February 09, 2021

'சுமந்திரனும், சாணக்கியனும் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலிலே முடிந்திருக்கும்' - சிவாஜிலிங்கம்


-எஸ். நிதர்ஷன்

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலிலேயே முடிந்திருக்கும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொத்துவில்-பொலிகண்டிப் பேரெழுச்சி  தனிப்பட்டவர்களின் வெற்றி அல்ல எனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாதென்றார்.

"இந்தப் பேரணியில் முக்கியமான விடயம் வெளியிலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சாமியாரை முன்னால் நிறுத்திவிட்டு பின்னாலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சாமியாரில் பிழை இல்லை.

"இதில், அரசியல்வாதிகள் வேண்டாம் என்பது போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் திகதி பொத்துவிலில் பேரணி ஆரம்பமானபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல் விட்டிருந்தால் அந்தப் பேரணி பொத்துவிலோடு முடிந்திருக்கும்.

"அங்கு போன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை சொல்வது சரியல்ல. அதிலே, மிக முக்கியமாக முன்னணியில் சுமந்திரனும் சாணக்கியனும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது.

"அவர்களுக்குடன் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம், விமர்சனங்கள் இருக்கலாம். எல்லோரும் சேர்ந்து இதை சாதித்தோம் என்பதைப் புரிந்துகொள்ளாமல் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல.

"சில கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைப் பேசலாம். தீர்த்துக்கொள்ளலாம். அதை விடுத்து திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் வைத்து கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என அறிவிக்கின்றார்" எனவும், சிவாஜிலிங்கம் கூறினார்.

தங்கள் வீட்டுப் பிரச்சினையைக்கூட பொதுவெளியில் பேசவேண்டிய அவசியமில்லை எனத் தொரிவித்த அவர, அதன் எதிரொலியாக திருகோணமலையிலிருந்து பேரணியில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை எனவும் அவருக்கு வேறு தனிப்பட்ட காரணங்களும் இருந்திருக்கலாம் எனவும் கூறினார்.

"முன்னுக்கு நாங்கள் தான் வர வேண்டும் என சாமியாரை வேள்விக்குக் கொண்டு செல்வதைப் போல வளையம் பிடித்துக்கொண்டு கொண்டு சென்றார்கள். இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் தலைமை தாங்கி முன் செல்லலாம் என்று எங்களுக்கும் உடன்பாடு இருந்தது. முதலில் மதத்தலைவர்கள், பின்னால் பல்கலைக்கழக மாணவர்கள், அதன்பின்னால் சிவில் சமூகத்தினர், அதையடுத்து அரசியல்வாதிகள் எனக் கூறினார்கள்.

"நான் ஒன்றைத் தெளிவாகக் கூறுகிறேன். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. இது தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல. எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி. இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் வேண்டாம், இவர் வேண்டாம் எனச் சொல்ல முடியாது. தனிப்பட்ட கட்சிப் பிரச்சினைகளை வேறு இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

"இதேவேளை, சிலர் நினைக்கிறார்கள் கல் வைத்த இடம் ஊறணியென, வல்வெட்டித்துறையென. அது தவறானது. அதுவும் பொலிகண்டிதான். பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில்தான் கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டத்தில் இருக்கவில்லை. திடீரென செய்யப்பட்ட ஏற்பாடு.

"ஆனால், சுமந்திரனும், சாணக்கியனும் அதில் போராட்டத்தை முடித்து வைப்பதை போல நடந்து கொண்ட விதம் பிழையானது. பொலிகண்டி ஆலடியில் மக்கள் வற்புறுத்தியிருக்கலாம். ஆனால், தலைவர்கள் தலைமை தாங்கிச் சரியான வழிகாட்ட வேண்டும். ஆனால், அப்பொழுது தலைமைத்துவம் இல்லாமல் போய்விட்டது.

"நான் திக்கம் சந்திக்குப் போய்க்கொண்டிருந்த போது, சுமந்திரனும் சாணக்கியனும் நிகழ்ச்சியை முடித்துவிட்டனர் எனச் செய்தி வந்தது. பின்னர் சாமியார் அங்கு வந்து பிரகடனம் வாசித்து முடித்து வைக்கப்பட்டது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

செல்வநாயகம் காலத்துக்குப்பிறகு அறப்போராட்டத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்திருக்கிறோம். அனுபவம் இப்படித்தான் வளரவேண்டும். சாணக்கியனுக்கு பொதுவான ஆதரவு இருந்தது. கூட்டமைப்பு தலைமை வெற்றிடமாகும். மாகும் கைப்பற்ற உதவும் என்கிற நோக்கத்தோடு செயற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஊகம்தான், உறுதிப்படுத்த முடியவில்லை. எல்லா விமர்சனங்களோடும் முஸ்லிம்களதும் மலையகத்தமிழரதும் பங்குபற்றுதலோடு நடந்த இப்பயணம் போருக்குப் பிந்திய மிக முக்கியமான பாச்சலாகும். இது ஒரு சாதனைப் பயணம் என்பதை மறுக்க முடியாது.

Aanaaalum pachchonthigal aangaange....!!!

Jaffna politicians opposed Batticaloa MP Rajadurai’s leadership in 1970’s, even now they will not accept Shanackian’s leadership even though he has tremendous talent for leadership and oratorship

Post a comment