Header Ads



மக்களின் வாழ்க்கைக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்


'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பலாங்கொட இம்புல்பே ராவனாகந்த கிராமத்திற்கு விஜயம் செய்தார்.

இது ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற மூன்றாவது 'கிராமத்துடனான உரையாடல்' நிகழ்ச்சித்திட்டமாகும். முதலாவது செப்டம்பர் மாதம் பதுளை மாவட்டத்தின் ஹல்தம்முல்லவிலும், இரண்டாவது ஒக்டோபர் மாதம் மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம்பெற்றன.

இன்றைய (18) நிகழ்ச்சித்திட்டம் ராவணாகந்த கிராமத்தில் உள்ள தோரவெல்கந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் எல்லையில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு முனையில், பலாங்கொட இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் ராவணாகந்த கிராமம் உள்ளது.

ராவணகந்த கிராமத்திற்கு அருகிலுள்ள கட்டடிகந்த, கல்லெனகந்த மற்றும் தோரவெல்கந்த உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தோரவெல்கந்த பாடசாலைக்குச் சென்று ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

பலாங்கொடை, ஹட்டன் வீதிக்கு உள்வரும் புதுக்காடு சந்தி முதல் 6 கி.மீ. தூரம் கொண்ட வல்கொட வீதி,ராவணாகந்த முதல் கல்லென்கந்த வீதி, தோரவெல்கந்த - வதுகரகந்த வீதி மற்றும் எகொடவலேபொட - வதுகரகந்த வீதி ஆகிய வீதிகள் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் வீதிகளை அடையாளம் கண்டு உடனடியாக அபிவிருத்தி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

இந்த வீதிகளில் சந்திக்கும் ஊராஒய மற்றும் இமோஓய ஊடாக பாலங்களை நிர்மாணிப்பதும் இத்திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும். வீதி நிர்மாணத்துடன், பல சிறு தேயிலை தோட்ட கைத்தொழிலாளர்களுக்கு தேயிலை கொழுந்தினை கொண்டு செல்ல இது உதவும்.

கித்துல் உற்பத்தி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினர். கித்துல் உற்பத்தியினை தடையின்றி தொடர அனுமதிக்குமாறு பொலிஸ், வன பாதுகாப்பு மற்றும் வனசீவராசிகள் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.

கித்துல் உற்பத்தி மற்றும் தேயிலை கொழுந்துகளை பறித்தல் உள்ளிட்ட அன்றாட வாழ்வாதாரங்களுக்காக வன மற்றும் வனசீவராசிகள் சரணாலயங்களுக்குள் செல்லும் கிராம மக்கள் மீது தன்னிச்சையாக வழக்குத் தொடர்வதை நிறுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டார். அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் தெளிவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பின்னவல கிராமிய மருத்துவமனை, மனதுங்ககந்த உள்ளிட்ட பல கிராமப்புற மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், தாதிகள் பற்றாக்குறையை தீர்க்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் பணிப்புரை வழங்கப்பட்டது.

பாங்கியாவத்த குப்பை அகற்றும் நிலையத்தினால் அப்பகுதியில் உள்ள மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பொருத்தமான திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில் பாரிய குறைபாடாக உள்ள மயானம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான காணியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டு, அதை உள்ளூராட்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

தோரவெல்கந்த கல்லூரிக்கு ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூரும் வகையில், ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனத்தினால் இணைய வசதிகளுடன் கூடிய கணினி அமைப்புடன் "ஸ்மார்ட் வகுப்பறை" ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

தோரவெல்கந்த வித்யாலயத்தின் 2 ஆம் ஆண்டு மாணவி ஓஷதி சமுதிகா ஜயவிக்ரம தான் எழுதிய இரண்டு புத்தகங்களை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கினார்.


2 comments:

  1. 100% பாதிப்பில் தான் இருக்கிறோம் சொல்ல வார்த்தைகளே இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.