Header Ads



முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகளை, மீள் கட்டமைத்தலுக்கான முன்மொழிவுகள் (முழு விபரம் இணைப்பு)


முஸ்லிம் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வி அளவுக்கு அதிகமாகப் புகட்டப்படுவதால் தான் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாதம் வளர்கிறது என்றும் எனவே ஏனைய சமய மாணவர்களுக்கு நடாத்தப்படுவது போல ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அறநெறி வகுப்புக்கள் நடத்தப்பட்டால் போதுமானது என்றும் ஒரு கருத்து ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் முஸ்லிம் அல்லாத சில மட்டங்களில் நிலவியது.

பாடசாலைகளில் மதம் ஒரு விடயமாகக் கற்பித்தப்படுவதோடு பௌத்த, கிருஸ்தவ, இந்து மதஸ்தளங்கள் குறித்த மதவிவகாரத் திணைக்களத்தின் பாடவிதானத்தின் அடிப்படையில் அரச அனுசரனையோடு ஞாயிறு அறநெறிப்பாடசாலைகளை நடாத்தி வருகின்றன. அவற்றை கண்காணிப்பதும் பொறுப்புக் கூறுவதும் மிக இலகுவானதும் சரளமானதுமான ஒரு பொறிமுறையைக் கொண்டுள்ளது. 

ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஞாயிறு அவதியா வகுப்புகள் மட்டுமல்லாது குர்ஆன் மத்ரசா , மத்தப், ஹிப்ழ் மத்ரசா என்று பல நிறுவன அமைப்பும் பள்ளிவாயல்கள், தனியார் நிறுவனங்கள், ஜம் இய்யதுல் உலமா, அஹதியா இயக்கம் என பன்முகப்பட்ட நிருவாக ஒழுங்குகளும் வெவ்வேறு பாடவிதானங்களும் காணப்படுகின்றன. எனவே பொதுத்தளங்களில், உலவுத்துறை மற்றும் விசாரனை ஆணைக்குழுக்களில் இந்த நிறவனங்கள் பற்றிய அவை நடாத்தும் பாடத்திட்டங்கள் பற்றிய முழுப்பொறுப்பையும் எடுக்க முடியாத நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் காணப்படுகிறது. இத்தகைய பொறுப்புக் கூற முடியாத நிலைமையான நமது நமூகத்தைப் பற்றிய அடிப்படையற்ற சந்தேகங்கள் குற்றச்சாட்டுக்களை நீக்குவதற்கு பதிலாக அவற்றை உறுதிப்படுத்தி விடக் கூடிய ஆபத்தே உள்ளது.

குறிப்பாக 'மத்ரஸா' என்ற சொல் மிகத் தவறாகப் புரியப்பட்டுள்ளமையால் குர்ஆன் மத்ரஸாக்கள், மக்தப், கிதாபு, ஹிஃப்ளு மத்ரஸாக்கள் உள்ளிட்ட மத போதனை செய்யும் அனைத்து நிறுவனங்கள் பற்றியும் தப்பபிப்பிராயங்கள் நிலவுகிறன. மக்தப் என்ற நிறுனம் பற்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் கூட நல்லபிப்பிராயம் இருக்கவில்லை என்பதோடு பல இடங்களில் மற்றவர்களிடமும் இவை சொல்லப்பட்டுள்ளது என்பது ரகசியமல்ல.

இத்தகைய காரணங்களால், தினமும் குர்ஆனைப் படிப்பிக்க வேண்டியதில்லை; குர்ஆன் மத்ரஸாக்கள் அண்மைக் காலமாகவே உருவாகின; அவைதீவிரவாதத்தை அவை பரப்புகின்றன; எனவே, குர்ஆன் மத்ரஸாக்களோ மக்தப்களோ தேவையில்லை; ஞாயிறு அறநெறிப் பாடசாலைகள் மட்டும் போதுமானவை என்ற நிலைப்பாடு தான் ஆரம்பத்தில் காணப்பட்டது. 

ஆனால், அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இத்தகைய நிலைப்பாடுகள் காலவோட்டத்தில் மாறியுள்ளன. 19.02.2020 அன்று பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புத் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை ஓரளவுக்கு முன்னேற்றகரமான நிலைப்பாட்டினை முன்வைத்திருந்தது. 

அந்தவகையில் அறநெறிக் கல்விக்காக ஏனைய சமயத்தவர் ஒரு வாரத்தில் எத்தனை மணித்தியாலயங்களை ஒதுக்கியிருக்கிறார்களோ அதே அளவு நேரத்தை முஸ்லிம் மாணவர்களும் ஒதுக்குவார்கள் என்றும் எனவே அளவுக்கதிகமாக சமயம் போதிக்கபபடுகிறது என்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாததது என விளக்கப்பட்டது. 

எனவே தற்போதைய சூழ்நிலையைக் கவனத்தில் எடுத்து பின்வரும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டது:-

1). ஒரு பிரதேசத்தின் குர்ஆன் மத்ரஸா,மக்தப், ஹிப்ழ் மத்ரஸா, அஹதியா ஆகிய அனைத்து நிறுவனங்களும் அப்பிரதேச ஜும்ஆப்பள்ளியினது கண்காணிப்பில் இயங்குவதோடு அவை முஸ்லிம் அறநெறிப் பாடாலைகள் (මුස්ලිම් දහම් පාසල්) ஆகவே கருதப்படல் வேண்டும். 

2). குர்ஆன் மத்ரஸா,மக்தப்,ஹிப்ழ் மத்ரஸா என்பன கனிஷ்ட அறநெறிப் பாடசாலைகள்(Junior Daham Schools- JDS) என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அஹதிய்யாக்கள் சிரேஷ்ட அறநெறிப் பாடசாலைகள்(Senior Daham Schools- SDS) என்றும் பெயரிடப்படும்.

3). 5-10 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் பள்ளிவாயலில் அல்லது பள்ளிவாயலின் கண்காணிப்பில் நடைபெறும் சிறுவர்களுக்கான கனிஷ்ட அறநெறிப் பாடசாலைகளில்(JDS) குர்ஆனை திறம்பட ஓதக் கற்றுக் கொள்வதோடு அடிப்படையான இஸ்லாமிய ஒழுக்கங்களையும் சட்டதிட்டங்களையும் கற்றுக் கொள்வர்கள். 

(வாரத்துக்கு 4 1/2 அல்லது 5 மணி நேரம்) 

4). தற்போது அஹதிய்யா மாணவர்களது வயதெல்லை 5-16 ஆகும். புதிதாகப் பிரேரிக்கப்படும் முறையில் அது 11-18 வரை என மாற்றப்பட்டுள்ளது. 


5). 11 - 14 வரையான வயது மாணவர்களிற் சிலர் குர்ஆனை மனனம் செய்கிறார்கள். அரபு மத்ரசாக்களில் இயங்கும் ஹிப்ழ் பிரிவுகளில் சுமார் 7000 மாணவர்கள் குர்ஆனை மனனம் செய்து வருகிறார்கள். அதேவேளை தனியான ஹிப்பு மத்ரசாக்களும், பகுதி நேர ஹிப்ழ் மத்ரசாக்களும் காணப்படுகின்றன. எனவே, ஹிப்ழ் மத்ரஸாக்கள் கனிஷ்ட முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகளாக அல்லது அரபுக்கல்லூரிகளின்(கிதாபு மத்ரஸா க்களின்) ஒரு பிரிவாகக் கொள்ளப்படலாம். இது பற்றி சம்பந்தப்பட்ட ஹிப்ழ் மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளது நிர்வாகத்தினர் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்.

6). 11-18 வயது வரையான மாணவ மாணவியர் ஜும்ஆப்பள்ளிகளது கண்காணிப்பின் கீழ் இயங்கும் (அஹதியா) முஸ்லிம் அறநெறிப் பாடசாலை (SDS)களில் வாரத்துக்கு 4 1/2 அல்லது 5 மணி நேர இஸ்லாமிய அறநெறிக் கல்வியினைப் பெறுவர்.

இந்த முறையானது அஹதியா மாணவர்களது தொகையினைக் குறைத்து விடலாம் என்றும் பள்ளிவாயல்களது தலையீட்டால் சில பகுதிகளில் அஹதிய்யா இயங்குவது கடினமாகும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் சகல தரப்பினரும் ஒன்று சேர்ந்து அரபுக் கல்லூரிகளுக்கான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்துள்ளது போல சகல தரப்பினரும் சேர்ந்து முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகளுக்கான ஒரு பாடத்திட்டத்தை தயாரித்துக் கொள்ள முடியும். அப்போது இத்தகைய அச்சங்கள் இல்லாமலாகி விடும்.

தற்பொழுது பதிவு செய்யப்பட்ட மொத்த 585அஹதியாக்களில் சுமார் 305 அஹதியா பாடசாலைகள் மட்டுமே இயங்குகின்றன. இவற்றில் மொத்தம் 66,000 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றார்கள். ஆனால் சகல தரப்பினரும் சேர்ந்து பணியாற்றும் போது ஜும்ஆப்பள்ளிகளது தலைமையில் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அஹதியா இயக்கம் என்பன முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இந்த மாணவர் தொகையை அதிகரிக்கலாம். அந்த வகையில் ஜும்ஆப்பள்ளிகளின் ஆதரவோடு 305 ஆக உள்ள அஹதியாக்களை 800 - 1000 ஆக அதிகரிப்பதற்கு இன்ஷா அல்லாஹ் அதிக காலம் தேவைப்படமாட்டாது.

7). அந்த வகையில் தற்போது இயங்குகின்ற எவரையும் ஒதுக்கி வைக்காமல் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செல்வதே புதிய திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு ஜும்ஆப் பள்ளிவாயலிலும் சகல தரப்பினரையும் உள்ளடக்கியாதாக முஸ்லிம் அறநெறிப் பாடசாலை கண்கானிப்பு குழு அமைக்கப்படுதல் வேண்டும்.

எனவே, ஏனைய சமயத்தவர்கள் விளங்குவதற்கு இலகுவாக நமது அறநெறிப் பாடசாலைகளை மறுசீரமைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. நமக்குள்ளயே நிறைய முரண்பாடுகள் இருக்கும் போது மற்றவர்கள் நம்மைப் புரிந்து கொள்வது கடினம் என்பதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

அந்த வகையில் முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் அனைத்தும் பள்ளிவாசல்களால் கண்காணிக்பட்டு, மாவட்ட பள்ளிவாயல் கமிட்டிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாடலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் நடைபெற வேண்டும்.

08. தேசிய மட்டத்தில் திணைக்களமும் மாவட்ட மட்டத்தில பள்ளிக் கமிட்டிகளும் ஊர் மட்டத்தில் ஜும்ஆப் பள்ளிகளும் பொறுப்புக் கூறக்கூடிய ஒரு தெளிவான கட்டமைப்பை நாம் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். இந்த வகையில் ஒவ்வொரு ஜும்மாப் பள்ளியிலும் தகுதிவாய்ந்த பிரதம இமாம்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படல் வேண்டும். இது தொடர்பாக, இமாம் தரப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி ஒழுங்கு Imam Standardisation and Development Framework - ISDF ஒன்றை அறிமுகப்படுத்த வக்பு சபை தீர்மானித்துள்ளது. 

வல்லவன் அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக!

ஏ.பீ.எம். அஷ்ரப்,

பணிப்பாளர்,

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.

10.01.2021

4 comments:

  1. பேசாமா நாம் எல்லாரும் பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டால் என்ன?

    ReplyDelete
  2. ஒழுங்கமைப்பு மிக மிக அவசியம். ஒழுங்கமைக்கப்படாத எந்தச் செயலும் வெற்றி பெறுவதில்லை.

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் பெயரளவில் இருப்பார்கள்.இஸ்லாம் மெல்ல அழிந்து போகும் .அது சரி நளீமிய்யாவின் நிலை?

    ReplyDelete
  4. Mr rafeek.islam orunaalum Aliyathu.islathai allah paadukaapsn.naamthaan islam ai sariyaha pinpatra wendum.nammsi parthu matravrhal islathai angiiharipRhal.

    ReplyDelete

Powered by Blogger.