January 19, 2021

ஈஸ்டர் தாக்குதலும் கொரோனாவும் - மதரஸாக்கள், ஜாமியாக்களின் நிலையை கவலைக்குரியதாக்கியுள்ளன


- மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -

விசுவாசிகளுக்கான சோதனைகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகச்சிறந்த சாதகமான பின்விளைவுகளையே கொண்டிருக்கும், தமது கடந்த கால கவனயீனங்களை தவறுகளை பிழைகளை மீளாய்விற்கு உற்படுத்தி அவற்றை திருத்திக் கொண்டு இன்னும் பல படிகள் முன்னேற துணிவுடனும் விவேகத்துடனும் செயற்பட வேண்டும்.

அனைத்து அறபு மத்ரஸாக்கள் ஜாமியாக்களையும் முறையாக அறக்கட்டளை அல்லது கம்பனி அல்லது தனியார் கல்வி நிறுவனங்களாக நாம் பதிவு செய்து கொள்தல் கட்டாயமாகும்.

அனைத்து அறபு மத்ரஸாக்கள் ஜாமியாக்களிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஒருமுகப்படுத்தப்பட்ட தேசிய பாடவிதானம் மற்றும் பரீட்சை முறைகள் அறிமுகம் செய்யப்படுதல் வேண்டும் அதற்கான ஒரு தேசிய செயலகம் அமைதல் காலத்தின் தேவையாகும்.

காலத்திற்கு தேவையான கற்கைகள் அறிமுகம் செய்யப்படுதல் கட்டாயமாகும், உ+ம்  இஸ்லாமிய நிதியியல், தனியார் சட்டங்கள், தேசிய சமூக நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு, ஏனைய மதங்கள் சமயங்கள் குறித்த பொது அறிவு, போட்டிப் பரீட்சைகளுக்கானவழிகாட்டல் போன்ற விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும், இவற்றுள் இஸ்லாமிய நிதியியல் உற்பட பல துறைகளுக்கு பிரத்தியேக டிப்லோமா சான்றிதல்களையும் வழங்க முடியும்.

யுகத்தின் கல்வி உயர்கல்வி தொழிற்கல்வி மாற்றங்களுக்கு ஏற்ப கல்வித் தகைமைகள் தொழில் வாண்மை தொழில்நுட்ப நிபுணத்துவங்கள் உத்தரவாதப் படுத்தப்படல் வேண்டும்.

அறபு ஆங்கில சிங்கள தமிழ் மொழிப் புலமைகளில் தேசிய சர்வதேசிய தராதரங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் அவற்றிற்கான பிரத்தியேக டிப்லோமா சான்றிதழ்களை அறிமுகம் செய்து ஊக்கமளிக்கலாம்.

தரம் வாய்ந்த குத்பாக்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்துதல், விரிவுரைகளை, சொற்பொழிவுகளை நிபுணத்துவம் மிக்கவையாக நடாத்துதல், பிரதான மற்றும் சமூக ஊடகங்களை கையாளுதல் என தமது பிரதான பணிகளுக்கான சிறப்புத் தேர்ச்சிகளை வழங்குதல் கட்டாயமாகும்.

மாதமொருமுறையாவது துறைசார் நிபுணர்களை (பழைய மாணவர்களாகவும் இருக்கலாம்) அழைத்து  சமூக தேசிய விவகாரங்கள் குறித்த ஒரு விரிவுரைக்கு ஏற்பாடு செய்தல், மாணவர்களுக்கு கலந்துரையாடும் கருத்துக்களை பரிமாறும் கேள்விகளை கேட்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

பதிப்பு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுடனான மாணவர்களது தொடர்பு அவர்களது பொது அறிவை ஆளுமைகளை வளர்ப்பதில் பாரிய பங்களிப்பினைச் செய்வதால் அதற்குரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களது சீருடை இந்த தேசத்திற்கு பொறுத்தமான சீருடையாக நாளை அவர்கள் பல்துறைகளிலும் தொழில் செய்வதற்கு பொறுத்தமான சீருடையாக இருத்தல் வேண்டும், பிறநாடுகளின் தேசிய அல்லது கலாசார ஆடைகளை கட்டாயப்படுத்துவது தவிர்க்கப் படல் வேண்டும்.

அதிபர் ஆசிரியர்கள் விரிவுரையாளர்களுக்கான தகைமைகள் படிநிலைகள் சம்பளங்கள் கொடுப்பனவுகள் தொழில்சார் உரிமைகள்  சலுகைகள் குறிப்பாக ஓய்வு பெறும் வயதெல்லை என்பன நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.


அவற்றின் வருமான வழிகள் வரவு செலவுகள் நிர்வாக கட்டமைப்புகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும், பூரண வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் நியமங்களுக்கு அமைவாக பட்டயக் கணக்காய்வுகளுக்கு உற்படுத்தப் படல் வேண்டும்.


மத்ரஸாக்கள் ஜாமியாக்களுக்காக வக்ஃப் செய்யப்பட்டுள்ள இடங்கள் நிலங்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அவற்றை விருத்தி செய்வதற்கும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும்.

மேற்படி நிபந்தனைகளுக்கு அமைவாக மாற்றங்களைக் காண முடியாத நிலையில் உள்ள மத்ரஸாக்கள் மூடப்படுவதே சிறந்த முடிவாக இருக்கும்.

என்றாலும் அவ்வாறான நிலையில் உள்ள பல மத்ரஸாக்கள் கூட்டிணைந்து வளங்களை ஒன்று சேர்த்து தராதரம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை கொண்டு செல்ல முடியுமாவென ஆலோசனை மற்றும் ஆய்வினை செய்தல் வேண்டும்.

தற்போதைய நாட்டின் நிலை கருதியும் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் கருதியும் மாணவர்களது ஊர்களில் அல்லது அருகாமையில் இருக்கின்ற மத்ரஸாக்களுக்கு பரஸ்பர இடம் மாறுதல் ஒழுங்கினை கண்டறிதல் வேண்டும்.

இயன்றவரை எதிர்காலத்தில் வளாகங்களில் தங்கிநின்று கற்கும் வதிவிடக் கற்கைளுக்கு பதிலாக வருகைதரும் கற்கைகள் அறிமுகம் செய்யப்படல் வேண்டும்.

வதிவிடக் கற்கைகள் வழங்கும் நிறுவனங்களில் சுற்றுச் சூழலை பாதுகாத்தல், உட்கட்டமைப்புகளின் துப்பரவு பணிகளில் ஈடுபடுதல், காய்கறி பழவகைகளை நடல் பூங்காக்களை பராமரித்தல், சமையல் தேநீர் பானங்கள் தயாரித்தல் பங்கிடல் போன்ற விடயங்களிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

வறிய மாணவர்கள், வசதிகுறைந்த அனாதை மாணவர்களுக்கு மாத்திரமே இலவச கற்கைகள்  வழங்கப்பட வேண்டும்.

நிகழ்நிலை ஆன்லைன் கற்பித்தல் மற்றும் பரீட்சை முறைகள் எந்த அளவில் பெறுபேறுகளை பயன்களை தருகின்றன என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படல் கட்டாயமாகும்.

உங்களது ஆத்மார்த்தமான துஆக்களில் எம்மையும் எமது பெற்றார்கள், உடன்பிறப்புக்கள் மனைவி மக்கள் உற்றார் உறவினர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2 கருத்துரைகள்:

Please you can join with shoora council and work together.
Allah will help our ummah.

Every one can give statment ok.
But same time you should unity with our ACJU SHOORA COUNCIL MUSLIM COUNCIL CIVIL SOCIETY PEOPLE WORK TOGETHER.

நல்ல பயனுள்ள பதிவு...எல்லா மத்ரஸாக்களையும் பெரும் பெரும் கல்வி நிலயங்களுடன் ஒப்பிடாமல் அவை சமூகத்திற்கான மார்க்க அடிப்படை அம்சங்களை போதித்து நன்நடத்தை ஒழுக்கம் இறையச்சம் போன்ற மனிதனை புனிதனாக மாற்றும் இறை போதனை வழங்கும் தீன் பணியாகப்பார்க்கப்படல் வேண்டும்....

Post a comment