Header Ads



இலங்கை குடிமக்களான முஸ்லிம்களை வெளிநாட்டில் அடக்குவது, அவர்களை இலங்கையில் வேரிழக்கச் செய்யும் முயற்சியாகும்


கொரோனா நோய்த் தொற்றால் மரணித்த முஸ்லிம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லிம் மக்கள் மீதான இலங்கை அரசாங் கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லிம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த மக்களும் தாங்கள் கடைப்பிடிக்கும் மத நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தங்களின் இறுதிக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பர். அந்த வகையில் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் தங்களின் சடலங்கள் புதைக்கப்படுவதையே மரபாகக் கொண்டுள்ளனர். இஸ்லாம் மதத்தவர்கள் வால் எலும்பு என்று அழைக்கப்படும் முள்ளந்தண்டின் கடைசி எலும்பான குயிலலகு எலும்பில் இருந்தே உயிர்த்தெழல் நிகழ்வதாக நம்புகின்றனர்.

எரித்தால் வாலெலும்பு உடனடியாகவே சாம்பலாகி விடும் என்பதாலேயே அவர்கள் சடலத்தைப் புதைத்து வருகின்றனர்.

இந்து மதத்தவர்கள் மறு பிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். பௌத்தர்களும் மறு பிறப்பில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். கிறிஸ்தவர்கள் இறப்பின் பின்னர் நியாயத் தீர்ப்பின் அடிப்படையிலேயே சொர்க்கமும், நரகமும் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறார்கள். உணர்வுபூர்வமான இந்நம்பிக்கைகளை எவரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை; பண்பாடு சார்ந்த இவ்விடயங்களை அறிவியல் ரீதியாக எவரும் ஆராய்வதில்லை. இவற்றைப் போன்றதே இஸ்லாமி யர்களது உயிர்த்தெழுதல் நம்பிக்கையுமாகும்.

முஸ்லிம் மக்களது சடலங்களை எரியூட்டுவதற்குச் சமூகத்தின் சகல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளபோதும் அரசாங்கம் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. மாறாக, மாலைதீவில் மனிதக் குடியிருப்புகளற்ற தீவொன்றில் புதைப்ப தற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி யுள்ளன. இதுவும் பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். இலங்கைக் குடிமக்களாகத் தங்களை உணரும் முஸ்லிம் மக்களை இலங்கைக்கு வெளியே அடக்கம் செய்வது என்பது அவர்களை இலங்கையில் வேரிழக்கச் செய்யும் முயற்சியின் ஒரு கட்டமே ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைக் கையாள்வது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதைப்பதை தடைசெய்வதாகக் குறிப்பிடவில்லை. எரிப்பதோ புதைப்பதோ எதுவா யினும் மக்களின் நம்பிக்கைகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றே குறிப் பிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் புதைத்தால் வைரஸுகள் நீரால் பரவலடையும் என்று அறிவியலுக்கு ஒவ்வாத காரணத்தைக் காட்டி முஸ்லிம்களின் சடல விவகாரத்தைக் கையாண்டு வருகிறது.

கொரோனாவைச் சாட்டாக வைத்து முஸ்லிம் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையை உடனடியாகவே கைவிட்டு சடலங்களை அவர்களின் விருப்பப்படியே புதைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.