Header Ads



117 வருடங்கள் வாழ்ந்த வேலு பாப்பாத்தி: சமைத்த பலாக்காய், வல்லாரைகளை அதிகமாக உண்டு வந்தார்


(என் ஜெயரட்னம்)

களுத்துறை மாவட்டத்தின், தொடங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, குலோடன் தோட்டத்தின், நேஹின்னை, ஹேதரலிய பிரிவில் வசித்துவந்த வேலு பாப்பாத்தி என்ற பெண் கடந்த 29 ஆம் திகதி களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 117 ஆவது வயதில் காலமானார்.

117 ஆண்டுகளும் 7 மாதங்களும் 26 நாட்களும் என்ற நீண்ட வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட வேலு பாப்பாத்தி (பூட்டி)ஆத்தம்மா 1903 ஆம் ஆண்டில் மே மாதம் மூன்றாம் திகதி கண்டி, கடுண்ணாவையில் பிறந்தார். பின்னர் குலோடன் தோட்டத்தில் காவலாளராக சேவை பணி புரிந்த குணசேகர என்பவருடனான திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் மேற்படி இறப்பர் தோட்டத்திலேயே தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இரு பிள்ளைகளின் (மகள் மற்றும் மகன்) தாயான வேலு பாப்பாத்தியின் கணவர் 18 வருடங்களுக்கு முன்னர் மரணித்தார்.

பின்னர் அதே தோட்டக் குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசித்துவரும் நல்லன் தங்கையா (60) மற்றும் சின்னதேவன் மகாலெட்சுமி (62) தம்பதிகளின் மனித நேயமிக்க அரவணைப்பு, பொறுப்பு மற்றும் பாதுகாப்பு காரணமாக இறுதிக் காலகட்டத்தில் கடந்த 41 வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

அனைவரினதும் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவாராக பாப்பாத்தி  ஆத்தாம்மா காணப்பட்டார். அவர் தனது அன்றாட உணவில் சமைத்த பலாக்காய் மற்றும் வல்லாரை என்பவற்றை அதிகமாக சேர்த்து விரும்பி உண்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அயல் வீடுகளில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்களுடன் தினந்தோறும் மாலை நேரங்களில் கதைகள் சொல்வதிலும் பாட்டுப் பாடுவதிலும் மிகவும் சுறுசுறுப்புடன் அவர் தனது காலத்தை கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக நோய்வாய்ப்பட்ட இவர் கடந்த 29 ஆம் திகதி நோய் சற்று அதிகரித்தையடுத்து களுத்துறை நாகொடை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மாலை 7.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரே இலங்கையில் மீக அதிக வயது வரை வாழ்ந்த பெண்ணாவார்.

மேலும் சகவாழ்வு மற்றும் தேகாரோக்கியத்தை பெரிதும் கடைப்பிடித்து, தற்கால பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வாழ்ந்து வந்த வேலு பாப்பாத்தி 2018 ஆம் வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்பம் தொழில் அமைச்சர் தயாகமகே ஆகியோரால் இலங்கையில் வாழ்ந்துவரும் அதி கூடிய வயோதிப அன்னையர்களுக்கான விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

தற்போதைய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் களுத்துறை மாவட்ட அபிவிருத்திச் சபைக் குழுத் தலைவருமான சஞ்சீவ எதிரியன, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவரை நேரில் சென்று நலம் விசாரித்ததுடன் அவருக்கு தனி வீடு ஒன்றையும் நிர்மாணித்து அன்பளிப்புச் செய்தார்.

அவரது இறுதிக்கிரியைகள் இன்று முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தோட்ட பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.