Header Ads



தவறான விளக்கங்களால் மக்களின் பிரச்சினைகளை மறைக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி


மக்கள் திட்டங்களை செயற்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச அபவிருத்திக் குழு கூட்டங்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

பொறுப்பான அதிகாரிகளின் சரியான பங்களிப்பு இல்லாததே பயனுள்ள திட்டங்கள் தாமதமாக இருப்பதற்கும், மக்களுக்கு அவற்றின் நன்மைகள் கிடைக்காதிருப்பதற்கும் முக்கிய காரணம் என்பதை 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே தான் புரிந்து கொண்டதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டங்களை செயல்படுத்துவதில் வனவிலங்கு, வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களின் பொறுப்பான அதிகாரிகள் ஒரு கூட்டு முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காணிப் பயன்பாடு குறித்து முறையான திட்டமிடல் இல்லாதது மக்களின் தவறு அல்ல. 

காணிப் பிரச்சினைகள் உட்பட பல கிராமப்புற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும்போது அதிகாரிகள் களத்திற்குச் சென்று உண்மையான நிலைமையைப் பார்த்து முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

மக்களுக்கு சார்பாக கொள்கை ரீதியான முடிவுகளை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று (20) முற்பகல் புத்தளம் மாவட்டத்தில் கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவில் உள்ள பலீகம கிராம சேவகர் பிரிவில் உள்ள நெலும்வெவ சனசமூக நிலைய வளாகத்தில் நடைபெற்ற 11 வது 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். 

நாட்டின் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றே 'கிராமத்துடன் உரையாடல்' திட்டத்திற்காக தெரிவு செய்யப்படுகிறது. இந்த கிராமங்களில் வாழும் மக்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளையோ அல்லது வேறு எந்த தரப்பையோ மட்டும் பார்த்து இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனவே, அதிகாரிகளும் கிராமவாசிகளும் ஒருவருக்கொருவர் சந்திப்பதன் மூலம் சரியான முடிவுகளை எடுக்க முடியும்” என்று இங்கு வருகைதந்திருந்த மக்களிடம் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை , பொலன்னறுவை,  களுத்துறை, மொனராகலை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம். 

நவகத்தேகம மற்றும் ஆனமடுவ பிரதேச செயலக பகுதிகளின் எல்லையில் புத்தளம் நகரத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் பலீகம கிராமம் அமைந்துள்ளது. துட்டகைமுனு மன்னனின் கவசம் விழுந்த கிராமம் என்றும் இந்த கிராமம் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அது பலீகமவாக மாறியது. நெலிவெவ, சியம்பலவெவ, நெலும்வெவ, ரஜவிகம மற்றும் ஹீனட்டிகல்ம கிராமங்கள் பலீகம கிராம சேவகர்  பிரிவுக்கு உட்பட்டதாகும். தேதுரு ஓயா திட்டத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட வாரியபொல, யாபஹுவ, நிகவரட்டிய மற்றும் ஹிரியால பகுதிகளைச் சேர்ந்த 78 குடும்பங்கள் முதல் கட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 447 குடும்பங்களைக் கொண்ட பலீகமவின் மக்கள் தொகை 1533 ஆகும். இதில் 171 குடும்பங்கள் சமுர்தி உதவி பெறுநர்கள். நெல் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.

காட்டு யானைகள் பயிர்கள் மற்றும் உயிர்களுக்கு ஏற்படுத்தும் சேதம் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய நீண்டகால பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு தற்காலிக தீர்வன்றி திட்டமிட்ட, நீண்ட கால மற்றும் நீடித்த தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். நீண்டகால தீர்வாக, வனத்தின் உட்புறத்தில் குளங்களை நிர்மாணித்தல், காட்டு யானைகளின் உணவுக்கு தேவையான மரஞ்செடிகளை வளர்ப்பது, மின்சார வேலிகளை செயற்படுத்துதல் மற்றும் அகழிகள் வெட்டுதல் போன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பலீகம செல்லும் வழியில், தான் கண்ட மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் குறைபாடுகள் குறித்து குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சரியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

இன்றைய கிராமத்துடன் உரையாடலில், பிரதேச கல்வித் தேவைகள் பற்றி ஜனாதிபதி அவர்கள் ஆராய்ந்தார். ரஜவிகம கனிஷ்ட வித்தியாலயம், முரியகுளம் கனிஷ்ட வித்தியாலயம், அலுத்கம துடுகெமுனு வித்தியாலயம், ஆனமடுவ யு.பி. ஜயசூரிய வித்தியாலயம், இங்கினிமிட்டிய மகா வித்தியாலயம் மற்றும் கலவெவ மகா வித்தியாலயம் ஆகியவற்றின் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்யவும், ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பவும் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் கட்டிடங்கள் மற்றும் மனிதவளத் தேவைகளை ஐந்து ஆண்டுகளுக்குள் தீர்க்கும் வகையில் திட்டமிடவும், பின்தங்கிய பகுதிகளில் பாடசாலை கட்டிடங்களை எளிமையான மற்றும் செலவு குறைந்த திட்டத்தின் கீழ் அதிக பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ரஜவிகம - பலீகம, நுரியாகுளம் - கல்குளம், பலீகம - நெலும்வெவ, முல்லேகம - இங்கினிமிட்டிய, விஜயபுர மாவத, நுரியாகுளம் - நெலும்கம வீதிகள் மற்றும் கல்அடிய - மீஓய பாலங்களை விரைவாக அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

குடிநீரில் உப்பு கலப்பது மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினையாகும். புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இப்பகுதியில் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களின் தாமதம் குறித்து ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் விசாரித்தார்.

ஹீனட்டிகல்ம குளம், நெலும் வெவ குளம், மொரகஹவெவ, இங்கினிமிட்டிய, தப்போவ, புலியம்குளம் மற்றும் கஹடபலியாவ உள்ளிட்ட பிரதேச குளங்கள் மற்றும் அணைக்கட்டுளின் அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். ராஜாங்கனய நீர்த்தேக்கத்திலிருந்து கருவலகஸ்வெவ வரை நீரை கொண்டுசெல்லும் திட்டத்தை புதிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனமடுவ, சிலாபம், நவகத்தேகம, தப்போவ மற்றும் அலுத்வெவ மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவர் தாதியர் மற்றும் ஏனைய ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.02.20

2 comments:

  1. கதவை திறந்து வைத்து விட்டு பொருட்களை பாதுகாக்க செய்வதாக தெரிகிறது.

    ReplyDelete
  2. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த பின்னரும் , சும்மா பூச்சாண்டி காட்டுவதற்காக எடுத்துக்கெல்லாம் ஆணைக்குழு , ரிப்போர்ட் என்று படம் காட்டுகின்றனர். நாட்டின் இப்போதைய்ய உள் பிரச்சினை என்ன மக்களுக்கு என்ன வேண்டும் என்று எல்லாமே எல்லாருக்கும் தெரிகின்றது . இந்த கமிஷன் , ரிப்போர்ட் இது எல்லாமே மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அரசியல் வாத்துகள் தீர்மானிப்பதற்கு மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை சட்டமாக்கி மக்களை சிரமத்துக்குள்ளாக்கி திணிப்பதற்கு மட்டுமே. இதைத்தான் ஹிட்லர் சீருடையில் செய்தார் .

    ReplyDelete

Powered by Blogger.