December 06, 2020

"இந்த அரசியல்வாதிகள் கப்ருகளில் எப்படி, உறங்கப் போகிறார்கள் என நினைக்கும் போது உடம்பு நடுங்குகிறது"


- Raazi Mohamed -

ஒரு முஸ்லிமாக வெட்கித் தலை குனிந்து நிற்கிறேன்.எனது முழு நரம்பு மண்டலமும் அருவருப்பாய் உடம்பில் ஊர்கிறது. அவமானத்தில் கண்கள் பனிக்க நிற்கிறேன்.

ஒரு மானமுள்ள தமிழன் தன் அயலவனுக்காகப் பேசுகிறான். அவன் முறுக்கேறிய முதுகெலும்பில் மானம் சுருக்கென்று ஓடுகிறது.

அவன் எமக்கு மாமனும் அல்ல. மச்சானும் அல்ல. மனிதாபிமானமும் அயலவன் என்ற அரவணைப்பும் மாற்றானுக்காகப் பேசத் தூண்டுகிறது. இதே அயலவன்தான் ஜனாசாவிற்கு வழக்காட வந்தான். இதே அயலவன்தான் பாராளுமன்றத்தில் எமக்காகத் தொண்டை கிழியக் கத்துகிறான்.

மௌனித்து உறங்குபவர்களோ நாம் தெரிவு செய்த தலைவர்கள். ஒரு வார்த்தை கூடப் பேசத் துப்பில்லாதவர்கள். இந்தத் தலைவர்கள்தான் 30 வருடமாகத் தமிழனை எதிரியாய்க் காட்டிக் காட்டி நல்ல தமிழனையும் நாம் வெறுக்குமளவிற்குச் செய்தவர்கள். அவன் இன அழிப்புக்கு சர்வதேசம் வரை சென்ற போது முஸ்லிம்களுக்கு ஒன்றுமில்லை என்று சாட்சி சொல்ல சர்வதேசத்திற்கு போனவர்கள் எமது உலமாக்கள்.

இன்று அவன் உங்களுக்காகப் பேசுகிறான். அவன் படித்துப் படித்துச் சொன்னான் பாராளுமன்றத்தில். 20ம் திருத்தத்திற்கு வாக்களிக்காதீர்கள்.அது எல்லோரையும் அழித்து விடும் என்று.வெற்று அரசியல் லாபத்திற்காக முஸ்லீம்களுக்கும் தமிழனுக்கும் சேர்த்து துரோகம் செய்து கையை உயர்த்தினார்கள் எம்மவர்கள்.

நக்குண்டார்கள் நாவிழந்து நிற்கிறார்கள். ஆகக் குறைந்தது ஜனாஸாவை அடக்க விடுங்கள் வாக்களிக்கிறோம் என்றாவது கேட்டு வாக்களித்திருந்தால் கூட மனம் ஆறியிருக்கும்.

இன்று தலைப்பாகையும் இழந்து,கச்சையும் இழந்து,நாக்கும் இழந்து நிற்கிறார்கள்.எத்தனை பேரின் கண்ணீரைச் சுமக்கப் போகிறார்கள் எனறு தெரியாது. அதோ அந்த மலையில் நின்று பசியால் அழும் ஆட்டுக்காக நான் விசாரிக்கப்படுவேநோ என்று பயப்படுகிறேன்  என்றார் கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு. பொறுப்புக் கூறுதலை அவர்கள் புரிந்த விதம் அப்படி.எம்மவர்களோ வெற்றுச் சுய லாபத்திற்காக மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு நாடகம் ஆடித் திரிகிறார்கள். இந்த அரசியல்வாதிகள் எல்லாம் எப்படிக் கப்ருகளில் உறங்கப் போகிறார்கள் என்று நினைக்கும் போது எனக்கு உடம்பு நடுங்குகிறது.

எரிந்த ஒவ்வொரு மையத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டுமே அவர்கள்.என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது.உன்னைத் தெரிவு செய்தவர்களை ஏன் நட்டாற்றில் விட்டாய்.உன் உரிமையைக் கோர உனக்கு பல சந்தர்ப்பங்களை நான் கொடுத்தேன்.ஏன் தட்டிக் கழித்தாய் என்று இறைவன் கேட்டால் என்ன பதில் சொல்வார்களோ தெரியாது.மரணம் ஒன்று எல்லோருக்கும் போல் அவர்களுக்கும் வரும்.அது பயங்கரமாகச் சூழ்ந்து கொள்ளும்.

ஆனாலும் என்ன! இதை அனைத்தையும் நீங்களும் மறப்பீர்கள்.சரியாக தேர்தலுக்கு முன்னர் உங்கள் கைகளில் சில ஆயிரம் தாள்கள் கிடைக்கும். உங்கள் கரண்ட் பில் கட்டுப்படும்.ஒரு அரசாங்கத் தொழிலுக்காக முக நூலில் அவருக்கு ஆதரவாக எழுதுவீர்கள்.உங்கள் தனிப்பட்ட நலனுக்காக, ஒரு அரிசி மூட்டைக்காக ஐந்து வருடங்களை அடகு வைப்பீர்கள்.பின்னர் ஐந்து வருடங்கள் அழுது தீர்ப்பீர்கள்.பின்னர் ஐந்து வருடங்களை அடகு வைப்பீர்கள்.பின்னர் அழுது தீர்ப்பீர்கள்.

இதுதான் நீங்கள்.உங்களை அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள். ஜனாசாவை எரித்த நெருப்பை தேர்தல்காலத்து ஐந்தாயிரம் அடக்கும் என்று தெரிந்தால்,ஒரு அரிசி மூட்டை அதில் தண்ணீர் அள்ளி ஊற்றும் என்று தெரிந்தால்,

அவன் ஏன் கொள்கைக்காய்க் கையை உயர்த்தப் போகுறான்.பணத்திற்காய் உயர்த்திவிட்டுப் போகிறான்.பணம் தானே அவனையும் உங்களையும் இணைக்கு புள்ளி.

குடிகள் எவ்வழியோ கோனும் அவ்வழி.

பாராளுமன்ற உறுப்பினர் Shanakiyan Rajaputhiran Rasamanickam அவர்களுக்கு சமுகம் சார்பாக எனது நன்றிகள்.

3 கருத்துரைகள்:

If muslim parlimentarians cannot raise voice when the fundanental right to burial is denied, they have to resign immediately. Then it will open the eyes of other countries. Mr Ali shabri, It is shame to be a jutice minister without respecting fundamental right in Sri Lanka.

அருமையான கருத்து முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்லாவின் தண்டனை உண்டு.பாதிக்கப்பட்டவர்களின் சாபம் இவர்களை சும்மாவிடப்போவதில்லை.

They are exemplary for our community because these Muslim MPs never rise their voice in needy times

Post a comment