Header Ads



ஜனாஸா அடக்கம் பற்றி பிரதமர் கூறியது இம்ரான்கானுக்கே தெளிவாக கேட்டிருக்கிறது - மஹிந்தவின் மிக அருகிலும், பின்னாலும் இருந்தவர்களுக்குமே கேட்கவில்லை


பிரதமர் மஹிந்த ராஜபக்ச கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக நாடாளுமன்றத்தில் கூறியது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திற்கு மிகத்தெளிவாகக் கேட்டிருக்கிறது. ஆனால் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கு மாத்திரமே அது கேட்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி தொடர்பிலும், ஆளும் தரப்பினர் மாறுபட்ட தகவல்களை வெளியிடுவது தொடர்பிலும் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் பேசிய அவர்,

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிகத்தெளிவாகவே குறிப்பிட்டார்.

அது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளடங்கலாக சர்வதேசத்திலுள்ள பலருக்கும் மிகத்தெளிவாகக் கேட்டிருக்கிறது. எனினும் பிரதமருக்கு மிக அருகில் இருந்தவர்களுக்கும் பின்னால் இருந்தவர்களுக்குமே அது கேட்கவில்லை. இது மிகவும் வேடிக்கையான விடயமாகும்.

அதுமாத்திரமன்றி பிரதமர் நாடாளுமன்றத்திலேயே மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். வாகனத்தில் செல்லும்போது ஊடகங்களுக்குக் கூறவில்லை. எனவே பொறுப்புவாய்ந்த இடத்தில் பொறுப்புடன் வெளியிடப்பட்ட கருத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

1 comment:

  1. Mr. Ahmad Furkhan, the SLPPer from Kalmunai, please read and understand what MP Mujibur Rahman's has stated above.

    ReplyDelete

Powered by Blogger.