Header Ads



குழந்தையின் ஜனாஸா எரிப்பு - விசாரணையிலிருந்து நீதியரசர் நவாஸ் விலகினார்


21 நாட்களேயான சிசுவை தகனம் செய்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸ் பகிரங்க நீதிமன்றத்தில் இன்று -22- அறிவித்தார்.

தகனம் செய்யப்பட்ட சிசுவின் பெற்றோரால் இந்த அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்காது, 21 நாட்களேயான தமது சிசுவை தகனம் செய்தமையூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி சிசுவின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, L.T.B. தெஹிதெனிய, யசந்த கோத்தாகொட மற்றும் A.H.M.D. நவாஸ் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

COVID தொற்றால் உயிரிழப்போர் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மனுதாரர்களின் அடிப்படை உரிமை மனு குறித்து அடிப்படை ஆட்சேபனையை சமர்ப்பிப்பதாக பிரதிவாதிகள் தரப்பு மன்றுக்கு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மெரின் புள்ளே இந்த அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.

அடிப்படை ஆட்சேபனைகளை இன்று முதல் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.



No comments

Powered by Blogger.