January 10, 2021

சத்தியத்தை தேடும் உள்ளங்களுக்கு - மையத்தை எரியூட்டுவதும், இஸ்லாத்தின் நிலைப்பாடும், கம்மன்பிலவின் ஆராய்ச்சியும்


மையத்தை எரியூட்டுவதற்கு குர்ஆனில் தடையுள்ளதா என தேடி அமைச்சர் உதயகம்மன்பில போன்றவர்கள் இன்று ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளார்கள்.

அதாவது உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவிட் 19 பற்றி வழிகாட்டலின் படி இறந்த மனிதனை அடக்கம் செய்யலாம் அல்லது எரியூட்டலாம் என தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டதன் பின்பு அதனடிப்படையில் முஸ்லிம்கள் தங்களது மையத்தின் இறுதி கடமையை நிறைவேற்ற அனுமதி கோரினர். இந்த வழிகாட்டலை முற்றிலும் நிராகரித்து விட்டு குர்ஆனில் மையத்துக்களை எரியூட்டக் கூடாது என்பதற்கு ஆதாரம் உண்டா என ஆதாரம் கேட்கவும் ஆதாரம் தேடவும் முனைந்துள்ளார்கள்.

நல்ல விஷயம். உண்மையை தேடுபவர்களுக்கு குர்ஆன் நிச்சயம் வழிகாட்டும்.

• அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தாம் இரண்டு முறை குர்ஆனை படித்தாகவும் குர்ஆனில் எங்கும் மையத்தை எரியூட்டக்கூடாது என சொல்லப்பட வில்லை என கூறினார்கள். தன்னுடைய வாதத்திற்காக 5:30-31 வசனத்தை காண்பித்தார்.

• எனவே முதலில் அந்த வசனம் என்னசொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

தனதுசகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது (அடக்கம் செய்வது) என்பதை அவனுக்கு காண்பிப்பதற்காக பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதை கண்ணுற்ற) அவன் எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தை போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேன். அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ்செய்திருப்பேன் என்று கூறி கவலைப்படுவோரில் உள்ளவனாக ஆகிவிட்டான்.(5:30-31)

இந்த வசனத்தில் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களின் இரு புதல்வர்களின் வரலாறு சொல்லப்படுகிறது.

கொல்லப்பட்ட தன் சகோதரரின் உடலை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்துக் கொண்டிருந்த போது அல்லாஹ் காகத்தை அனுப்பி குழியை தோன்றி அடக்கம் செய்யும் முறையை கற்றுக் கொடுத்தாக சொல்லப்படுகிறது.

எரியூட்டுவது அல்லது கடலிலலோ ஆற்றிலோ தூக்கி எறிவது நல்லது என்றிருந்தால் அந்த முறையை அல்லாஹ் காட்டி கொடுத்திருப்பான். அடக்கம் செய்வதுதான் சரியானமுறை என்பதினால் தான் காகத்தை அனுப்பி நல்லடக்கம் செய்யும் முறையை காட்டிக் கொடுக்கிறான்.

இதனடிப்படையில் அன்றிலிருந்து இன்றுவரை மனித சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

குர்ஆன் நல்லடக்கம் செய்வது தான் சரியானது என்பதை மட்டும் சொல்லி தருவதால் அதற்கு எதிரன எரியூட்டலை சொல்லித் தரவில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த ஒரு வசனம் அறிவாளிகளுக்கு உண்மையை புரிந்துக் கொள்ள போதுமானது.

அதுபோல் இந்த வசனம் மட்டுமின்றி மேலும் சில வசனங்களும் உண்டு.

• முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள். என குர்ஆன் கூறுகிறது(38:71, 55:14)

மனிதப் படைப்பு மண்ணிலிருந்து உருவானது.இந்த பூமியில் முளைக்கக்கூடிய ஒவ்வொன்றும் மண்ணிலிருந்து உருவாகின்றது. எனவே மனிதன் மரணித்தப்பின்பும் இந்த மண்ணுக்கே திரும்பவேண்டும்.

 மண்ணிலிருந்தே அவன் மறுமைக்காக எழுப்பப்படுவான்

குர்ஆன் இப்படி சொல்கிறது.

"உங்களை அதிலிருந்து படைத்தோம். அதிலேயே உங்களை மீட்டுவோம். அதிலிருலிருந்தே மீண்டும் ஒருமுறை உங்களை வெளியேற்றுவோம்"(20:55)

இன்னுமொரு வசனம் இப்படிச் சொல்கிறது.

அவனை (மனிதனை) மரணிக்கும் செய்து மண்ணறை க்குள் ஆக்குகிறான். (80:21)

இந்த பூமியை உயிர்வாழ்வதற்கும் மரணித்த உடலை அணைத்துக் கொள்வதற்கும் ஏற்றவகையில் அல்லாஹ் படைத்திருக்கிறான்

உயிர்வாழ்பவர்களையும் மரணித்தவர்களையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?(77:25-26)

அதிலேயே (பூமியிலேயே) நீங்கள் வாழ்வீர்கள். அதிலேயே மரணிப்பீர்கள்.அதிலிருந்து (மீண்டும்) எழுப்பப்படுவீர்கள்.(7:25)

மண்ணிலிருந்து பிறந்த மணிதன் மண்ணுக்குள்ளே அடக்கப்படவேண்டும் என்பதை இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.

குர்ஆனை படித்துக் விளங்கிக் கொள்ள சில வழிமுறைகள் உண்டு. அந்த வழிமுறை தெரியாமல் படித்தால் பூரண விளக்கம் கிடைக்காது.

குர்ஆனில் சொல்லப்பட்ட வாக்கியங்களுக்கான விளக்கவுரையை முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்க வேண்டும்.

மேற்குறித்த வசனங்களுக்கு விளக்கவுரையாக மரணித்தவர்களின் மையத்துக்களை குளிப்பாட்டி கபன் செய்து தொழுகை நடாத்தி மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நபி(ஸல்) கூறி அதனை செய்யும் முறையையும் எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அடக்கப்படக்கூடிய குழியை (கப்றை) எவ்வாறு தோன்றவேண்டும் அதன் பரப்பளவு எப்படி இருக்க வேண்டும் குழியை எப்படி மூடவேண்டும் என்பதையும் சொல்லித்தந்தார்கள்.

இது தான் எமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் கிடைத்த சம்பிரதாய வழிமுறை.

ஒரு வாதத்திற்காக குர்ஆனில் எரியூட்டல் பற்றியோ நல்லடக்கம் பற்றியோ இல்லா விட்டாலும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் இருந்தால் அந்த வழிகாட்டலை பின்பற்றுவதுதான் முஸ்லிம்களின் கடமையாகும்.

உயிருடன் இருக்கும் மனிதனையோ மரணித்த மனிதனையோ எரியூட்டுவதை முஹம்மத் (ஸல்) தடைசெய்துள்ளார்கள்.

 யுத்தகளத்தில் கூட எதிரிகளின் சடலங்களை கீறிகிழித்து சல்லடைப்போடுவதைக் கூட தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம்)

நெருப்பினால் அல்லாஹ் மட்டுமே தண்டிக்க முடியும் வேறு எவரும் தண்டிக்கக்கூடாது என முஹம்மத் (ஸல்) அவர்கள் கண்டிப்பாக சொன்னார்கள். (நூல்: புகாரி அபூதாவுத்)

அதாவது நாளை மறுமையில் நரகத்திற்கு செல்லும் மனிதனை நெருப்பினால் தண்டிப்பது அல்லாஹ்வுக்கு மட்டுமுரியது என கூறினார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் எறும்புள்ள புற்றை எரியூட்டியதை கண்ட நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது என தம் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். (நூல்: அபூதாவுத்)

உயிருடன் இருக்கும் மனிதனை கண்ணியப்படுத்துவது போல் இறந்த மனிதனையும் கண்ணியப்படுத்த வேண்டும். அவனது இறுதிப்பயணம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மையத்தை குளிப்பாட்டுவதும் குளிப்பாட்டும் போது வாசனைப் பொருட்களால் கழுவி சுத்தப்படுத்துவதும் பிறகு வெள்ளைத்துணிகளால் கபன் செய்வதும் முக்கியமான அம்சங்களாக வலியுறுத்தி கூறினார்கள்.

மேற்குறித்த கடமைகளை செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படுமாயின் அது குறித்து முஸ்லிம்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டார்கள். குரோனா போன்ற பயங்கரமான நிலையில் மையத்துக்களை குளிப்பாட்டுவது கபன் செய்வது முடியாத காரியம் எனவும் அந்த மையத்தை எவராலும் தொட்டு பார்க்க கூடாது எனவும் சுகாதார வழிமுறைப்படி பெட்டியில் வைத்து அடைக்கப்படவேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO)தெளிவாக உறுதியாக விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்படுத்தியுள்ளது. அந்த வழிகாட்டல் களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்படுகிறார்கள்.

அதே வேளை அந்த பிரேதத்தை எரியூட்டுவது அல்லது நல்லடக்கம் செய்வது விஞ்ஞானப்பூர்வமாக தடை இல்லை எத்தீஙகுமில்லை என்பதையும் உலகசுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

மையத்தை அடக்கம் செய்வதால் மண்ணுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என அனுமதி வழங்கியுள்ளதால் தான் கோவிட்டினால் மரணிக்கும் மையத்துக்களை நல்லடக்கத்திற்காக முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.

நீதி நியாயத்துடன் முஸ்லிம்கள் முன்வைக்கும் கோரிக்கையை அரசாங்கம் மனித நேயத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.

 இம்தியாஸ் யூசுப்

0 கருத்துரைகள்:

Post a comment