January 22, 2021

சுக்ரா முனவ்வரின் சாதனை, உணர்த்தும் பாடம் என்ன..?


- 22-01-2021 வெளியாகியுள்ள நவமணி பத்திரிகையின் தலைப்புச் செய்தி -

சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் பங்குபற்றி 20 லட்சம் ரூபா பண பரிசினையும் பல இலட்சம் உள்ளங்களையும் வெற்றி கொண்ட காலி கட்டுகொடையைச் சேர்ந்த செல்வி சுக்ரா முனவ்வர் இன்று முழு நாடும் பேசப்படும் ஒருவராக இருக்கிறார்.

தன் இலட்சியக் கதைகளை வறுமையின் இரும்புப் பிடி காவு கொள்ளாமல் மடிக்கணினி ஒன்றை வாங்கும் நோக்கில் சிரச லட்சாதிபதி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி வீராங்கனையாகி இருப்பது குறித்து சுக்ராவுக்கும் அவரது பெற்றோருக்கும் நவமணி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

சுக்ரா இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற காலகட்டமானது இலங்கை முஸ்லிம்களை பெரும்பான்மைச் சமூகத்தில் ஒரு பிரிவினர் துவேசக் கண்ணால் பார்க்கும் ஒரு நெருக்கடியான காலகட்டமாகும். முஸ்லிம் சமூகத்தில் ஏதாவது ஒரு சிறு தவறு நடந்தாலும் அதனைத் தூக்கிப் பிடிப்பதற்கும் அவற்றை கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தும், ஒலி-ஒளி பரப்புவதற்கு ஊடகங்கள் செயற்படும் காலகட்டத்திலேயே சுக்ரா பற்றியும் அவரது திறமை பற்றியும் எல்லோரும் பேசுவதற்கு முற்பட்டுள்ளனர்.

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு பல்கோண குறுக்கு விசாரணையில் திக்குமுக்காடும் முஸ்லிம் சமூகத்தின் புறத்தோற்றத்தைச் சரிசெய்வதற்கு சுக்ரா போன்ற பலர் பல்துறைகளிலும் உருவாக்கப்படுதல் அவசியம் என்பதனை சுக்ராவின் இச்சாதனை உணர்த்துகின்றது.

நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தும் ஊடகவியலாளர்  சூரிய சந்தன பண்டாரவைக்கூட அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சுக்ராவின் பொது அறிவும் சிங்களப் புலமையும் அமைந்திருந்தது.

சுக்ரா  இந்த அறிவினைத் தன்வசம் ஆக்கிக் கொள்வதற்கு வகுப்புக் கல்விக்கு மேலாக வாசிப்பு மற்றும் கல்வி வழிகளை பயன்படுத்தியிருக்கிறார்.

முஸ்லிம்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கின்றது. முஸ்லிம்கள் வாசிப்பில் அக்கறை இல்லாது இருக்கிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு மத்தியில் வாசிப்பதன் மூலம் உயர்ந்த இடத்துக்கு வரலாம் என்பதை சுக்ரா முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு காட்டித் தந்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சகல மதங்களையும், கலாசாரங்களையும் கற்றறிந்திருக்க வேண்டும் என்பதனை சுக்ரா உணர்த்தியுள்ளார். 

வறுமை கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதனையும் மாணவி சுக்ரா உணர்த்தியுள்ளார்.

இங்கு மற்றொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அடிக்கடி வெறுப்புப் பிரசார செய்திகள் ஒலி-ஒளி பரப்பி வரும் ஊடகங்களுக்கு மத்தியில் சிரச மிக முன்மாதிரியாக இந்த நிகழ்ச்சிகளை நடாத்தி இருக்கின்றது. அதற்காக நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கும் சிரச நிறுவனத்துக்கும் பாராட்டுக்கள் உரித்தாகின்றன.

1 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் சமய நூல்களையும் பாடதிட்ட நூல்களுக்கும் வெளியே வாசிப்பது குறைவு என்கிற ஒரு தவறான பிம்பம் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் பரவலாக உள்ளமை உண்மைதான். ஆனாலும் இன்று பல்துறைகளிலும் சாதித்துவரும் இளம் முஸ்லிம்கள் அத்தகைய தவறான பிம்பங்களை தகர்த்து வருகின்றனர். அத்தகைய புதிய தலைமுறை முஸ்லிம் சாதனையாளர்கலுள் சுக்ரா பிரபலமானவர். வாழிய சுக்ரா.

Post a comment