Header Ads



PCR செய்யும் போர்வையில், மயக்க மாத்திரை கொடுத்து கொள்ளையிட்ட கும்பல் - அமைச்சரின் செயலாளர் போலவும் நடிப்பு


( எம்.எப்.எம்.பஸீர்)

பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்து, மஹவ பொலிஸ் பிரிவின் அம்பன்பொல – கெத்தப்பஹூவ பகுதியில் வீடொன்றில் சுமார் மூன்றரை பவுன் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் கும்பல் சுமார் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி இடம்பெற்றிருந்த இந்த கொள்ளை தொடர்பில் மஹவ பொலிசாரும் நிக்கவரெட்டிய சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த பிரிதொரு  சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 34,36 வயதுகளை உடைய மினுவங்கொடை, உடுகம்பொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும், ஜா எல பகுதியைச் சேர்ந்த 60, 37 வயதுகளை உடைய தாயும் மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேக நபர்கள் கைதாகும் போது அவர்களிடம் போதைப் பொருளும் இருந்ததாக குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அதனடிப்படையில் அவர்களுக்கு எதிராக விஷேட தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறினார்.

தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், நடன பயிற்றுநராக சேவை செய்யும் நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றி, அவரிற்கு மயக்க மாத்திரைக் கொடுத்து, 7 தங்க மோதிரங்கள், 3  தங்கச் சங்கிலிகள், தங்க காதணி, கை சங்கிலி, இரு பெண்டன்கள், கை கடிகாரம் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன.  இது தொடர்பில் குறித்த நடனக் கலைஞர் குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ஏ.ஜி.வை.பி. கிரிஷாந்தவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

 ஹொரண பகுதியைச் சேர்ந்த குறித்த நடனக் கலைஞருக்கு, குருணாகல் பகுதியின் பிரபல அமைச்சர் ஒருவரின் செயலர் எனக் கூறி நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், அவர் அமைச்சரின் மகளின் பிறந்தநாள் களியாட்டத்தில்  கலந்துகொள்ள கோரிக்கை முன்வைத்ததாகவும்  அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். குறித்த அமைச்சரின் மகள் என கூறி, யுவதி ஒருவரும் தொலைபேசியில் கதைத்து, தன்னுடன் நடனமாட ஆவலாக உள்ளதாக கூறி அந்த அழைப்பில் கூறியதாகவும், அதன்படியே தானும்  மற்றொருவரும் குருணாகலுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறாயினும் அந்த அமைச்சரின் சகாக்கள் என கூறிக்கொண்ட இருவர், தங்களை குருணாகலையில் வைத்து அழைத்துக்கொண்டு, குளக்கரை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதாகவும், நடனக் கலைஞர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

 அங்கு வைத்து தான் இருமிய நிலையில்,  தற்போதைய கொரோனா நிலைமையின் அடையாளம் இருமல் என தெரிவித்த அவர்கள், இருமல் வராமல் இருக்க எனக் கூறி சில மாத்திரைகளை தந்ததாகவும் அதனை குடித்ததும் தாம் மயக்க நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். எழுந்து பார்த்ததும், தமது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்ததாகவும்,  தமது காற்சட்டைகள் கீழறக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ள நடனக் கலைஞர், ஹோட்டல் அறையில், பொலிஸாரிடம் சென்றால், உடைகளின்றி இருக்கும் புகைப்படங்களை பிரசித்தமாக வெளியிடுவோம் என எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரிடம்  நடனக் கலைஞர் கூறியுள்ளார்.

 இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பிலான  விசாரணைகள்  குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அனில் பிரியந்தவின் உத்தரவுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கிரிஷான்ந்தவின் மேற்பார்வையில்,  உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய குருணாகல் பொலிஸ் பொறுப்பதிகாரி  கபில அதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  புஷ்பலால், பொலிஸ் பரிசோதகர்  சுஜீவ சமந்த உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சி.சி.ரி.வி., காணொளிகள், தொலைபேசி அழைப்புக்கள், தொலைபேசி  கோபுரத் தகவல்கள் உள்ளிட்ட சாட்சிகளை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, கலைஞரின் கைகளில் இருந்த மோதிரங்களை கழற்ற, அதே ஹோட்டலில் எண்ணெய்யும் சந்தேக நபர்களால், பொய்யான காரணம் கூறிபெறப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 இவ்வாறான பின்னணியிலேயே, பொலிஸ் பரிசோதகர் சுஜீவ சமந்தவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை மையப்படுத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கும்பலை கைது செய்து விசாரித்த போதே, பொது சுகாதார பரிசோதகர் வேடத்தில் சென்று மஹவ வீட்டில் முன்னெடுத்த கொள்ளை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 அமைச்சரின் செயலராக நடித்த நபரே, மஹவ சம்பவத்தின் போது பொது சுகாதார பரிசோதகர் உடையில் சென்றுள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது. கைதானவர்களில் அமைச்சரின் மகளாக நடித்த யுவதி 37 வயதான பெண் எனவும் தெரியவந்துள்ளது.

 இந்நிலையில் மினுவாங்கொடையில் ஆடை வர்த்தகர் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து முன்னெடுத்த கொள்ளை,  வைத்தியர் ஒருவருக்கு கஞ்சியில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து முன்னெடுத்த கொள்ளை  உள்ளிட்ட  மயக்க மாத்திரைக் கொடுத்து முன்னெடுத்த 6 சம்பவங்கள் தொடர்பிலான தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

No comments

Powered by Blogger.