January 24, 2021

முஸ்லிம் கிராமங்கள் திட்டமிட்டு முடக்கமா..? முஸ்லிம் பகுதிகளில் பிரச்சினை உண்டென்கிறார் ரோஹண


கொரோனா தொற்றின் தாக்கம் குறைவதாக இல்லை. நாடு திறக்கப்பட்டாலும் சில பிரதேசங்கள் இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன.  

கொரோனா தொற்று பரவியதாக ஊர்களை மூடக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக சில பகுதிகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.அதிலும் முஸ்லிம் பிரதேசங்களை வேண்டுமென்று மூடியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அதேவேளை மறுபக்கம் சில முஸ்லிம் ஊர்களில் பீசீஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது.  

குறிப்பாக அட்டுலுகம மற்றும் திஹாரிய ஆகிய பிரதேசங்கள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன.இந்தப்பிரச்சினையின் பின்னணி என்ன?  

இப்பிரதேச மக்கள் ஏன் பீசீஆர் பரிசோதனைகளை நிராகரித்தார்களா? இதன் பின்னணியில் வேறு இன ரீதியான பாகுபாடுகள் காரணமா என்பது பற்றி அலசி ஆராய்ந்ததில் பல அதிர்ச்சிகரமான விடயங்கள் அம்பலமாகின.  

பிசிஆர் பரிசோதனையிலிருந்து பின்வாங்கியமைக்கான காரணங்களாக மக்கள் அட்டுலுகம மற்றும் திஹாரிய மக்கள் கூறிய காரணங்கள் இது தான்.  

 நோய்த்தொற்றை காரணம் காட்டி பாகுபாடு காட்டியமை  

 தொற்றாளர்கள் உடனடியாக அழைத்துச் செல்லப்படவில்லை.  

 பலவந்தமாக பரிசோதனை நடத்தப்பட்டதால் பயம்  

 ஜனாசா எரிப்பு  

 தூர இடங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச்செல்லல்  

 பிசிஆர் பரிசோதனை தொடர்பாக மக்களை ஊடகங்கள் தவறாக வழிநடத்தியதால் ஏற்பட்ட அச்சம் 

அட்டுலுகமவைச் சேர்ந்த பர்ஹான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இதுபற்றி கருத்து கூறியபோது,“இப்போது  சுமார்  50 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். மொத்தமாக இங்கு 17,000 குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு 300 அல்லது 350க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் உள்ளன. எமது ஊரைச் சுற்றியுள்ள பாணந்துறை, பண்டாரகம களுத்துறை மற்றும் மொறட்டுவ போன்ற இடங்களிலும் அழகுசாதன கடைகள், துணிக்கடைகள் போன்றவற்றை எமது மக்கள் வைத்துள்ளனர். அட்டுலுகம மக்கள் கொவிட் நோயாளிகள் என முத்திரை குத்தி அவர்களுக்கு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அப்படியாயின் இந்த நோயை காரணம் காட்டி எம்மை ஓரங்கட்டும் ஒரு நடவடிக்கையே இது என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஒருவருடைய கால் வெட்டுப்பட்டு அவர் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் அட்டுலுகம என்ற காரணத்தினால் யாரும் அவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.  

ஆரம்பத்தில் 300, 400 பரிசோதனைகள் இடம்பெற்றன. அதில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை அழைத்துச்செல்ல உடனே வரவில்லை. குறிப்பாக, ஒருவரை அழைத்துச்செல்ல 10 நாட்களுக்கு பின்னரே வந்தனர். அதுவரை அவர் கிராமத்தின் சகல பகுதிகளுக்கும் சென்று நோய் பரவியிருக்கும். இவ்வாறான பாகுபாடான விடயங்கள் எமது பகுதியில் இடம்பெற்றது.  

ஊரை முடக்கிய இரண்டு தினங்களுக்கு பின்னர் ஏடிஎம் இயந்திரம் வருவதாக கூறிய பின்னர் மக்கள் பணம் எடுக்கச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களை பலவந்தமாக பிடித்து பிசிஆர் பரிசோதனை செய்ததால் மக்கள் பயந்துவிட்டனர். இங்கு ஒரு வழமை உள்ளது. ஊர் மூலமாக அல்லது பள்ளிவாசல் மூலமாக ஒரு விடயத்தை எடுத்துக்கூறினால் மக்கள் கேட்டுக்கொள்வார்கள்.

ஆனால் இவர்களை பயங்கரவாதிகளை போல பிடித்துச்சென்றதால் பயந்துவிட்டார்கள். ஆகவே ஆரம்பத்தில் பின்வாங்கினார்கள். நிலைமையை எடுத்துக்கூறிய பின்னர் மக்கள் பரிசோதனைக்காக சாரை சாரையாக வந்தனர்.  

இப்போது நாமாகவே திட்டமிட்டு இங்குள்ள மக்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்.

அதற்காக ஒரு குழுவை அமைத்து தேவையான விடயங்களை செய்து கொடுக்கின்றோம். மக்கள் தற்போது வீட்டுக்குள் இருக்கின்றனர். எமது ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலக்குவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இவ்வாறான விடயங்களை நடப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது” என்றார்.  

பர்ஹான் அடுக்கடுக்காக முன்வைத்த இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, பொதுச் சுகாதார வைத்திய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவை தொடர்புகொண்டு கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.  

“நாம் யாரையும் பிடித்து பலவந்தமாக பிசிஆர் செய்யவில்லை. கொவிட் தொற்றின் பின்னர் அதன் ஆபத்து தொடர்பாக பகுப்பாய்வு செய்கின்றோம். அதில் ஆபத்து நிறைந்த இடங்களில் உள்ள மக்களை பிசிஆர் பரிசோதனைக்கு வருமாறு அழைக்கின்றோம். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு வருவதில்லை என்ற பிரச்சினையே எமக்குள்ளது.  

தொடர்பு தடமறிதலை பயன்படுத்தி அவர் தொற்றாளருடன் இருந்தாரா, எவ்வளவு நேரம் இருந்தார், எத்தனை பேர் இருந்தனர், முகக்கவசம் அணிந்திருந்தனரா என சகல விடயங்களையும் பகுப்பாய்வு செய்கின்றோம். ஆனால் அவர்கள் பரிசோதனைக்கு ஒத்துழைப்பது குறைவு.  

அம்மக்கள் தமது கிராமத்திற்குள்ளேயே இருப்பதாக கூறுகின்றனர். அட்டுலுகம பிரதேசத்திற்கு மாத்திரம் அவ்வாறு தனியான சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.  

அட்டுலுகம மாத்திரமல்ல, முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பல பகுதிகளில் இப்பிரச்சினை உண்டு. பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, திஹாரிய, காத்தான்குடி ஆகிய பகுதிகளிலும் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என்றார்.  

ஆரம்பத்தில் பிசிஆர் பரிசோதனைக்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவ்வாறு கூறுகின்றார்.  

“கொரோனா பரிசோதனையை ஆரம்பத்தில் தவிர்த்தமை உண்மைதான். அதற்கு காரணம், தொற்றுறுதியான ஒருவரை தனிமைப்படுத்தாமல் அவர்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் சொல்லாமல் விடுகின்றனர்.

இது அர்த்தமற்றதென கருதியே ஆரம்பத்தில் ஒத்துழைக்கவில்லை. லொக்டவுண் என கூறினாலும், எமது ஊருக்குள் மக்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். காரணம் பொலிஸார் எல்லையில் உள்ளனர். இதுவரை சுமார் 12, 13 தடவைகள் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  

எமது ஊரில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், ஒருசிலர் இதனை குழப்பி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ” என்றார்.  

பொதுச் சுகாதார வைத்திய சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இதுதொடர்பாக கேட்டபோது,  

“தொற்றுறுதி உள்ளது என அறிவிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்குள் இருக்கவேண்டியது நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை.

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

0 கருத்துரைகள்:

Post a comment