Header Ads



பயங்கரவாதி சஹ்ரானின் தலைவர் யார்..? இந்தியாவிற்குச் சென்ற சாரா புலஸ்தினி எங்கே?? ஆசாத் சாலி கேள்வி


(வீரகேசரி)

நரேந்திரமோடி அரசுடன் நெருங்கிச் செயலாற்றும் தற்போதைய அரசாங்கத்தினால் சாரா புலஸ்தினியை நாட்டிற்குக் கொண்டுவரமுடியவில்லை. அவர் வந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிடும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 தற்போது கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரமே நாட்டின் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இவ்விடயத்தில் அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. வலதுகை செய்வது இடது கையிற்கும், இடதுகை செய்வது வலது கையிற்கும் தெரியவில்லை.

இத்தகைய பின்னணியில் துறைமுகத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்தார்கள்.

அக்கடிதத்தில் கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் அதேவேளை மேற்கு முனையத்தை இந்தியாவும் ஜப்பானும் ஒன்றிணைந்து நிர்வகிப்பதற்கு அமைச்சரவைப்பத்திரமொன்றைத் தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இதுகுறித்து அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் வேறு விடயம் கூறப்பட்டிருந்தது. கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறு சதவீதம் இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் கீழ் இருக்கவேண்டும் என்றும் சிறந்த அபிவிருத்தித்திட்டமாக இருந்தால் மேற்கு முனையத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து நிர்வகிக்க முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் இந்தியாவும் ஜப்பானும் ஒன்றிணைந்து இந்தத் துறைமுகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட போது, துறைமுகத்தை எந்தவொரு நாட்டிற்கும் வழங்குவதில்லை என்ற தெளிவான தீர்மானத்தை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டார்.

இதிலிருந்து வெளிப்படுவது என்ன? பிறநாடுகளிடம் துறைமுகத்தை ஒப்படைப்பது ஏற்புடையதல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது தான் தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது.

நாட்டின் தேசிய சொத்துக்களைப் பாதுகாக்கம் நோக்குடைய தேசப்பற்றாளர்கள் என்று தற்போதைய அரசாங்கம் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. எமது நாட்டின் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட வெளிநாட்டிற்கு வழங்கமாட்டோம் என்று கூறிய விமல் வீரவன்சவையும் உதய கம்மன்பிலவையும் இப்போது காணவில்லை.

'தமக்குத் தேவையில்லை' என்று இந்தியாவே ஒதுக்கிவிட்ட நிலையிலேயே அதானி நிறுவனம் இருக்கிறது. அவ்வாறானதொரு நிறுவனத்திற்குக் கொழும்புத்துறைமுக கிழக்கு முனையத்தின் உரிமையினை விலைமனுக்கோரல் அடிப்படையில் வழங்குகின்றார்கள்? நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்வதற்காகவே தாம் ஆட்சிபீடமேற முற்படுவதாகக்கூறிய , தற்போதைய அரசாங்கம் நாட்டுமக்களை முழுமையாக ஏமாற்றிவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை இன்னமும் இந்த அரசாங்கத்தினால் கண்டறியமுடியவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனின், தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரானின் தலைவர் யார்? இத்தகைய தாக்குதலை நடத்துவதற்குத் திட்டமிடும் போது, எந்தவொரு அமைப்பிலும் அதன் தலைவர் தற்கொலைக்குண்டுதாரியாக முற்படமாட்டார்கள்.

இந்தியாவிற்குச் சென்ற சாரா புலஸ்தினி எங்கே? பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகநெருக்கமாகச் செயற்படும் தற்போதைய அரசாங்கத்தினால் சாரா புலஸ்தினியை நாட்டிற்குத் திருப்பியழைத்து வரமுடியவில்லை. அவர் வந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிடும். எனவே பல்வேறு பொய்களைக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது தொடர்ந்தும் அதே பாதையிலேயே செல்கின்றது. 

No comments

Powered by Blogger.