Header Ads



ஜனாசா எரிப்பும், தலைமைகளின் செயற்றிறன் இன்மையும்..!!


ஆரம்பத்திலே உலக சுகாதார ஸ்தாபனம் அடக்கம் செய்வதால் கொரோனா பரவாது; என்றது. ஆனாலும் ‘இல்லை’, நிலத்தடி நீரால் கொரோனா பரவும் அடக்க முடியாது; என்றார்கள். எரித்தார்கள். ஓர் முஸ்லிம் தலைவர் வாய்திறந்தார். ‘ஐயையோ, காரியத்தைக் கெடுத்துவிட்டாரே!’ என்றார்கள்; அரசுக்கு வெஞ்சாமரை வீசுவோர். முகநூலெல்லாம் உறுமியது. அவரும் அசந்து போனார். வாயை இறுக்கமாக மூடிக்கொண்டார். தலைவர்களின் மௌனவிரதம் தொடர்ந்தது.

நாட்கள் நகர்ந்தன. எரிப்பும் தொடர்ந்தது. இருந்த கொரோனாவுக்காகவும் எரித்தார்கள்; இல்லாத கொரோனாவுக்காகவும் எரித்தார்கள். உலக அரங்கில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் அடக்குவதில் பாதிப்பில்லை; என்றார்கள். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மெதுமெதுவாக பேச ஆரம்பித்தார்கள். அடக்குவதில் தப்பில்லை; என்றார்கள்.

நமது தலைவர்களும் அத்திபூர்த்தாப்போல் பாராளுமன்றில் அவ்வப்போது வாய்திறந்தார்கள். பாராளுமன்றம் பேசுவதற்குத்தானே இருக்கிறது. ஏதோ பேசிவிட்டோம்; என்ற ஆத்ம திருப்தியில் நாட்களைக் கடத்தினார்கள். எரிப்புத் தொடர்ந்தது.

வேறு எந்த ஜனநாயகப் போராட்டத்தைப்பற்றியும் அவர்கள் சிந்திக்கவில்லை. சமூகத்திற்காக உணர்வுபூர்வமாக அரசியல் செய்பவர்களா? இல்லையே! கடமைக்காக காட்டாப்பு காட்டுபவர்கள்தானே! மறுபுறம் அவ்வாறு ஏதாவது போராட்டம் செய்தாலும் “காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள்” என்பார்களே அரசின் ஆதரவாளர்கள்.

சமூகத்தின் அழுத்தம் காரணமாக தலைமைகள் நீதிமன்றம் சென்றார்கள். அதுவும் சாத்தியமாகவில்லை. போதாக்குறைக்கு நீதிமன்றம் சென்றது தவறு என்றும் சொல்ல சிலர் இருந்தார்கள். முஸ்லிம் சமூகம் ரத்தக்கண்ணீர் வடித்தது.

இந்த நிலையில் ‘20 நாள் குழந்தையின் எரிப்பு கல்நெஞ்சையும் கரையவைத்தது. ஏனைய சமூகங்கள் நமக்காக வாய்திறந்தார்கள். பாராளுமன்றத்திலே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓங்கிக் குரல்கொடுத்தார்கள். இப்படியும் பாராளுமன்றில் பேசமுடியுமா? நம்மவர்கள் இப்படிப்பேசவில்லையே! என திகைத்துத்தான் போனார்கள் நம்மக்கள்.

பேசியவர்களுக்காக கண்ணீர்கலந்த நன்றிமலர்களை சமூகவலைத்தளங்களெல்லாம் காணிக்கையாக்கினார்கள். 20 இற்கு கையுயர்த்தி பேசாமடைந்தையாகிப் போனவர்கட்கு அதனைப் பொறுத்தக்கொள்ள முடியவில்லை. அவர்களின் ‘மூளையால் சிந்திக்காத வேறு உறுப்புகளால் சிந்திக்கின்ற’ முகநூல் போராளிகளை வைத்து அவ்வாறு பேசிய தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்தார்கள். 

நாங்களே எங்கள் சமூகத்திற்காக பேசாமல் சோரம்போய் அமைதியாக இருக்கிறோம். நீங்கள் எவ்வாறு பேசுவீர்கள்; என்பது அவர்கள் எண்ணம். அவர்கள் மட்டும் 20 இன் சந்தர்ப்பத்தை சரியாகப் பாவித்திருந்தால் இப்பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.

அடுத்த சமூகங்களின் ஆதரவுடன் சில வெகுஜன போராட்டங்கள் வீறுகொண்டன. வெள்ளைத்துணி கட்டும்போராட்டம்; ஆர்ப்பாட்டம்; என போராட்டம் சூடுபிடித்தது. இணைந்த எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கின. கனத்தைக்குமுன்னால் எதிர்ப்பும் போராட்டத்தில் களம் கண்டார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள். நமது தலைவர்களும் முகங்களைக் காட்டி பேட்டிகொடுத்து ‘நாங்களும் போராடிவிட்டோம்’ என்ற ஆத்ம திருப்தியுடன் ஆறுதல் அடைந்துவிட்டார்கள்

சோரம்போனவர்களோ, சொக்கிப்போய் அவ்வப்போது ‘முடிவு அதோ வரப்போகிறது; கெடுத்துவிடாதீர்கள்; இதோ வரப்போகிறது; கெடுத்துவிடாதீர்கள்; என்று  கதைகளை விடுவதும் வெகுஜன போராட்டத்தின் காரணமாக சிலவேளை உண்மையாக அடக்க அனுமதி கிடைத்துவிட்டால் அதற்கு “உரிமை கோருவது” எவ்வாறு என ஒத்திகை நடாத்துவதுமாக காலம் கடந்தது.

உண்மையில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் நடந்த வெகுஜனப் போராட்டம் அரசை சற்று ஆட்டித்தான் விட்டது. உடனே, உண்மையான துறைசார் நிபுணர்களைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்களும் சாதகமான அறிக்கையை கையளித்தார்கள். விசயம் கசிந்தது.

உடனே! “எல்லோரும் மௌனவிரதம் பூணுங்கள், காரியத்தைக் கெடுத்துவிடாதீர்கள்” என்று அறிவுரை வழங்கப்பட்டது. மொத்த சமூகமும் மௌனவிரத்ததிற்கு நிய்யத்து வைத்து தூங்கப்போப்போனது. இன்னும் கண்விழிக்கவே இல்லை; விரதத்தை துறக்க. சோரம்போனவர்களோ உரிமை கோர ஒத்திகை பார்ப்பதில் பிஸியாக இருந்தார்கள்.

இந்த நிலையில்தான் சுகாதார அமைச்சர் எரிப்புத் தொடரும்; என்றார். பிரதான குழு, உப குழு என்றெல்லாம் பேசினார். அறிக்கையை ஏற்றுக்கொண்டீர்களா? நிராகரித்தீர்களா? ஏற்றுக்கொண்டால் அடக்க அனுமதி தாருங்கள். நிராகரித்தால் அதற்கான விஞ்ஞான காரணத்தை வெளியிடுங்கள்; என்று கேட்க நம்மிடம் தலைமைத்துவமில்லை.

அரசால் நிராகரித்ததாக கூறமுடியாது. கூறினால் விஞ்ஞான காரணம் கூறவேண்டும். உரிய துறைசார் நிபுணர்கள் கூறியதை வேறு துறை நிபுணர்கள் நிராகரித்து எவ்வாறு காரணம் கூறமுடியும்? அவ்வாறு கூறினால் அது அறிவியலுக்கு முரணாக இருக்கும். உள்நாட்டிலேயே நிபுணர்களுக்கு மத்தியில் வாதப்பிரதிவாதங்களுக்கு வழிவகுக்கும். உலக அறிவியல்துறை நகைக்கும்.

இதற்குள் ஒரு கிடுக்குப்பிடி பிடித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கத்தெரியாத நம் தலைமைகள். மறைந்த தலைவர் முழு நேரமும் சமூகத்தைப்பற்றி சிந்தித்தார். அற்காக செயற்பட்டார். புலிகள் முஸ்லிம்களைத் துவம்சம் செய்தபோது எவ்வாறு செயற்பட்டார்; என்பதை நேரடியாக கண்டவர் நாம். தற்போது  நம்மிடம் இருப்பவை கடமைக்காக செயற்படும் தலைமைகளும் சோரம்போகும் தலைமைகளும்.

உண்மையான சமூகத்துடிப்பு இருந்தால் ஒரு நாளாவது இவர்களால் அமைதியாக உறங்கமுடியுமா, ஜனாசாக்கள் தொடர்ந்து எரிக்கப்படும்போது. இரண்டுமாத குழந்தையின் ஜனாசாவையும் எரித்துவிட்டார்கள்.

உண்மையில் இவர்கள் ஆரம்பத்திலேயே அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளைக்கொண்ட ஒரு கட்டமைப்பை நிறுவி எந்தெந்த ஜனநாயக வழியில் இப்போராட்டத்தைச் செய்வது? என சிந்தித்து தொடர்ச்சியாக செயலாற்றி இருக்கவேண்டும். அதற்கு ஏனைய சமூகங்களைச்சேர்ந்த சிவில் அமைப்புகளின் உதவியையும் பெற்றிருக்கவேண்டும்.

துரதிஷ்டவசமாக, அடுத்த சமூகங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் சுயமாக முன்வந்து நமக்காக குரல் கொடுத்தார்கள். இப்போது நாம் குரட்டைவிட்டு தூங்குவது கண்டு அவர்களும் ஓய்ந்துவிட்டார்கள்

முஸ்லிம் தலைமைகளே!

இப்பொழுதாவது உறுதியாகவும் வினைத்திறனாகவும் செயற்பட முன்வாருங்கள். சோரம்போனவர்களை விடுங்கள். ஆகக்குறைந்தது நீங்களாவது சிவில் சமூக அமைப்புகளையும் இணைத்து எந்தவகையில் இப்போராட்டத்தை சடைவின்றி முன்னெடுப்பது; என்பது தொடர்பாக ஆராயுங்கள். ஏனைய சமூக சிவில் அமைப்புகளையும் புத்தி ஜீவிகளையும் அணுகி ஆதரவு கோருங்கள். நிச்சயமாக இன்ஷாஅல்லாஹ் அவர்கள் ஆதரவளிப்பார்கள்.

நமது அடிப்படை உரிமைக்காக இதய சுத்தியுடன் போராட முன்வாருங்கள். இறைவன் வெற்றியைத் தருவான். கடமைக்காக கட்டாப்பு காட்டமுனையாதீர்கள்.

இன்று இந்த உரிமையை நாம் மீளப்பெறவில்லையானால் எதிர்காகலத்தில் சகலவிதமான தொற்றுநோய்களால் இறப்பவர்களையும் எரிக்கத்தான் வேண்டும்; என்ற நிலைப்பாட்டை எடுத்தால் நமது நிலை என்ன? அதன்பின் எந்தவகையான தொற்றுநோய்க்கும் நாம் வைத்தியசாலையை நாட அஞ்சுகின்ற நிலைமை வரும்.

அவ்வாறு செய்வது ஒன்றும் அவர்களுக்கு பெரிய விசயமல்ல. எனவே, தயவுசெய்து அல்லாவுக்காக சமூகத்தின் உரிமையை வென்றுகொடுக்க செயற்பட முன்வாருங்கள்.

உரிமை,உரிமை என மேடைகளில் முழங்கிய ஒரு கூட்டம் சோரம் போய்விட்டது. நீங்களும் கடமைக்காக சிலவற்றைச் செய்துவிட்டு நாளை தேர்தலில் எவ்வாறு சமூகத்தின் உரிமைக்காக போராடினோம்; என்று கூறுவீர்கள். உங்களுக்காக எழுதுபவர்கள் உங்கள் போராட்டம்தான் உலகிலேயே சிறந்தபோராட்டம்; என எழுதுவார்கள். அது தொழில். ஆனால் உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள்.

தலைவர்களே!

கடமைக்காக காட்டாப்பு காட்டியதுபோதும்.

உரிமைக்காக உண்மையாய் போராட முன்வாருங்கள்.!

2 comments:

  1. Pls dont mention them as "leaders", they dont know the real meaning of this...., They think about the leaders as: Just dressing "PORAALI" dress during election time, Just read (not speech) the written words at parliament, Eating well and fighting for the food at parliament, Shaking hands... in another side, asking people to be peace & calm, demand people to read "Qunuth" and fasting, Donating money and blood.... Oh so sad about our community... full of gangs group and full of jealous each other even from so called "MUALLIMS", "Evan settaalum than vairu neranchaa sari ivanugalukku:....

    ReplyDelete

Powered by Blogger.