Header Ads



ஹோட்டல்களை சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - இராணுவத் தளபதி


(எம்.மனோசித்ரா)

ஹோட்டல்களை சிகிச்சை நிலையங்களாக மாற்றிய பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைபெற விரும்பும் கொவிட் -19 தொற்றாளர்களுக்கு இவ்வாறான ஹோட்டல்களில் சிகிச்சை பெற வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய அவர் மேலும் கூறுகையில், 

சமூகத்தில் சில பிரிவினர் பொதுவான சிகிச்சை முறைகளுக்கு உட்பட தயங்கி, அதற்கு பதிலாக பணம் செலுத்தி தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முற்படுகின்றனர். 

இதன் காரணமாக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை நாடுவதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து மாற்று நடவடிக்கைகளாக நாட்டின் சில வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக முப்படையினரால் தனிமைப்படுத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மையங்களை வைத்தியசாலைகள் அல்லது சிகிச்சை நிலையங்களாக மாற்றியுள்ளோம். 

நாட்டில் 8,000 க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளிகளில், சுமார் 65 சதவீதமானவர்கள் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலேயே உள்ளனர். 

எனினும் சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். அரச வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகள் போன்றவை குறைவாக காணப்படுவதால் அங்கு தங்குவதற்கு அவர்கள் விரும்புவதில்லை.

அதற்கு பதிலாக அவர்கள் பிரத்தியேக அறை வசதிகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். 

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய இது தொடர்பாக நாம் பல்வேறு கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம். 

நானும் சுகாதார அமைச்சரும் கடந்த வாரம் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம். கொழும்பின் முக்கிய தனியார் வைத்தியசாலைகளுடன் பேசினோம். 

அதற்கமைய நவலோக வைத்தியசாலை மற்றும் லங்கா வைத்தியசாலை ஆகியவை இந்த வேலைத்திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. 

அதன்படி, ஒரு ஹோட்டலை சரியான முறையில் வைத்தியசாலையாக மாற்றவும், அதை ஒரு சிகிச்சை நிலையமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக அறிகுறியற்ற நோயாளிகளுக்கு இது ஒரு வைத்தியசாலையாக மாற்றப்படும் என்று நாம் நம்புகின்றோம்.

1 comment:

  1. அருமையான திட்டம் கமிசன்களைத் திட்டமிட்டு அழகாகவு்ம் அமைமதியாகவும் பெற்றுக் கௌ்ளமுடியும். காரியமும் நடைபெற்றதாக இருக்கும். எங்கள் கமிசன்களும் சரியாகக் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.