Header Ads



பெரும்பான்மை சார்பு அரசியலமைப்பை தயாரித்துவிட்டு, பாசாங்கு செய்வதே நோக்கம் - விக்னேஸ்வரன்


அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பெரும்பான்மை சமூகத்தினருக்கு சார்பான அரசியல் யாப்பு வரைபை ஏற்கனவே தயாரித்துவிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து இறுதியில், ஏற்கனவே தயாரித்த வரைபை வெளியிடுவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எல்லோரினதும் கருத்துக்களைக் கேட்டறிந்தோம் என உலகத்திற்குப் பறைசாற்ற கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடியதாக இருப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு வகைப்பாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்திற்கொண்டு, அதற்கேற்ப ஒரு அரசியல் யாப்பு வரைவு கொண்டுவரப்படும் என்று தாம் நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற அவச்சொல் தமக்கு வராதிருப்பதற்காகவே தமது கருத்துக்களை முன்வைப்பதாக கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் முன்னர் செய்த தவறுகளை இம்முறையும் இழைக்காமல், புதிய முயற்சியில், நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புகளையும் அரசியல் அபிலாஷகளையும் நிறைவு செய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை கொண்டுவர வேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.