Header Ads



ஒரேயொரு முஸ்லிம் அமைச்சர் என்பதால் எனக்கு ஏசுகிறார்கள், ஜனாஸா அனுமதி வர்த்தமானி மீண்டும் மாற்றப்படாது - அலி சப்ரி


இலங்கை அரசியலில் பல முக்கிய விடயங்கள் பதிவான வாரமாக கடந்த வாரத்தை குறிப்பிடலாம். இம்ரான் கானின் இலங்கை விஜயம்.ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளரின் குற்றச்சாட்டுகள், ஜனாஸாக்களை புதைப்பதற்கான அனுமதி என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இவற்றை பற்றியெல்லாம் பேசுவதற்கு பொருத்தமானவர் நீதி அமைச்சர் அலி சப்ரி என்பதால் அவரை தினகரன் வாரமஞ்சரிக்காக சந்தித்தேன். குறிப்பாக புர்கா தடை பற்றியும் ஜனாஸாக்களை புதைப்பதற்கான அனுமதி தொடர்பாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

கேள்வி: ஜெனீவா மனிதை உரிமை மாநாடு மற்றும் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம்  என்பவற்றின் காரணமாக தான் கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்ளை புதைக்க அனுமதி கிடைத்ததாக பரவலாக பேசப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன?

அதனை ஏற்க முடியாது. நீண்ட  நாட்களாக இந்த பிரச்சினை குறித்துப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவில் இது குறித்து ஆராயப்பட்டு வந்தது. குழுவிலுள்ள சிலர் இதற்கு அனுமதி வழங்குவதற்கு தயாராக இருக்கவில்லை. அந்தக் குழு திரும்பவும் கூடி ஆராய்ந்த பின்னர் எடுத்த முடிவிற்கு அiமையவே புதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தவிர வேறு காரணம் கிடையாது.

கேள்வி: பாகிஸ்தான் பிரதமரின் வருகையின் போது முக்கிய அமைச்சராக ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்கள் இருந்தீர்கள். புதைக்கும் அனுமதி தொடர்பில் அவருடைய விஜயத்தில் பேசப்பட்டதா?

அவரின் விஜயத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் தனியாக நேரடி பேச்சுக்கள் நடந்தன. அங்கு பேசப்பட்டதா என்று தெரியாது. பொதுவாக நடந்த கூட்டங்களில் இந்த விடயம் பேசப்படவில்லை.

கேள்வி:   விகாரை, தேவாலய சட்டம் மாற்றப்படாது ஆனால் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டம் மாற்றப்படும் என்று கூறியிருந்தீர்கள். தனியார் சட்டங்களை மாற்றுவதாக இருந்தால் ஒன்றை மட்டும் அனுமதிப்பது பற்றி விமர்சனம் எழுகிறதே?

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தொடர்பான வக்பு சட்டத்தை போன்றது தான் அது. அதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் ஏனைய தனியார் சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும். சிலர் கூறுவது போன்று அரசியலமைப்பின் 16-2 சரத்தை நீக்கினால் அது சகல  தனியார் சட்டங்களையும்  பாதிக்கும். எமது நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்களின் நலனுக்காகத் தான் முஸ்லிம் தனியார் விவாக,  விவாகரத்துச் சட்டம் மாற்றப்படுகிறது. அது தற்காலத்திற்கு உகந்ததாக இல்லை. சவுதி அரேபியாவில் 18 வயது திருமண வயதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கூட அங்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் பிரதம நீதியரசராக பெண் ஒருவர் இருக்கிறார். சிங்கப்பூர் ஜனாதிபதி முஸ்லிம் பெண்மணி. பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் பிரதமர்களாக  பெண்கள் இருந்தார்கள். எமது நாட்டில் காதி நீதிபதியாக பெண் ஓருவரை நியமிக்க முடியாது என்றால் அதைத் தவிர வேறு பிற்போக்குத்தனம் இருக்க முடியுமா?.  எமது முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் பழைமைவாத போக்குகொண்டது. இதனை மாற்றியாக வேண்டும். காதி நீதிபதிகள் பற்றி   அனேக பெண்கள்,  பெற்றோர்களுக்கு நல்லபிப்பிராயம் கிடையாது. 70 வீதமான காதி நீதிபதிகளின்  நடத்தை பற்றி விமர்சனம் உள்ளது. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. காதி நீதிமன்ற விசாரணைகளுக்கு நேரம், இடம் எதுவும் கிடையாது. வழக்கிற்கு இலக்கம் கூட வழங்கப்படுவதில்லை.

கேள்வி: சில பிக்குமார்களும் அமைப்புகளும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்றுவது பற்றி பெரிதாக பேசி வருகின்றரே..?

பதில். அவர்கள் கூறுவதற்காக நாம் சட்டத்தில் மாற்றம் செய்யவில்லை. தமது அரசியலுக்காக அவர்கள் பேசுகிறார்கள். எமது பெண்களின் நலனுக்காக இதில் கட்டாயம் மாற்றம் செய்தாக வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. இவ்வருடத்திற்குள் மாற்றம் வரும். 50 வருடங்களுக்கு மேலாக மாற்றம் பற்றிப் பேசப்பட்டாலும் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஆட்சியிலும் திருத்தம் பற்றிப் பேசப்பட்டது. யோசனை கூட முன்வைக்கப்பட்டது. முஸ்லிம் தனியார் சட்டத்தினால் இளவயது திருமணம் நடப்பதாக விமர்சிக்கின்றனர்.  18 வயதிற்கு குறைந்த பெண்பிள்ளைகள் தாய்மையடைவது தொடர்பான புள்ளிவிபரங்களில் 80 வீதமானவர்கள் முஸ்லிம் பெண்களல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

கேள்வி: சட்டத்தில் உள்ள குறைபாட்டை விட அதனை அமுல்படுத்துவோரின் குறை பற்றி பரவலாக பேசப்படுகிறதே?

அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சட்டத்தில் தான் அதிகமான குறைபாடுகள் காணப்படுகிறது. 12 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க முடியுமா?  பெண் ஒருவருக்கு காதி நீதிபதியாக இருக்கமுடியாது என்பதை ஏற்க  முடியுமா?  மணப்பெண் கையொப்பமிடத் தேவையில்லை என்பதை  தான் ஏற்கலாமா?  கட்டாயம் மாற்றங்கள் நடக்க வேண்டும். நடைமுறைச் சாத்தியம் கொண்டவையாக இவை மாற்றப்பட வேண்டும்.

கேள்வி: புதிய சட்டத் திருத்தம் எமது நாட்டுக்கு தனித்துவமான ஒன்றாக தயாரிக்கப்படுமா ? அல்லது வேறு நாடுகளில் பின்பற்றப்படும் முறைகளை மாதிரியாக கொண்டு உருவாக்கப்படுமா?

பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைகளை ஆராய்ந்து வருகிறோம். நான் நியமித்துள்ள குழு பரிந்துரை வழங்கினாலும் அமைச்சரவை அனுமதி தேவை. அமைச்சரவை சொல்வதைத் தான் நான் செய்ய வேண்டியுள்ளது. இதனை விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில விடயங்கள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடந்துதான் தீரும். எம்மீது ஒரு விடயம் திணிக்கப்படுவதை விட நாமாக முன்வந்து மாற்றம் செய்வது எமக்கு ஒரளவு சாதகமாக இருக்கும். முஸ்லிம் சமூகம் தாமாக முன்வந்து மாற்றங்களை செய்திருப்பதாக கூறலாம். பகுத்தறிவுடன் நடப்பது உகந்தது.

வேறு ஒரு அமைச்சர் எனது பதவியில் இருந்தாலும் இந்த மாற்றங்கள் நடக்கத்தான் போகிறன்றன.எனக்கு தேவையானதையெல்லாம் செய்து விட முடியாது. முஸ்லிம் சமூகத்தையும் இணைத்து எமது பெண்களின் உரிமைகளையும் பாதுகாத்து   இதனை நிறைவேற்றுவதே எனது நோக்கமாகும்.

கேள்வி: முற்றாக முகத்தை மறைக்கும் புர்காவை  தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக கூறியிருந்தீர்கள். முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்க முயல்வதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே.?

கடந்த அரசில் நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற தெரிவுக் குழு பாதுகாப்புடன் தொடர்புள்ள பலடவிடயங்கள் தொடர்பில் பரிந்துரை செய்திருந்தது. அவற்றை எந்தெந்த அமைச்சுக்களின் ஊடாக முன்னெடுப்பது என ஆராயப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முகத்தை முற்றாக மறைக்கும் புர்காவை தடை செய்வது தொடர்பிலும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்தும் பொறுப்பு நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைத் தான் எனது அமைச்சு செய்கிறது.

கேள்வி: பாதுகாப்புக் காரணத்திற்காக புர்காவை தடை செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் முகத்தை மறைப்பது தற்போதைய கொரோனா நிலைமையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் முரண்பட்டதாக இல்லையா?

தொற்று நோய்  போன்ற நிலைமைகளில் அதற்கு இடமளிப்பது தொடர்பான சில சரத்துகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் தொடர்பிலும் பிரச்சினை இருக்கிறது. அதுவும் தடை செய்யப்படுகிறது.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் அணியும் ஏனைய ஹபாயா,  ஹிஜாப் என்பவற்றுக்கும் பாதிப்பு வரலாம் என்ற அச்சம் காணப்படுகிறதே?

ஹிஜாப், ஹபாயா என்பவற்றுக்கு எந்த தடையும் பாதிப்பும் வராது. அவற்றுக்கு அனுமதி இருக்கும் வகையிலே மாற்றங்கள் செய்யப்படும். முற்றாக முகத்தை மூடுவதற்கு தான் தடை வரும்.

கேள்வி:கறுப்பு நிறத்தில் அணிவது தொடர்பிலும் விமர்சனம் இருக்கிறதே.

 ஒவ்வொருவரினதும் விருப்பத்திற்கு அமைய நிறத்தை முடிவு செய்யலாம். அதில் நாம் தலையிட மாட்டோம். ஆனால் இன்று கறுப்பு ஆடை அணிவதும், முற்றாக முகத்தை மூடும் புர்கா அணிவதும் பெரிதும் குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது. அவர்களாக விரும்பி மாறியுள்ளனர். ஒரு வீதமானவர்களின் செயற்பாட்டினால் முழு சமுகத்திற்கும் பாதிப்பு வர இடமளிக்கக் கூடாது. இம்ரான் கானின் வருகையின் போது அவர் அனைத்து முஸ்லிம் எம்.பிகளையும் சந்தித்தார். எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் 10 வீதமான அடிப்படைவாதிகள் இருப்பார்கள். 10 வீதம் நல்லவர்கள் இருப்பார்கள்.சிறுபான்மையினராக வாழ்வோர் ஒதுங்கி வாழாது இணைந்து வாழ வேண்டும என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

கேள்வி: கொரோனாவால் இறந்தவர்ளைப் புதைக்க அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜெனீவா அமர்வின் பின்னர் மீண்டும் அனுமதி ரத்தாகும் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. அதற்கு வாய்ப்புள்ளதா?

அதில் எந்த உண்மையும் கிடையாது. ஜெனீவா அமர்வை நோக்காக கொண்டு இந்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் மாற்றப்படாது.

கேள்வி: முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளின் போது ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் உங்களை தான் விமர்சிப்பார்கள், ஏசுவார்கள். கொரோனாவால் இறந்தவர்ளை புதைக்க அனுமதி பெற நீங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டீர்கள். ஆனால் இந்த வெற்றிக்கு யார் சொந்தக்காரர் என பரந்தளவில் ஆராயப்படுகிறது. இதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

எமக்கு புதைக்க அனுமதி கிடைக்க வேண்டும் என்பது தான் முக்கியமானதே தவிர அதற்கான பாராட்டும் மலர்மாலைகளும் அல்ல. சமுகத்தின் நலனுக்காக முடிந்தளவு முயற்சி செய்கிறோம். பாராட்டை எதிர்பார்க்கும் கீழ்த்தரமான அரசியல் செய்ய வரவில்லை. அமைச்சரவையில் நான் மாத்திரம் தான் ஒரே முஸ்லிம் அமைச்சர். நான் இருப்பதால் என்னை ஏசுகிறார்கள். அவர்கள் ஏசுவதற்காகவாவது அமைச்சரவையில் இருக்கிறேனே. நான் மாலைகளையும் பாராட்டுகளையும் எதிர்பார்த்து அரசியல் செய்ய வரவில்லை.நாம் நீண்ட காலம் கௌரவமாக இந்த நாட்டில் வாழ்ந்தோம். எதிர்காலத்திலும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து கௌரவமாக வாழ வேண்டும். நடுநிலையாக வாழ வேண்டும். கடந்த 25-30 வருடங்களாக பிரதான சமுகத்தில் இருந்து ஒதுங்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறோம். இந்தியாவில் முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கு எதிர்நோக்க அதுதான் காரணம்.எமது மக்கள் மத்தியில் மனப்பாங்கு ரீதியான மாற்றம் வர வேண்டும். எமது கல்வி, மத்ரஸா முறை, ஆடை விடயம் என பலவற்றில் மாற்றம் தேவை.

கேள்வி: ஜெனீவா மாநாட்டில் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

அவரின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கிறேன். அவை பக்கசார்பானவை. மனிதாபிமான மீட்பு யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளிடமிருந்து தப்பி மக்கள் இராணுவம் உள்ள பகுதிக்குத்தான் வந்தார்கள். அவர்களுக்கு  அரசாங்கத்தினால் பாதிப்பு  ஏற்படுத்தப்பட்டிருந்தால் புலிகள் இருக்கும் பக்கத்திற்கு சென்றிருப்பர். எனவே அவரின் குற்றச்சாட்டு பக்கச்சார்பானது.

கேள்வி: இலங்கைக்கு எதிராக ஆறு நாடுகள் கொண்டுவரும் பிரேரணை இலங்கைக்கு பாதகமாக அமையாதா ?

அந்த பிரேரணை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் துறைசார் நிபுணர்கள் குழு அங்கு சென்றிருக்கிறது. அவர்கள் குறித்த நாடுகளுடன் பேசி தேவையான மாற்றங்களை செய்வார். அந்த பிரேரணை மாற்றமேதுமின்றிச் சமர்ப்பிக்கப்படாது என்று நம்புகிறேன். நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  இதன் முடிவு அமையும். தற்போதைய நிலைமைகள் குறித்த உண்மை நிலை அந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்தப்படும். அவர்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.

ஷம்ஸ் பாஹிம்

3 comments:

  1. bloody singala racist need Muslim to attack, not party

    ReplyDelete
  2. மிக மிக முற்போக்கான கருத்துக்களை அமைச்சர் முன்வைத்திருக்கின்றார். கிணற்றுத்தவளைகள் ஆயிரம் கூறும் தைரியமாக முன்னோக்கிச் செல்லுங்கள். இறைவன் துணை நிற்பான்.

    ReplyDelete

Powered by Blogger.