Header Ads



ஜனாஸாக்களை அடக்க அனுமதி மறுப்பது, சுகாதார சேவைப் பணிப்பாளரா..?


 - IBC -

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு அனுமதியளித்துள்ள போதிலும் வர்த்தமானியில் அதனை பிரசுரிப்பதற்கு சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தாமதித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போதைய நிலையில், தகனம் செய்வதற்கான முடிவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எடுத்துள்ள அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதற்காக சிரேஷ்ட அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை உள்ளடக்கிய பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான தொழில்நுட்பக் குழு ஒன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு கடந்த வார இறுதியில் இறுதிப்பரிந்துரையை உள்ளடக்கிய அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த அறிக்கையில் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை கடும் நிபந்தனைகளுடன் அடக்கம் செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகின்ற சிங்கள நாளிதழ் ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அந்தப் பரிந்துரையில் உள்ளபடி உடல்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கின்ற விதத்திலான வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற அமர்விலும் கொவிட் உடல்களைப் புதைப்பதற்கு அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார்.

இருப்பினும் பிரதமரின் அறிவிப்பினை திரிபுபடுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், சாதாரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களையே புதைக்க முடியும் என்பதையே பிரதமர் தெரிவித்ததாகவும், கொவிட் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை புதைக்க அனுமதிப்பதாக அவர் அறிவிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து குழப்பநிலை உள்ளதால் நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை அறிவிப்புக்களை, அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற மின்சக்தி அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பிலவிடம் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், கொவிட்டால் உயிரிழந்த உடல்களின் இறுதிக்கிரியை பற்றிய தீர்மானத்தை அரச தலைவரோ அல்லது பிரதமரோ எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த முடிவானது, சுகாதார சேவைகள் பணிப்பாளரினாலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் தெளிவாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே கொவிட் உடல்களை புதைப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு அறிக்கையூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ள போதிலும், அதனை அவர் வர்த்தமானியில் அறிவிக்க இழுத்தடிப்பு செய்து வருகின்றார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Why don´t anyone still ask straightly to Mahinda?

    ReplyDelete
  2. Supposing, just supposing, if the President has made, in any public place, the same statement that the PM made in Parliament on Burial of Covid-19 victims, would Minister Gammanpila dare say that the President CANNOT make the decision on Burial and that such decision has to be made by the Director of Health Services?

    ReplyDelete

Powered by Blogger.