Header Ads



ஜனாஸாவை எரிக்க பொலிஸார் பிடிவாதம் - தான்தோன்றித்தனம் என கண்டித்த கல்முனை மேல் நீதிமண்றம்


- A.L. 
சட்டத்தரணி  ஆஸாத்

கொறோனா வைரஸ் தொற்றிய நிலையில் மரணித்தார் என்ற காரணத்தைக் காட்டி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் சடலத்தினை (ஜனாஸா) எரிக்கக் கோரி பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட கட்டளைக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கொன்று மரணமடைந்தவரின் மகனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த்தது.

 இம்மரணத்தின் மீது சந்தேகம் இருப்பதானால் மரண விசாரணை ஒன்றைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு கல்முனை மேல் நீதிமன்றத்தில் இன்று (06) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இவ்வழக்கை விசாரிப்பதற்கு ஏற்றுக் கொண்டதுடன் பிரதிவாதிகளான கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்டமா அதிபர் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பவும் கட்டளையிட்டிருந்தார்.

அதேவேளை சடலத்தை எரிப்பதற்காக தாம் தொடர்ந்த கல்முனை நீதவான் நீதிமன்ற வழக்கில் வழங்கப்பட்ட கௌரவ நீதவானின் கட்டளை தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட கடிதங்களை சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியது தொடர்பிலும் சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாக பொலிஸார் அவ்வழக்கு மூலம் தலையீடு செய்து நடந்து கொண்ட விதம் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த மேல் நீதிமன்று பொலிஸாருக்கெதிராக வழக்கொன்றினை கொண்டு வர முடியும் என்பதனையும் திறந்த நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இவ்வழக்கில் சட்டத்தரணிகளான முஹைமின் காலித், மனார்தீன், றதீப் அகமட், ஹஸ்ஸான் றுஷ்தி, முபீத், இயாஸ்டீன், றிப்கான் கரீம், மௌபீக், றசீன் ஆகியோர் விண்ணப்பதாரி சார்பில் இன்று தோன்றியிருந்ததோடு இவ்வழக்கு எதிர்வரும் 21ம் திகதியன்று அடுத்த அமர்விற்காக அழைக்கப்படவுள்ளது.

 

No comments

Powered by Blogger.