Header Ads



சமயத் தலைமைத்துவத்தை விட்டு சமூகத்தைத் தூரமாக்கும், வேலைத்திட்டம் மிக மும்முரமாக முன்னெடுக்கப்படுகிறது


- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -

ஒரு சமூகம் தலைநிமிர்ந்து பயணிக்க அதன் சமய, சமூக, அரசியல் தலைமைத்துவம் அவசியமானதும் இன்றியமையாததுமாகும். அதிலும் குறிப்பாக, சமயத் தலைமைத்துவம் என்பது பிரதானமான ஓர் இடத்தை வகிக்கின்றது.

ஏனெனில், சமயத் தலைவர்களே, பொதுமக்களின் அன்றாட வாழ்வுடனும் வணக்க வழிபாடுகளுடனும் ஒன்றரக்கலந்து நிற்பவர்கள்.

ஒரு குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் முதல் அல் குர்ஆனை ஓதிக் கொடுத்தல், ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாக நடாத்துதல், வெள்ளிக்கிழமை புனித உரை, ஜுமுஆத் தொழுகை, பெருநாள் தொழுகை, உரைகள், இஸ்திஸ்கா, திருமண வைபவங்கள், மரண நிகழ்வுகள், மார்க்க பத்வாக்கள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள், சமூக மற்றும் குடும்ப சமாதானம், நல்லிணக்கம் என அவர்களது நெருக்கமும் இறுக்கமும் நீண்டு கொண்டே போகின்றன.

ஒரு சமூகத்தின் தனிநபரோ, குடும்பமோ சமயத் தலைவரின் நெருக்கம் இன்றி வாழமுடியாது எனும் அளவுக்கு அவ்விருசாராரின் தொடர்பும் நெறுக்கமும் பேணப்பட்டு வருகின்றன.

இன்று இப்பிணைப்பினை அறுத்து, சமூகத்தையும் சமயத் தலைமைத்துவத்தையும் வேறுபடுத்தி, தூரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் பொது எதிரிகளினால் மிக விமர்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை அண்மைக்காலமாக தெளிவாகக் காணக்கிடைக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகம் தற்போதைய ஆபத்தான சூழ்;நிலையில் மற்றுமோர் ஆபத்தாகவே இதனை அவதானிக்க முடிகின்றது.

1924 ஆம் ஆண்டு முதல் இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக வழிகாட்டல்களை செய்துவரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம்களின் ஒரு சொத்தாகும். 

சுமார் 90 ஆண்டுகளுக்கு மேலாக அது முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் அணைத்து, இணைத்து பிளவுகள், பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாத்துத் தன்னாலான பணிகளையும் கடமைகளையும் புத்திஜீவிகள், துறைசார்ந்தோர், தனவந்தர்கள் என அனைவருடன் கைகோர்த்து செய்து வருகின்றது.

இதன் தலைமையின் கீழ் இலங்கை முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பதை சில தீய சக்திகள் விரும்பவில்லை. 

எனவே, அதனைப் பற்றிய பொய்களையும் அபாண்டங்களையும் சமூகமயப்படுத்தி தமது வேலைத்திட்டத்தில் முன்னேற்றமடைய முயற்சிக்கின்றனர். இது விடயமாக முஸ்லிம்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத ஏற்றுக்கொள்ள இயலாத பொய்களை அவிழ்த்து விடுவதன் மூலமாக அவர்களது கீழ்த்தரமான முயற்சிகளிள் வெற்றிபெறலாம் என இறங்கியுள்ளனர்.  

எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமை பீடம், மாவட்ட, பிரதேசக் கிளைகள், அங்கத்துவ ஆலிம்கள், இமாம்கள், கதீப்மார்கள், முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள் என அனைவருமாக ஒன்றிணைந்து, மேற்சொல்லப்பட்ட சமூக விரிசலை ஏற்படுத்தும் திட்டத்தில் இருந்து முஸ்லிம் சமூகத்தைக் காத்திட முன்வரவேண்டும். இல்லையேல், மற்றுமோர் ஆபத்தில் சமூகம் தள்ளப்படலாம் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

3 comments:

  1. அதில் உள்ளவர்கள் விடுகின்ற தவறுகளினால் தான் இவ்வாறான போக்கு உருவாகுவதற்கு காரணம்

    ReplyDelete
  2. அவதானம் செலுத்த வேண்டிய கருத்து. பெளத்த துறவிகளை கண்மண் தெரியாமல் பெளத்தர்கள் அங்கீகரிப்பதால் தான் இலங்கையில் சிறுபான்மையோர் வாழ கடினமாக உள்ளது. துறவிகளின் தவறான சிந்தனைகளை விமர்சனம் செய்ய எல்லா மட்டத்திலுள்ள பெளத்தர்களும் அஞ்சுகின்றனர் ஒரு சிலரைத்தவிர. எனவே ஆரோக்கியமான விமர்சனம் அவசியப்படுகிறது. தவறுகளைத்திருத்திக்கொண்டு பலமடைய உதவும். ஆரோக்கியமற்ற அநாகரீகமான விமர்சனங்கள் சபிக்கப்பட வேண்டியதே. ஒவ்வொரு ஜும்ஆத்தொழுகை பிரார்த்தனையிலும் கெடுதியான எண்ணத்தில் செயற்படுவோரின் மனமாற்றத்திற்காகவும், தண்டனைக்காகவும் பிரார்த்திக்கலாம்.

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லிம் சமூகத்தை அதன் சமயத்தலைமைகளிடமிருந்து தூரமாக்குவதற்கான பிரயத்தனங்களைச் செய்வதில் மன்ஸூரியத்தும் மன்ஸூரியத்தின் முரீதீன்கள், முஹிப்பீன்களில் ஒரு சாராரும் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர் என்ற உண்மையை இங்கு குறிப்பிடுவதில் துளியும் காழ்ப்புணர்வோ வேறு நோக்கங்களோ அடியேனின் உள்ளத்தில் இல்லை. சமயத்தலைமைகளை மதிக்காத, மதிக்கத் தெரியாத ஒரு இளம் சமூகம் மன்ஸூரிய மடத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

    மனிதர்கள் என்ற வகையில் உலமாக்களும் சமயத் தலைமைகளும் விடுகின்ற தவறுகள் அழகிய பண்பாட்டுடன் சுற்றிக் காட்டப்படுவதையோ , விமர்சிக்கப்படுவதையோ ஒரு போதும் மறுதலிக்கவில்லை. எனினும் உலமாக்களும் சமயத்தலைமைகளும் தீண்டப்படத் தகாதவர்கள் என்பது போன்ற தோற்றப்படாடுகளை மன்ஸூரிய்யத் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக கவனமாகவும் கனகட்சிதமாகவும் செய்து வருகின்றது. மன்ஸூரிய்யத்தின் சிந்தனையால் கவரப்பட்டுள்ளவர்களில் படித்தவர்கள், பாமரர்கள், வயது முதிர்ந்தவர்கள், இளம் வயதினர் என்ற வித்தியாசமின்றி அதில் ஒரு சாரார் (அனைவரையும் குறிப்பிடவில்லை) சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டு உலமாக்களை அர்த்தமற்ற வகையிலும், உதாசீனம் செய்யும் போக்குடனும் விமர்சனம் செய்து வரும் போக்கை பரவலாகவே காணக்கூடியதாய் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.