Header Ads



உடல்களை பலாத்காரமாக தகனம், செய்வதற்கு உலகத் தமிழர் பேரவை கண்டனம்


(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அனைவரினது சடலங்களையும் கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என்ற இலங்கையின் கொள்கைக்கு உலகத் தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டிருக்கிறது.

அத்தோடு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற இந்த பகுத்தறிவற்றதும் பாரபட்சமானதுமான கொள்கை மீண்டும் நீக்கப்படுவதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு அனைத்து சமூகங்களினதும் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

இது குறித்து உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்ககையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அச்சமூகத்தினரின் மதரீதியான நம்பிக்கையை மீறிச்செயற்படுவதற்கு நிர்பந்திப்பதென்பது மிகவும் மோசமானதும் மனிதாபிமானமற்றதுமான செயலாகும்.

அதேவேளை உயிரிழந்த தமது அன்பிற்குரியவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது மதநம்பிக்கையின் அடிப்படையில் ஏற்புடையதல்ல என்பதனால், சில முஸ்லிம் குடும்பங்கள் சடலங்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட முன்வரவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் கொள்கை எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படைகளும் அற்றதொன்றாகும். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அதனை உலகின் பல நாடுகள் பின்பற்றுகின்றன.

அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகம் வன்முறைக்கும் பாரபட்சத்திற்கும் உட்படுத்தப்பட்டு வந்திருப்பது இரகசியமான விடயமல்ல. முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து எவ்வளவு பாகுபாடு காண்பிக்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு வலுவான தேசியவாதக் கொள்கையாளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தற்போதைய ஆளுந்தரப்பைச் சேர்ந்த சிலர் கருதுகின்றார்கள்.

இந்நிலையில் பாரபட்சம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் படுகுழியில் இலங்கை வீழ்வதைத் தடுக்கவேண்டுமாயின், கொள்கையின் அடிப்படையில் இயங்கும் குடிமக்கள் தமது இன மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைப் புறந்தள்ளி, இதுவிடயத்தில் தமது பங்களிப்பை வழங்கவேண்டியது அவசியமாகும். சமுதாயத்தில் இந்த உன்னதமான மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு பெரும்பான்மையினரின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 comment:

  1. யாரையும் நம்ப முடியாத இக்கட்டான சூழலுக்கு முஸ்லிம் சமூகம் நகர்த்தப்பட்டுள்ளது.
    யார் சூழ்ச்சிக்கார்ர்கள் என்பதை யாஅல்லாஹ் நீயே அறிவாய்!
    வமக்கறு வமகறல்லாஹு வள்ளாஹு ஹைருள் மாக்கிரீன் ( திருக்குர்ஆன்)

    ReplyDelete

Powered by Blogger.