Header Ads



கிழக்கில் இதுவரை 7 கொரோனா மரணங்கள் - நேற்றும் ஒருவர் உயிரிழப்பு - 1,455 பேருக்கு தொற்று


அம்பாறை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுட்குட்பட்ட  நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், கொரோனா  வைரஸ் தொற்றுக் காரணமாக மேலுமொருவர், நேற்று (06) மாலை மரணமடைந்துள்ளார் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி மத்திய முகாமைச் சேர்ந்த ஆணொருவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை அங்கு  மரணமடைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 08ஆக அதிகரித்துள்ளதோடு, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 06 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை கிழக்கில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி இறுதியாக ஆயைடிவேம்பிலுமாக மொத்தம்  07 கொரோனா மரணங்கள் சம்பவித்திருந்தன.

இந்நிலையில், கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை குறைந்த தொற்றாளர் எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப் பிரிவாக இருந்த நாவிதன்வெளிப் பிரிவில் மேற்படி மரணம் பதிவாகியுள்ளது. நாவிதன்வெளியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 14ஆக மாறியுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை, இன்று (07) 1,455ஆக அதிகரித்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

எம்.எஸ்.எம்.ஹனீபா, சகா


No comments

Powered by Blogger.