Header Ads



முஸ்லிம் சமூகமும், பணக்காரர்களும் கைகொடுக்கத் தவறியதால் மூச்சை நிறுத்தியது நவமணி


- அன்ஸிர் -

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ உரிமைக் குரலாக, வெளிவந்து கொண்டிருந்த நவமணி பத்திரிகை நிறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் நெருக்கடியான தற்போதைய காலகட்டத்தில், முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தின் கட்டுப்பாட்டில் ஒரு அச்சு ஊடகம் இருந்திருக்க வேண்டிய நிலையில், கவலை தரும்படியாக நவமணி நின்று போயுள்ளது.

நவமணி பத்திரிகையின் ஆசிரியராக பல வருடங்கள் பணியாற்றி, என்.எம். அமீன் நவமணி பத்திரிகை நின்றுபோனதை, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கவலை தேய்ந்த குரலில் உறுதிப்படுத்தினார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகிய நிலையில், இன்று முஸ்லிம் சமூகம் தனக்கென ஒரு தனியான அச்சு ஊடகத்தை கொண்டு நடத்த முடியாத பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது.

நவமணி நிறுத்தப்பட போகிறது, அதனை தடுத்து நிறுத்துங்கள் என  பல தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தும்,  அதில் அவர்ககள் அசட்டையாகவே செயற்பட்டுள்ளனர். 

குறிப்பாக இவ்விடயத்தில் முஸ்லிம் பணக்காரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.  அவர்கள் கை கொடுத்திருந்தால், நிச்சயம் நவமணி பத்திரிகை தனது மூச்சை நிறுத்தியிருக்காது.  

அதுபோன்றே இதற்கான பொறுப்பை முஸ்லிம் சமூகமும் ஏற்க வேண்டும். நவமணி வெளிவந்த காலங்களில் அதனை வாங்கி, அதற்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தால் நவமணி தனது மூச்சை நிறுத்தியிருக்காது.

தனக்கான தனி அச்சு ஊடகத்தை முஸ்லிம் சமூகம் இழந்திருக்கின்ற நிலையில் சிங்கள, தமிழ் அச்சு ஊடகங்களையே இனி நம்பியிருக்க வேண்டிய பரிதாபமானதும், பயங்கரமானதுமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை, இங்கு கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

(29-01-2021) நவமணிப்பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்

யார் இதற்கு பொறுப்பு ?

இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் முஸ்லிம்களுக்கென்று தனி முத்திரை பதித்த நவமணிப் பத்திரிகை 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறு விவகாரங்களில் குறிப்பாக உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களில் உரத்து குரல் எழுப்ப வேண்டிய இந்த நேரத்தில் முஸ்லிம்களுக்கென தனித்துவமான ஊடகம் மிகப் பிரதானமானது. 

எனினும் அண்மைய காலங்களில் நவமணிப் பத்திரிகை மூடப்பட்டு விடுமோ, முஸ்லிம் சமூகத்துக்கென குரல் கொடுத்துக் கொண்டிருந்த அச்சு ஊடகம் இல்லாதொரு நிலை தோன்றி விடுமோ என இலங்கை முஸ்லிம்களும்  வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் கவலையை வெளிப்படுத்துகின்ற இந்த நிலையில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் ஒரு முறை சொன்ன விடயம்  ஞாபகத்திற்கு வருகிறது. ஆயுதங்கள், நவீன ஆயுதங்களை விட ஊடகங்கள் யார் கைவசம் இருக்கிறதோ அவர்கள்தான் பலம் பொருந்திய சமூகங்கள் என்று அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் உலகத்தில் யூதர்களாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த சமூகங்களாக இருக்கட்டும் தங்களுடைய உரிமை சார் விடயங்களை வெளிக்கொணர்வதற்கு அவர்கள் இந்த ஊடகத்துறையை கச்சிதமாக பயன்படுத்தினார்கள். பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த நேரத்துக்கு முந்திய காலம் கூட உலகளாவிய ஊடகங்களால் ஒரு விடயம் திரும்பத்திரும்ப  புனையப்பட்டது. அதாவது அங்கே மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லி ஆயுதங்கள் சதாம் ஹுஸைன் வசம் இருப்பதாக புனையப்பட்டது. அவ்வாறு மக்களை நம்ப வைத்தார்கள். மக்களும் அதனை நம்பினார்கள். 

எனவே, ஈராக் மீது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் போர் தொடுப்பதற்கு கூட இந்த ஊடகங்கள் தான் வழிவகைகள் செய்தன.

இலங்கையில் ஜனாஸா எரிப்பு, திருமண விவாக - விவாகரத்து சட்டங்களில் கைவைத்தல், மத்ரஸாக்கள் மீதான பொறாமை இப்படி நிறைய முஸ்லிம்களுக்கு எதிரான நகர்வுகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

சமகாலத்தில் ஆசியா கண்டத்தில் இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளிலும் முஸ்லிம் விரோதப் போக்கு அதிகரித்திருக்கின்றன. அங்கேயும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்குரலாக இருக்கின்ற நவமணி பத்திரிகையின் வகிபாகம் இந்த காலத்தில் தான் மிகப் பிரதானமாக இருக்க வேண்டும்.

என்றாலும் நவமணி தொடக்கத்திலே வாரப் பத்திரிகையாக,  அதனைத் தொடர்ந்து வாரத்திற்கு ஐந்து பத்திரிகையாக, அதனைத் தொடர்ந்து வாரத்திற்கு மூன்று பத்திரிகையாக, அதனைத் தொடர்ந்து வாரப் பத்திரிகையாக வெளிவந்தது. பின்னர்  கொரோனா அலை காரணமாக ஒன்லைன் மூலமாக வெளிவந்து கொண்டிருந்தது. ஒன்லைன் மூலமாக வெளிவந்த நவமணிப் பத்திரிகை கூட  தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நவமணிப்பத்திரிகை மூடப்படலாம். இதற்கு முஸ்லிம் தனவந்தர்கள் கைகொடுத்து உதவ வேண்டும். முஸ்லிம் சமூகம் இது குறித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் கூட, முஸ்லிம் தனவந்தர்கள் இன்னும் உறங்கு நிலையில் இருப்பதாலும் அவர்கள் முஸ்லிம்களுக்கென ஓர் ஊடகம் வேண்டும் என்று ஒரு விழிப்புநிலை அடையாததாலும் துரதிஷ்டவசமாக இன்று முஸ்லிம்களுக்கு என்று இருக்கின்ற ஓர் அச்சு ஊடகம்,  ஒரு தனித்துவ ஊடகம், முஸ்லிம்களுடைய உரிமையை  உரத்து முழங்கக்கூடிய ஓர் ஊடகம் மூடப்படக்கூடிய  அளவுக்கு ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் ஊடகங்கள் நிறுத்தப்படுவதற்கான இதன் முழுப்பொறுப்பையும் முஸ்லிம் சமூகத்திலுள்ள தனவந்தர்களும் முஸ்லிம் சமூகமும் தான் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல.

நிச்சயமாக! வேற வேற வர்த்தகத்துறைகளில் வேற வேற தேவைகளுக்காக முஸ்லிம் தனவந்தர்கள் எத்தனையோ கோடிக்கணக்கான பணங்களைக் கொட்டி இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம் சமூகத்துக்கு என்று ஒரு தனி ஊடகம், முஸ்லிம் குரல்களை ஒலிக்கச் செய்வதற்கான ஒரு பிரத்தியேகமான ஊடகத் தேவையை முஸ்லிம் தனவந்தர்கள் இன்னும் உணரவில்லை. அவர்களுக்கு எத்தனை தரம் உணர்த்தியும்கூட அவர்கள் அதனை கவனத்தில் எடுக்கவில்லை. 

அந்த வகையில் முஸ்லிம்களுக்கான ஊடகம் நிறுத்தப்பட்டால் அது தொடர்ந்து தனது பிரசவங்களை செய்யாவிட்டால் எதிர்காலம் நிச்சயமாக இந்த முஸ்லிம் பணக்காரர்களையே குற்றம் சுமத்தும் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

ஆகவே, இனியாவது முஸ்லிம் ஊடகங்களுக்கு கை கொடுத்து உதவுதல், முஸ்லிம் ஊடகங்களை கைதூக்கி விடுதல், முஸ்லிம் ஊடகங்களுக்கு விளம்பரங்களை பெற்றுக்கொடுத்தல், முஸ்லிம் ஊடகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல் போன்ற விடயங்களில் முஸ்லிம் சமூகம் தனது கவனத்தைச் செலுத்துதல் அவசியமாகும்.

No comments

Powered by Blogger.