Header Ads



நான் இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விலக திஸர பெரேராவும், அவரது மனைவியுமே காரணம் - ஷெஹான் ஜயசூரிய


இலங்கை கிரிக்கெட் வீரர்களான திஸர பெரேரா மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் ஊடாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய ஷெஹான் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.

ஷெஹான் ஜயசூரிய தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, அவர் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகியதாக அந்த அமைப்பு கூறியது.

இந்த நிலையில், ஷெஹான் ஜயசூரியவிற்கும், திஸர பெரேராவிற்கும் இடையில் மோதல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

தாம் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகுவதற்கு திஸர பெரேராவும், அவரது மனைவியுமே காரணம் என ஷெஹான் ஜயசூரிய பகிரங்கமாகவே குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திஸர பெரேரா ஞாயிறன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

2017ஆம் ஆண்டு துபாய் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது ஷெஹான் ஜயசூரிய, அவரது இரண்டாவது மனைவியை அங்கு அழைத்து வந்த தமது அறையில் தங்க வைக்க வேண்டும் என முகாமையாளரிடம் கோரியதாக திஸர பெரேரா கூறுகின்றார்.

ஷெஹான் ஜயசூரிய ஏற்கனவே திருமணமாகி, ஒரு பிள்ளையின் தந்தை என்பதனை கருத்திற் கொண்டு, அணித் தலைவர் என்ற விதத்தில் தாம் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அணியின் ஒழுக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தாம் அந்தத் தீர்மானத்தை எட்டியதாக அவர் கூறியுள்ளார்.

தாம் அன்று அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று அவர்களுக்கு ஹீரோவாக இருந்திருக்கக்கூடும் எனவும் திஸர பெரேரா தெரிவித்துள்ளார்.

திருமணமான ஆணொருவரை, மற்றுமொரு பெண்ணுன் தங்கும் விடுதி அறையில் தங்க வைப்பது தவறான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு யாருடனும் எந்தவித கோபமும் கிடையாது என கூறியுள்ள திஸர பெரேரா, இதுவே உண்மையாக கதை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திஸர பெரோரா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஷெஹான் ஜயசூரிய இலங்கையின் முன்னணி தொலைக்காட்சியான ஹிரு தொலைக்காட்சிக்கு அமெரிக்காவிலிருந்து கருத்து தெரிவித்திருந்தார்.

தாம் துபாயி கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, தமது முதலாவது மனைவியுடன் சட்ட ரீதியாக விவாகரத்தை பெற்றுக்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவாகரத்து விடயம் தொடர்பில் திஸர பெரேரா தமக்கு பல்வேறு இடையூறுகளை விளைவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் திஸர பெரேரா அணித் தலைவராக செயற்படவில்லை என கூறிய அவர், அந்த சுற்றுப் பயணத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ்ஸே அணித் தலைவராக செயற்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் துபாயில் இருக்கும் போது, தமது காதலி தன்னுடன் அறையில் இருந்ததாக அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரிடம் போலி முறைப்பாடுகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, தாம் தமது காதலியுடன் அறையில் இருந்த வேளையில் பிரச்னை ஏற்பட்டதாக திஸர பெரேரா ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

திஸர பெரேரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அவ்வாறான நபர்களே என ஷெஹான் ஜயசூரிய கூறுகின்றார்.

தாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேசிய அணியில் விளையாடியதாகவும், தமக்கு எதிராக இதுவரை எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது திறமையினாலேயே தான் இவ்வாறான நிலைமைக்கு உயர்ந்ததாக அவர் பதிலளித்துள்ளார்.

அதைவிடுத்து, வேறு நபர்களுக்கு உதவி செய்து, தாம் இந்த நிலைமைக்கு வரவில்லை எனவும் ஷெஹான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற சுற்றுப் பயணத்தில் தனது பெயர் அணி வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

இவ்வாறு தமக்கு சந்தர்ப்பம் கிடைக்காததை அடுத்து, தாம் இலங்கையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியிலுள்ள வீரர்கள் ஓய்வூப் பெறும் போது, இதைவிடவும் சிறந்த கதைகள் வெளியாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷெஹான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.