Header Ads



ஒரு இலட்சம் இலவச காணி துண்டுகள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு


இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுகள் வழங்கும் திட்டத்திற்காக ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வின் முதற்கட்டம் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (28) காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரை இடம்பெற்றது. 

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் விவசாயம் மற்றும் பண்ணை அமைக்கும் தொழில் முயற்சிக்காக அதிகளவிலான இளைஞர், யுவதிகள் காணி கோரி விண்ணப்பித்திருந்தனர். 

இவர்களில் ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (28) ஆரம்பமாகியதுடன் நாளை , நாளை மறுதினம் (29, 30) மற்றும் 4 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. 

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்றையதினம் (28) பண்டாரிக்குளம் , தோனிக்கல் , மகாறம்பைக்குளம் , ஆசிக்குளம் , கூமாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 விண்ணப்பதாரிகளுக்கு இவ் நேர்முக தேர்வு இடம்பெற்றிருந்தது. 

-வவுனியா தீபன்-

No comments

Powered by Blogger.