஜ் ரஷீத் எம் ஹபீfல்
நான் ஊடகக் கற்கைநெறியினை பயிலும்போது எமக்கு மேற்பார்வையாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்ட ஒரு உன்னதமான உத்தம மனிதர். பெரும் புகழ்பெற்ற அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தாலும் உடன்பிறந்த சகோதரன்போல் எம்மோடு எளிமையுடனும் அன்புடனும் பழகியர். சுருங்கக்கூறின் அவர் ஒரு மனிதப்பழம்!
அன்னாரது கம்பீரமான காந்தக் குரலில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் செய்தி வாசிப்பும், நோன்புகால இப்தார் நிகழ்வுகளும் முக்கியமாக நேரடியாக எம்மை ஹஜ்ஜுக்கே அழைத்துச்சென்றதுபோல் உணர்த்தும் அவரது அரபா தின நேரடி ஒளிபரப்பும் இன்னும் காதுகளிலே ஒலித்துக்கொண்டேயிருக்கிறது...
😢
எமது இறுதி வகுப்பில் எனது நகைச்சுவை கலந்த கவிதையினைக் கேட்டு கட்டிப்பிடித்து முதுகில் தட்டி ஆரத்தழுவி வாழ்த்தியதை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமுடியாது.
அல்ஹாஜ் ரஷீத் எம் ஹபீல் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனையை தருகிறது. யா அல்லாஹ்! அன்னாரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி மேலான ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் உயர்ந்த அந்தஸ்த்தினை வழங்குவாயாக! அன்னாரது குடும்பத்துக்கு ஆறுதலை வழங்குவாயாக. ஆமீன்!

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

May God AllMighty Allah forgive all his sins and bless him "jennathulfirdouz", Insha Allah. Our deepest condolences to the grieving family too, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a Comment