Header Ads



நான் கண்ட மன்சூர் ஹாஜியார் - மாத்தளை மண் ஈன்றெடுத்த மாமனிதர்


- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -

மாத்தளை மண் ஈன்றெடுத்த மாமனிதர் மன்சூர் ஹாஜியார். சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுடன் நெருக்கமான உறவும் தொடர்பும் எனக்கு இருந்து வருகின்றது.

அவர்களது மிருதுவான சுபாவமும் பணிவான நடத்தையும் பண்பான கொடுக்கல் வாங்கலும் நேர்மையான நிர்வாகத் திறனும் வாரி வழங்கும் வள்ளல் தனமும் அவரை மக்கள் மனதில் என்றும் நீங்காது, மறையாது வாழ வைத்து விட்டது. அவர்கள் என்றும் எமதுள்ளங்களில் இருந்து மறையவே மாட்டார்கள்.

அவர்களது இழப்பு அவர்களது குடும்பத்துக்கு மாத்திரமன்றி சமூகத்துக்குமான ஓர் இழப்பாகும். 

தனது குடும்பத்தை கவனித்ததை விடவும் பலமடங்கு மேலாகவே அவர் தனது சமூகத்தை கவனித்தார்கள். தனது குடும்பத்தின் மீது இரக்கம் காட்டியதை விடவும் சற்று மேலாகவே சமூகத்தின் மீது இரக்கம் காட்டினார்கள். தனது வியாபாரத்தை நிர்வகிப்பதைப் போன்றே, சமூக நிர்வாகத்தை கவனிப்பதில் குறையின்றி கவனம் செலுத்தினார்கள்.

கோடான கோடி செல்வத்தை ஓய்வின்றி ஓடோடி தேடினாலும் அது தனக்காக மாத்திரமின்றி தனது சமூகத்துக்கு போய் சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

மாத்தளை நகரில் மின்னும் ஒளிவிளக்காக இருந்த மன்சூர் ஹாஜியார் அவர்கள், மாத்தளை நகரில் அறிவு பொக்கிஷமான அல் ஹலீமிய்யாவின் தந்தையாவார்கள். 

அங்கு  பயின்று பட்டம் பெற்ற ஹாபிள்கள், ஆலிம்களது தந்தையை போன்று அந்தஸ்தில் மதிக்கப்படட்டவர்கள். 

ஏனென்றால் ஒரு தந்தை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கின்ற போது அது முறையாக கொடுக்கப்படுகிறதா என்பதை கவனிப்பது போன்று மத்ரசா மாணவர்களது உணவைக்கூட இடைக்கிடையே வந்து சுவைத்து ருசித்து தரமாக இருக்கிறதா? என்று தரம்பார்த்து செல்வார்கள்.

நீண்ட பயணங்கள் போய் வருகின்றபோது குழந்தைகளுக்கு ஏதாவது அன்பளிப்புகளை வாங்கி வருவதை போல, மத்ரஸா மாணவர்களையும் தனது குழந்தைகளாக மதித்து ஏதாவது காணுமிடத்து அவற்றை வாங்கி வந்து மாணவர்களுக்கு பகிர்ந்தளித்து அதனை கண்டு கண்குளிர்ச்சி அடைந்தார்கள்.

மாத்தளை டவுண் பள்ளிவாசலை மிளிரச்செய்வதில் ஒரு பெரும் பங்காளியாக காட்சியளித்தார்கள் என்பது என் மனக்கண்ணில் நீங்காத நினைவில் உள்ளது.

அதனோடு இணைந்ததாக அமையப்பெற்றுள்ள அல் ஹலீமிய்யா  மத்ரஸாவின் தாபகர்களிள் ஒருவராக அவர்கள் இருந்து இறுதி மூச்சுவரையில் அதன் வளர்ச்சியிலும், சிந்தனையிலும் மூழ்கியிருந்தார்கள்.

சமூக மாற்றங்களை உருவாக்குவதில் அரபு மத்ரஸாக்களின் பங்களிப்பு மறுக்கமுடியாது என்பதை உணர்ந்து, மாத்தளையில் நல்ல கல்வித்திட்டமிடலுடன் கூடிய முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு மத்ரசா தேவை என்பது உணரப்பட்ட போது, தனது முழுச் சொத்தையும் அதற்காக தர்மம் செய்வதற்கு முன்வந்தவர்கள்தான் இன்று நாங்கள் இழந்திருக்கும் மாத்தளை மன்சூர் ஹாஜியார்.

தேசிய ரீதியில் பல மதரசாக்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சிறுவர் பூங்காக்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என எண்ணிலடங்காத பணிகளை செய்தவர்தான் மன்சூர் ஹாஜியார். 

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் ஓர் அடியாராகவே அவர்கள் இருந்து வந்தார்கள். ஏனெனில் என்றும் தனது பழைய நினைவுகளை மறந்தது கிடையாது; தனது ஆரம்பகால வாழ்க்கையில் ஏற்பட்ட ஏழ்மை, வறுமை என்பதை என்றுமே அவர்கள் மறந்தது கிடையாது.

எவரை கண்டாலும் ‘மகன்’ என்ற அன்பான வார்த்தையை பாவித்து உள்ளத்தை அப்படியே கொள்ளை கொள்வார்கள். புன்முறுவல் பூத்தமுகம் அவர்களை மெருகூட்டியது. 

எந்நிலையிலும் மனோவலிமை கொண்டவர்களாகவும் நல்ல சிறந்த ஆலோசனை வழங்குபவர்களாகவும் காணக்கூடியதாகவும் இருந்தார்கள். 

பயணங்கள் செல்கையில் பயணச்செலவை மொத்தமாகவே தான் பொறுப்பெடுத்து அதில் பூரித்து செலவிடக் கூடிய ஒரு மாமனிதர்.

அவர்களுடன் காத்தான்குடி, மூதூர், வெலிகாமம், யாழ்ப்பாணம், கெலிஓயா மற்றும்  நுவரெலிய போன்ற பல பிரதேசங்களுக்கு அவர்களுடன் நான் பயணம் செய்திருக்கிறேன். 

ஒருவரை அறிந்துகொள்ள வேண்டுமானால் அவருடன் பயணம் செய்து பார் என்பதற்கு ஏற்ப, மன்சூர் ஹாஜியாருடன் பயணம் செய்தவர்கள் அதனை நூறுவீதம் புரிந்து இருப்பார்கள் அவர் ஒரு மனிதர்தான் என்பதை.

ஒரு பயணத்தில் ஹலீமிய்யா மாணவர்களுடன் மன்சூர் ஹாஜியார் அவர்களும் அதன் நிர்வாகிகளும் சேர்ந்து வந்தார்கள். 

அந்த பயணத்திலே அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் பிரகாரம் பண்டாரவளை என்ற ஊரில் ஓர் ஆழமான ஆற்றில் நான் மூழ்கிவிட்டேன்; அல்லாஹ்வின் உதவியால் எனது பயணத் தோழர்கள் (உஸ்தாத் கலீல் பஹ்ஜி, உஸ்தாத் மிஹ்ழார் தீனி, அல் ஹாபிள் புவாஜி) ஆகியோர் என்னை மீட்டெடுத்தார்கள். (அல் ஹம்து லில்லாஹ்)

இந்த விடயம் தெரிந்தவுடன் மன்சூர் ஹாஜியார் அவர்கள் உடனடியாக அந்த பயணத்தை திருப்பிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். எனினும் நான் முன்னின்று இல்லை எமது பயணத்தை முடித்துக் கொண்டு வருவோம் என்று மன்சூர் ஹாஜியாரை ஆறுதல் படுத்தினேன். அதனை ஏற்றுக்கொண்ட மன்சூர் ஹாஜியார் அவர்கள், நான் உங்களுக்காக ஒரு நேர்ச்சை செய்து இருக்கிறேன். அதனை நீங்கள் நிறைவேற்றி விடுங்கள் என்று சொன்னார்கள். நானும் அதனை ஆம் என்று ஏற்றுக்கொண்டேன். எனினும் நீண்ட காலமாக அந்த நேர்ச்சையையை நிறைவேற்ற மறந்திருந்தேன். திடீரென்று அதனை நினைவுபடுத்தி, உங்களால் முடியாவிட்டால் நான் அதனை நிறைவேற்றி விடுகிறேன் என்றார்கள்.

ஹாஜியார் அவர்களுடைய அழுத்தத்தின் காரணமாக அந்த நேர்ச்சையை நீண்ட காலத்துக்குப் பிறகு நிறைவேற்ற முடிந்தது. நிறைவேற்றி முடிந்தபின் அவர்களிடம் இந்த தகவலை சொன்னபோது, அது அல்லாஹ்வுக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமை. அதனை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்று மீண்டும் அதை உறுதி செய்துகொண்டார்கள்.

பிறர் நலம் பேணுவதில் மிஞ்சியவர் மன்சூர் ஹாஜியார். ஒரு தடவை எனக்கு சுகவீனமுற்று மத்ரசாவில் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று வந்த அவர்கள் அவசரமாக என்னை வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார்கள். இந்த நினைவுகள் எல்லாம் ஒரு தந்தை அல்லது ஒரு சகோதரன் தன்னுடைய சகோதரர்களுடன் நடந்து கொள்ளக்கூடிய அன்புக்கு நிகரான ஒரு செயல்பாடாகும்.

யாரை கண்டாலும் சுகம் விசாரிப்பதும் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை சுகம்விசாரிக்க செல்வதும் ஜனாஸா வீடுகள் என்று கேள்விப்பட்டால் முதல் மனிதராக அங்கு நிற்பதற்கு முயல்வார்கள்.

ஒரு காலத்தில் ரமலான் மாதம் வந்துவிட்டால் அவர்களது வீட்டில் மக்கள் வெல்லம் நிறைந்து காணப்படும். எவரையும் வெறும் கையோடு திருப்பி அனுப்பியது கிடையாது. மக்களுக்கு நோன்பு நோற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பார்கள்.

இஸ்லாமிய கல்வி போதிக்கப்படும் மத்ரசாக்களுக்கு எத்தனை கோடி செலவழித்து இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்கும்.

ஆனால் அமைதியான அடக்கமான வலக்கரம் கொடுக்கக் கூடியதை இடக்கரம் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு இரகசியமான தர்மம்செய்த ஒரு மகா கொடையாளி. 

எமது ஊரிலுள்ள (மஸ்ஜிதுல் நூர்) பள்ளிவாசலின் தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டார்கள். பள்ளி இமாமுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில் பெரும் பகுதியை அவர்கள் சுமந்து கொண்டார்கள். 

இதுபோன்று மாத்தளை நகரை அண்மித்த எல்லாம் கிராம மஸ்ஜித்களுக்கும் அவர்களது உதவிக்கரம் நீட்டப் பட்டிருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

கஞ்சத்தனம் என்றால் என்னவென்று தெரியாது ஒரு பிஞ்சுமனம் அவர்களது உள்ளம்.

அல்லாஹ்வின் திருப்திக்காக எதையும் செய்யும் ஒரு நல்ல மனிதராக தன்னை இந்த பூமியிலே உருவாக்கிக் கொண்டார்கள். மக்களது விருப்பு வெறுப்புகளை பொருட்படுத்தாது அல்லாஹ்வின் விருப்பினை மாத்திரம் முதன்மைப்படுத்தும் ஒரு நல்ல மனிதராக அவர்களை நாங்கள் கண்டோம்.

மத்ரசாக்கள் மாத்திரமல்ல; பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஏனைய பொதுப்பணிகள் அனைத்திலும் ஒன்றரக் கலந்து செயல்பட்ட ஒரு ஒளி விளக்காக நாங்கள் அவரை பார்க்கிறோம்.

அடிக்கடி அல் ஹலீமிய்யாவை பற்றியும் அதன் தேவைகளைப் பற்றிய கவலைப்படக் கூடிய ஒரு மேலான குணம் அவர்களிடத்திலே காணப்பட்டது.

ஏழைகளது கஷ்ட உணர்வுகளை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வார்கள்; இன்று யாருக்கெல்லாம் உதவி செய்ய முடியும் என்று திட்டமிட்டு கொள்வார்கள். பிறருக்கு உதவி செய்வதிலும் நற்காரியங்கள் செய்வதிலும் முந்திக் கொள்வார்கள்.

மாத்தளை நகருக்கு யாராவது ஆலிம்கள் வருகின்ற போதும் அவர்களை வரவேற்பதில் மன்சூர் ஹாஜியார் முன்னிலையில் இருப்பார்கள். அவர்களை சந்தோஷப்படுத்துவதிலும் அவர்கள் முன்னிலையில் இருப்பார்கள்.

மாத்தளை டவுண் பள்ளி, அல் ஹலீமிய்யாவின் நிர்வாகங்களில் அவர்களோடு இருந்தவர்களும் அவர்களுக்கு நிகரானவர்களேயாவர். அவர்களே தமக்குள் மனம்விட்டு கலந்தாலோசனை செய்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியை பொறுப்பெடுத்து சமூகத்துக்கு குறை இல்லாது நிறைவாக பணி செய்தவர்கள்.

அதே அடிச்சுவட்டை தனது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 

‘வியாபாரத்தில் நேர்மையானவர்கள் நபிமார்களுடன் மறுமையில் இருப்பார்கள்’ என்ற அருமை நபியவர்களின் பொன்மொழியை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது மண்ணறையை பொன்னறையாக மாற்றி, அன்னாருக்கு அருள்புரிவானாக! அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் பொறுமையையும் வழங்குவானாக! அன்னார் செய்த சிறந்த பணிகளை தங்குதடையின்றி செய்து கொள்வதற்கு கிருபை செய்வானாக! அவர்களது வியாபாரம் மற்றும் செல்வங்களில் மேலும் பறக்கத் செய்வானாக!!!

1 comment:

  1. நாம் அல்லாஹ்வுக்காகவே வாழ்கின்றோம்.அவனிடமே மீண்டு செல்வோம் என்ற அல்குர்ஆன் வசனப்படி அன்னார் அல்லாஹ்விடம் சென்றுவிட்டார்கள். அன்னாரின் பாவங்களை மன்னித்து அவருடைய நற்செயல்களை அங்கீகரித்து அன்னாரை ஜன்னதுல் பிர்தவ்ஸில் சேர்த்துவைப்பானாக. இழப்பில் தவிர்க்கும் அன்னாரின் குடும்பத்துக்கு பொறுமையையும்,நல்ல பாக்கியத்தையும் யாஅல்லாஹ் நீ அருளி கிருபை செய்வானாக.

    ReplyDelete

Powered by Blogger.