Header Ads



குவைத்தில் உள்ள இலங்கைத் தூதுவரின் விளக்கம்


தொழில்வாய்ப்புக்காக குவைட் சென்று, நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குவைட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைட்டுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்று நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் சிலர் தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்து, குவைட்டுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் ஜவுஃபரிடம் Hiru செய்திசேவை வினவியபோது, அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

தூதரகத்தின் பாதுகாப்பு மனையில் 72 பேர் வரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி முதல் தூதரகத்துக்குள் யாருக்கும் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும் நாளாந்த தூதரகப் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்தநிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகங்கள் ஊடாக அங்கு தொழில்வாய்ப்புக்கு சென்றவர்கள், தூதரகத்துக்குள் பிரவேசிக்க அழுத்தங்களை கொடுத்துவருவதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

குவைட் நாட்டுக்கு இலங்கையர்கள் 1,10,000 பேர் தொழில்வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.

அவர்களில் 7000 பேர் மாத்திரமே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனையில் பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு பதிவு செய்துக் கொண்டவர்களில் 3000 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம், தனியார் முகவர் நிலையங்கள் ஊடாக குவைட்டுக்கு சென்று வீசா காலம் நிறைவடைந்த மற்றும் தங்களைப் பதிவு செய்துக் கொள்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாத 4600 பேர் நிர்கதியாகி இருப்பதாக, குவைட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த நாட்டில் பீசீஆர் பரிசோதனை செய்துக் கொள்வதற்கு ஒருவருக்கு இலங்கை நாணயப் பெறுமதியில் 18000 ரூபாய் அறவிடப்படுவதால், அங்கு நிர்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு அந்த தொகையை செலுத்தி பிசீஆர் செய்துக் கொள்ள முடிவதில்லை.

இந்த நிலையில் அங்கு வீசா காலம் நிறைவடைந்த நிலையில் இருக்கின்ற இலங்கையர்களை பதிவு செய்து நாட்டுக்கு அனுப்புவதற்கு நீண்டகாலம் செல்லும் என்றும் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இப்படியான சூழ்நிலையை தூதரகத்துக்கு வருகின்ற வீசாகாலம் நிறைவடைந்த இலங்கையர்களுக்கு விளக்கமளித்தப் பின்னர், அவர்கள் தூதரகத்துக்கு முன்னால் குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் குவைட்டுக்கான தூதுவர் மொஹமட் ஜவுஃபர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர்களை கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.