February 17, 2021

அலி ஷப்ரி அவர்களே, இனவாதிகளின் கூச்சல்களுக்கு காது கொடுக்காமல் பயணத்தை தொடருங்கள்


- வஃபா பாறுக் -

நீதி  அமைச்சர் அலி ஷப்ரியின் துணிவான தர்க்கவியல் நிலைப்பாடுகள் மர்ஹூம் அஷ்ரஃபை அறிந்திராத இன்றைய இளம் தலைமுறைக்கு அவர்  இன்றைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்திருந்திருந்தால் எவ்வாறு செயற்படுவார் என்பதை அச்சொட்டாக  ஒரு வரியும் பிசகாமல் காண்பிக்கின்றது.

இனவாதிகளுக்கு அஞ்சி கோழி முட்டைக்குள் ஒழிந்து கொண்டு ராஜதந்திர அரசியல் செய்கின்றோம் என்று சொல்வது மர்ஹூம் அஷ்ரஃபின் வழிமுறையல்ல.

இன,மத அடையாளமுடைய கட்சிகளினூடான அரசியலை அமைச்சர் அலி ஷப்ரி கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளாதவர் என்பதை தவிர மர்ஹூம் அஷ்ரஃபுக்கும் அவருக்குமிடையில்  தர்க்கவியல் அணுகுமுறையில் பெரிய வேற்றுமைகளில்லை.

எத்தனை தேரர்கள் கூச்சலிட்டாலும் நியாயத்தை எடுத்துரைப்பதில் மர்ஹூம் அஷ்ரஃப் பின்னின்றதில்லை.

அதே நிலைப்பாட்டுடன்தான் இன்றைய காலங்களில் அலி ஷப்ரியும் இயங்குகின்றார்.

கடந்த வாரம் அலி ஷப்ரி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது.

'ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை அமுல் படுத்த வேண்டுமாயின் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை நீக்குவது போல் பௌத்தர்களின்,கிருஸ்தவர்களின், இந்துக்களின் தனியார் சட்டங்களையும் நீக்கவேண்டும்' என்று அவர் கூறியதை பௌத்த தேசியவாதிகளுக்கு சகிக்க முடியாமல் கொதித்தெழுந்தாலும் நாட்டின் நீதியமைச்சராக அவர் கூறியது அப்பட்டமான உண்மை.

அலி ஷப்ரி முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் கிழக்கை சேர்ந்தவரல்ல.

கடும்போக்கு பேரினவாதிகள் நிறைந்திருக்கும் தெற்கை சேர்ந்தவர்.

நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவருமல்ல.

தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்.

எதிர்கட்சியில் இருப்பவருமல்ல.

ஆளும் கட்சியின் அமைச்சர்.

இவ்வளவுக்கு மத்தியில் அலி ஷப்ரிக்கு இருக்கும் துணிவு ஒன்றே ஒன்றுதான்.

நீதியை எடுத்துரைப்பதால் என்ன நேர்ந்தாலும் பறவாயில்லை என்ற நிலைப்பாடுதான்.

அடிப்படைவாதி என்று சொல்லுங்கள், அல்லது தீவிரவாதி என்று வேண்டுமாயினும் சொல்லுங்கள், அதையும் தாண்டி பாராளுமன்ற உறுப்புரிமையை வேண்டுமாயினும் பறியுங்கள்.

உண்மையை உரத்துப்பேசிக்கொண்டே இருப்பேன்' என்பதே அலி ஷப்ரியின் நிலையான நிரந்தரக்கொள்கை.

அஷ்ரஃபின் வாரிசு என்று சத்தமில்லாமல் மான் சுடப்போனவர் மூர்ச்சையாகி விட்டாரா என்று சந்தேகிக்க வேண்டிய நிலையில், அலி ஷப்ரி யாருக்கும் அஞ்ஞாமல் நீதியின் குரலாய் ஒலித்துக்கொண்டிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அலி ஷப்ரி அவர்களே!

இனவாதிகளின் கூச்சல்களுக்கு காது கொடுக்காமல் உங்கள் பயணத்தை தொடருங்கள்.

உணர்வுகளை தொலைத்து அடிமைகளாய் வாழவும் சம்மதிக்க தூண்டப்படும் இளைஞர்களுக்கு உரிமையின் உயிர்ப்பை விதையுங்கள்.

நாம் அடிமைகள் அல்ல.

சக பிரஜைகள்  என்பதை ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர்களின் உள்ளத்திலும் ஆழமாய் பதியுங்கள்.

எமது பிரார்த்தனைகள் உங்களை என்றும் தொடரும்

7 கருத்துரைகள்:

சாத்தியமே வெல்லும்

நிச்சியமாக

அசத்தியம் அழிந்து போகும்

இனரீதியாக கட்சிகள் தோற்றம் பெற்றதற்கான காரணத்தை அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இருந்தாலும் அவருடைய மனதைரியம் பாராட்டுக்குரியது.

இனவாதிகளின் கூடு என்று தெரிந்துகொண்டே அலி சப்ரி அவர்கள் அங்கு சென்றார் இன்று அந்த இனவாதிகளால் அவர் மீது எய்றப்படும் அம்புகள் அவரின் பக்கம் முஸ்லிம் சமூகத்தை இழுக்க அரங்கேற்றப்படும் நாடகம் ஆகவும் இருக்கலாம்.
அரசியல் என்பது ஒரு நாடக மேடை

Excellent advice to Hon. Minister.

Post a comment