February 13, 2021

எம்.ஜி பசீர் என்ற, யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஆளுமை

 -அஜ்மல் மொஹிடீன் -

எம்.ஜி பசீர் முன்னாள் யாழ்,மாநகர சபை உதவி மேயர் நேற்று இரவு (12/02/2021) புத்தளம் வைத்திய சாலையில் காலமாகி இன்று (13/02/2021)காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இளமைக் காலத்தில் கம்யூனிச பொதுவுடைமை சித்தாந்தத்தோடு செயற்பட்டார்,மறைந்த கம்யூனிஸ்ட் கார்த்திகேசு அவர்களோடு நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.கார்த்திகேசு சேருடைய (கார்த்திகேசு சேர் யாழ்,இந்து‌கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் நான் யாழ்,இந்துக் கல்லூரியில் மாணவனாக இருந்திருக்கிறேன்)

கார்த்திகேசு சேருடைய ஞாபகார்த்த குழுவிலும் பசீர் அவர்கள் அங்கத்தவராக இருந்தார்,

1969ல் வடகிழக்கில் இடம்பெற்ற‌ பெரும் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது  யாழ்,புதிய சோனக தெரு மக்களுக்காகவும், யாழ் சோனக தெரு மக்களுக்காகவும் அன்று பல சமூக உதவிகளை பெற்றுக் கொடுத்தார்,

அன்று சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடிழந்த யாருமற்ற ஒரு‌ மூதாட்டியை தன் பொறுப்பில் பொறுப்பேற்று அந்த மூதாட்டி இறக்கும் வரை தன் தாய் போல் தன் வீட்டில் பராமரித்தார்‌.

1969ல் நேரடி அரசியலில் இறங்கினார்,அல்பிரட் துரையப்பாவோடு இணைந்து அரசியல் பயணம் செய்திருக்கிறார்,அதே ஆண்டில் நடந்த யாழ்,மாந்கர சபை தேர்தலில் போட்டியிட்டு யாழ்,மாநகர சபை அங்கத்தவரானார், அன்று யாழ்,சோனகதெருவின் இளைஞர்கள் யாவரும் அவரோடு கை கோர்த்து நின்றனர்.

அல்பிரட் துரையப்பா யாழ்,மாநகர மேயராக இருந்த காலத்தில் கணவான்கள் ஒப்பந்த அடிப்படையில் எம்.ஜீ பசீர் அவர்களும்,இன்னொரு யாழ்,மாநகர சபை உறுப்பினராக இருந்த மெக்ஸா காதர்(M.A.C.S.A. Cader) அவர்களும் உதவி மேயராக பதவி வகித்திருக்கிறார்கள்.

1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் வட மாகாண முஸ்லிம் சமூகம் இனச் சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்ட போதும் தமிழ்,முஸ்லிம் நல்லுறவு பாதிப்புற்று விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார்.  யாழ்,முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்ட பின் யாழ்,முஸ்லிம் சமூகம் மிக விரைவாக மீள புலிகளால் அழைக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் இருந்தார்.

முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்ட அன்றைய கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மறைந்த அஸ்ரப் அவர்கள் யாழ்,முஸ்லிம் சமூகப் பிரமுகர்களோடு கலந்துரையாடிய நேரத்தில் "யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீள் குடியேற்றத்தை யாழ்,சமூகத்திடம் விட்டு விடுங்கள்,நாங்கள் யாழ்,தமிழ் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை செய்து கவனித்துக் கொள்கிறோம்" என்று வேண்டுகோள் விடுத்தார்.ஏனெனில் அரசியல் யாழ்,தமிழ் முஸ்லிம் உறவை இன்னும் தூரமாக்கி விடுமோ என அஞ்சியே அவ்வாறு கூறினார்.

அதே போல் 1994ல் பொதுத் தேர்தல் காலத்தில் வெளியேற்றப்பட்ட யாழ்,முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பு உரிமையை பயன்படுத்தி யாழ்,முஸ்லிம் பிரமுகர்களை கொண்ட ஒரு குழுவை தேர்தலில் இறக்கினால் மூன்று யாழ்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று களமிறங்க ஆயத்தமான போது யுத்தகால சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பவாத அரசியல் யாழ் தமிழ் முஸ்லிம் சமூக உறவில் உணர்வில் விரிசலை ஏற்படுத்தி விடும் விரைவாக ஒருநாள் யாழ் முஸ்லிம் சமூகம் மீள்குடியேறும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் அவ்வாறான முன்னெடுப்பை தலைமை தாங்கி தடுத்தார்.அதையும் மீறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாழ்,மாவட்டத்துக்கான தேர்தலில் அன்று களமிறங்கிய போது யாழ்,முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என தடுத்து பிரசாரம் செய்தார்‌. இச்செயற்பாட்டால் 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வேட்பாளர் புத்தளத்தை சேர்ந்த டொக்டர் இல்யாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

 அதுவும் ஒரு வகையில் யாழ்,முஸ்லிம் சமூகம் புத்தளம் முஸ்லிம் சமூகத்துக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடனாகவே அமைந்தது,அன்று 1990ல் வடபுல முஸ்லிம் சமூகம் வெறுங்கையோடும்,உடுத்த உடையோடும் துரத்தப்பட்ட போது இடமளித்து,சகலதும் வழங்கிய புத்தளம் முஸ்லிம் சமூகத்துக்கு யாழ்,முஸ்லிம் சமூகம் என்றும் நன்றியுடையதாகவே இருக்கும்.

பின்னர் விடுதலை புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு யாழ்,மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாக்கப்பட்ட போது சட்டத்தரணி ஆர்.இமாம் போனஸ் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்து செயற்பட்டார்.

 சட்டத்தரணி இமாம் எம்.பீ யின் பன்முப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 35 இலட்சம் ரூபா நிதியை புத்தள பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்ய ஆலோசனை வழங்கி அதன் மூலம் சில பாடசாலைகளுக்கு சாஹிரா கல்லூரி, ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி, சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியா

லயம், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம், என்பவற்றுக்கும் சாலிஹீன் பள்ளி, முகாம்களில் சில பள்ளிகள், நீர்விநியோகம் என திட்டங்களை செய்து கொடுக்க வழி சமைத்துக் கொடுத்தார்.

இளமைக் காலத்தில் இருந்து கடும் நோய்க்குள்ளகும் வரை யோகாப்பியாச பயிற்சியில் தினமும் ஈடுபாடுடையவராக இருந்தார்.

அவருடைய ஈடேற்றத்திற்காக அனைவரும் பிரார்த்திப்போம்.

2 கருத்துரைகள்:

Long before he entered politics, he once started non stop cycling at Jinnah grounds. I think he managed to do about 60+ hours, not sure about exact number of hours.

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ

Post a Comment