Header Ads



நீர்கொழும்பு எதிர்கட்சி, உறுப்பினர்களின் அதிரடி


- இஸ்மதுல் றஹுமான் -

வறிய பாடசாலை மாணவர்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபையினால் இலவசமாக விநியோகிக்கும் அப்பியாசக் கொப்பிகளை விற்பனைக்காக வைத்திருந்த கடை ஒன்றை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை -21- முற்றுகையிட்டனர்.

குறித்த கடையில் அப்பியாசக் கொப்பிகளை குறைந்த விலைக்கு வாங்கிய ஒருவர் அதில் நீர்கொழும்பு மா நகர சபையின் இலச்சினை பதியப்பட்டுள்ளதை அவதானித்து நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக செயல்பட்ட நீர்கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க., ஜே.வி.பி., ஐ.தே.சு.மு. உறுப்பனர்கள் சிலர் ஒன்றிணைந்து நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள குறித்த கடையை முற்றுகையிட்டுள்ளனர்.

அங்கு நீர்கொழும்பு மா நகர சபையின் இலச்சினை பதியப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் ஏராளம் இருந்துள்ளன. மாநகர சபையின் பெயர் பதியப்பட்ட பகுதியின் மேல் நிறம் திட்டப்பட்டிருந்தன.

முற்றுகையிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு மாநகர சபை ஒவ்வொரு வருடமும் வரிய மாணவர்களுக்கு பங்கீடு செய்வதற்காக நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. இது வரி செலுத்துவர் களின் பணம் இதனை உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்து அதன் மூலம் வட்டாரத்தில் உள்ள வரிய குடும்ப மாணவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்கின்றன. இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காத சில எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. நகர சபையிலிருந்து இக்கொப்பிகள் வெளியார் கைக்கு சென்றதற்கு ஆணையாளர் பொறுப்புக் கூறவேண்டும் என்றனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் ஆலோசனையில் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி ஜயனாத் தலைமையிலான பொலிஸ் குழு கடை உரிமையாளரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளும் பொலிஸாரால் கைபற்றப் பட்டுள்ளன.

சந்தேக நபரை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.