Header Ads



நுவரெலியா மாநகர சபை, சஜித் பிரேமதாசவிடம் விழப் போகிறதா..?


நுவரெலியா மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் மாநகர சபை முதல்வரும் நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை இரண்டு குழுக்களாக சென்று சந்தித்துள்ளனர். 

இது தொடர்பாக தெரியவருவதாவது, 

கடந்த வாரம் நுவரெலியாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வருகை தந்திருந்தார். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் புதிய அங்கத்தினர்களை கட்சியில் உள்வாங்குவது தொடர்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களையும் சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

இதன்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நுவரெலியாவில் அமைந்துள்ள பௌத்த விகாரைகளுக்கும் சென்று ஆசீர்வாதமும் பெற்றுக் கொண்டார். 

இதன்போது தற்பொழுது நுவரெலியா மாநகர சபையை ஆட்சி செய்து வருகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையிலான ஒரு குழுவினரும், ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி விவேகானந்தன் தலைமையிலான ஒரு குழுவினரும், இரண்டு குழுக்களாக வெவ்வேறு இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

நுவரெலியா மாநகர சபையில் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் மாநகர சபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

ஆனாலும் நுவரெலியா மாநகர சபை முதல்வரும் ஒரு சில உறுப்பினர்களும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடனும் நெருங்கிய உறவுகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த சந்திப்பு பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு பெயர் குறிப்பிட விரும்பாத நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தற்பொழுது நுவரெலியா மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் முதல்வர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்ததுடன் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பல சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்கவுடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார். 

-மலையக நிருபர் தியாகு-

No comments

Powered by Blogger.