Header Ads



பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான, முன்னேற்பாடு இன்றுமுதல் ஆரம்பம்


புதிய தவணைக்குரிய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான குறித்த சுகாதார வழிமுறைகள் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 

இதன்படி இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த சுகாதார வழிமுறைகள் குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படவுள்ளன. இன்று முதல் ஆரம்பமாகின்ற பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டங்களை பாடசாலைகள் ஆரம்பமாகும் வரையில் கல்வி அதிகாரிகள் நடத்தவுள்ளனர். 

இந்த புதிய வழிமுறைக்கான சுகாதார பரிந்துரைகள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

இதற்கு முன்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோது பாடசாலையினுள் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டிருந்தாலும், பாடசாலை மாணவர்கள் போக்குவரத்தின்போது சுகாதார வழிமுறைகளை மீறிய சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருந்தது. 

இதன்படி புதிய வேலைத்திட்டத்தில் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தி புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் அதற்குப் பின்னர் சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகளை நடாத்திச் செல்வதற்கும் உரிய பரிந்துரைகள் தற்போது வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்படுகின்ற அடிப்படை வேலைத்திட்டம் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் ஏற்படுமாயின் அவற்றையும் சேர்த்துக் கொண்டு ஒரு உறுதியான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது நோக்கம் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து இவ்வருடத்தின் புதிய கல்வித் தவணையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன்படி மேல் மாகாணத்தில் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு உட்பட எல்லா வகுப்புக்களும்; ஆரம்பமாகவுள்ளன.

No comments

Powered by Blogger.