February 19, 2021

சர்வதேச இலங்கை முஸ்லிம் சமூகத்தின், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுக்கான திறந்த மடல்


அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அடிப்படை மனிதஉரிமை நெருக்கடிகளுக்கான தீர்வுகளை; மனித உரிமை மீறல்களுக்கான தீர்வுகளாக சர்வதேச சமூகத்தின் துணையோடு பெற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தல் என்ற விடயம்வரைக்கும் நீண்டுவந்திருக்கின்ற இலங்கை அரசாங்கத்தின் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் பௌத்த சிங்கள இனவாத சக்திகளின் நாசகார நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் மக்கள் ஒரு ஆழமான பார்வையைச் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவருகின்ற அரசியல் சூழ்நிலைகளானது சிங்கள பௌத்த பேரினவாதத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகும். சிங்கள பௌத்த பேரினவாதம் மேலோங்குகின்ற சந்தர்ப்பத்தில் ஏனைய மொழிபேசுகின்ற மக்களையும், மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களையும் இரண்டாரந்தர நிலைக்குக் கொண்டுசெல்வது இயல்பாகவே நடைபெறக்கூடிய ஒன்றாகும். 

இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. இவ்வாறான இனவாத செயற்பாடுகள் இலங்கை நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியனவல்ல. இலங்கை இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு இராச்சியங்களாக நாடுகளாகக் காணப்பட்டது, பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியானது இப்போதைய ஒரு இலங்கையை உருவாக்கியது. இலங்கை ஒரு நாடு என்ற புதிய அடையாளத்தைப் பெற்றது; பிரித்தானியர் தமது நலன்களுக்காக உருவாக்கிய நாடே ஒரு இலங்கையாகும்; ஆனாலும் இலங்கையின் ஒருமைப்பாட்டை இங்கிருக்கும் மக்கள் விரும்புகின்றார்கள். நேசிக்கின்றார்கள். அது ஒரு நாடாகவே இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதம் இங்கிருக்கும் சிறுபான்மை மக்களை அடக்கியாள எண்ணுகின்றபோது முரண்பாடுகள் தோன்றுகின்றன. அமைதியற்ற நிலை உருவாகின்றது. 1948கள் முதலே தமிழ் மக்களுக்கான உரிமைகள் விடயத்தில் பாரபட்சம் காட்டப்பட்டு வந்திருக்கின்றன. அது இந்த நாட்டை ஒரு இருண்ட ஆபத்தான யுகத்தினுள் தள்ளிவிட்டது. இப்போது முஸ்லிம் மக்களை இலக்குவைத்த இனவாத அடக்குமுறை நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலைமைகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது; இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு, இந்த நாடு அமைதியான முற்போக்கான நாடாகத் திகழ்வதற்கு முஸ்லிம் மக்கள் பல்வேறு அர்ப்பணிப்புக்களைச் செய்துவந்திருக்கின்றார்கள். இலங்கை மக்களைப் பாதுகாப்பதிலும், இலங்கையில் அபிவிருத்தி முன்னேற்றம் அமைதி என்பவற்றினை ஏற்படுத்துவதிலும் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு கணிசமான பங்களிப்புக்கள் காணப்படுகின்றன. தற்போதைய சிங்கள பௌத்த பேரினவாதம் இந்த நாட்டை சூரையாடுவதனையும், இந்த நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதிலும் குறியாக இருப்பதனை நாம் அவதானிக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்திலே இலங்கைக்கு விசுவாசமான இலங்கைப் பிரஜைகள் என்றவகையில் எமது பொறுப்பினை நாம் நிறைவேற்றுவது கடமையாக இருக்கின்றது.

இலங்கையின் முஸ்லிம் மக்கள் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளாக முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்து அவர்களுக்கு வாக்களித்து தமது மக்கள் பிரதிநிதிகளாக அவர்களை பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பியிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்களின் குரலாகச் செயற்படுவது அவசியமாகும். இது நாள்வரையான முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தும்விதமாகவே அமைந்திருக்கின்றன. 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களித்ததனூடாக இலங்கையின் ஜனநாயக சூழ்நிலைகளை இல்லாமல் செய்து சர்வாதிகார ஆட்சிமுறைமையை நோக்கி நகர்த்திய மாபெரும் பலி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இதுவரை நடந்த விடயங்களை மீட்டிப்பேசுவதனைவிடவும் முன்னோக்கியதாக எமது செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் அமைத்துக்கொள்வது சிறப்பாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். 

2010ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஒரு “இன அழிப்பு” GENOCIDE என்கின்ற அடிப்படை மனித உரிமை மீறல்களாகவும் சர்வதேசக் குற்றங்களாகவுமே நோக்கப்படுதல் அவசியமாகும். 

2010ம் ஆண்டுமுதல் இலங்கையில் நிகழ்ந்துவருகின்ற முஸ்லிம் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான அனைத்து அத்துமீறல்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக்கூறுதல் அவசியமாகும். 

2010ம் ஆண்டுமுதல் இலங்கையில் முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கிவருகின்ற மனித உரிமைகள் தொடர்பான நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சர்வதேச சமூகத்தின் உதவியோடு இலங்கையில் மனித உரிமை மேம்பாடுகள் ஏற்படுவதற்கு வழிசெய்தல் அவசியமாகும். 

இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்தவும், சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் அமைதியான வாழ்விற்கான அரசியல், சமுக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்க்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அரசியல் பிரதிநிதிகளும் முழுமையான அர்ப்பணத்தோடு செயலாற்ற முன்வருதல் அவசியமாகும்

போன்ற நான்கு முக்கிய விடயங்களை முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல் பிரதிநிதிகளின் முன்னால் சம்பர்ப்பிக்கின்றோம். இலங்கை முஸ்லிம் மக்கள் இனவழிப்பு முயற்சியொன்றின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இத்தருணத்தில் நாம் இதயச்ய்த்தியோடும், அர்ப்பணிப்போடும் செயற்படாவிட்டால் எமது மக்கள் எதிர்நோக்கும் பாரிய அழிவை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலையேற்படும். எனவே இவற்றில் உரிய கரிசணைகொள்ளுமாறும், இது குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தயவோடு அழைக்கின்றோம். 

வஸ்ஸலாம்

இவ்வண்ணம் 

புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவை.

4 கருத்துரைகள்:

MAATTU SHIRUNEER KUDIKKUM
KALUTHAIKAL. MUSLIMGALIN
VAAKKUKALAIVAITHU VIYAAPAARAM
SHEIUM THUROKIKAL!!!!!

Like '1990 Black October',last decade was 'BLACK DECADE'of Muslims of srilanka.

அன்புள்ள அமைப்பாளர்களே,
இந்த புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவை
எந்த நாட்டில் நிறுவப்பட்டது? இது எப்போது நிறுவப்பட்டது? இந்த அமைப்பின் அலுவலர்கள் யார்? உங்களை தொடர்பு கொள்ள ஒரு முகவரி உள்ளதா? இந்த கட்டுரையை வெளியிட்ட நபரின் பெயர் என்ன? நீங்கள் ஒரு அரசியல் அமைப்பு அல்லது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமா - NGO? தயவுசெய்து இந்த விவரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a comment